News

ஹக்கிந்தா தீவின் சூழலை அழிக்கும் தீவுவாசிகள்!

By In

ஹக்கிந்தா பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதியின் (EPA) கரையோரத்தை அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் அச்சுறுத்துகின்றன

மகாவலி ஆறு தனது 335 கிலோமீற்றர் தூரப் பயணத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை வளப்படுத்துகிறது. தான் எங்கு பாதுகாப்பற்றவளாக இருந்தாலும், கன்னொறுவ, வரதென்னையில் தான் பாதுகாப்பாக இருப்பதாக அவள் நினைத்தாள். எனினும், தான் வளர்த்து வந்த ஹக்கிந்தா தீவுகளைக் காக்க முடியாமல் இப்போது கண்ணீரில் தவிக்கின்றாள்.

வரதென்ன – ஹக்கிந்த பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதி 59.4 ஹெக்டேயர் பரப்பளவுள்ள கன்னொறுவ, வரதென்னவிலுள்ள ஹக்கிந்த தீவுக்கூட்டத்தை அண்டிய 335 கி.மீ நீளமுள்ள மகாவலி ஆற்றின் ஒரே ஒதுக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியாகும். அந்த இடத்திற்கு தகுதியானதாக இந்த பகுதியில் பல சிறப்புகள் உள்ளன. மகாவலி ஆற்றின் அகலமான மற்றும் குறுகிய இடங்களை உள்ளடக்கிய ஹக்கிந்த EPA, சுமார் இருபது கவர்ச்சிகரமான தீவுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் மிகப்பெரியது சுமார் 12 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த பகுதியில் 23 வகையான பாலூட்டிகள், 77 வகையான பறவையினங்கள், 17 வகையான ஊர்வன மற்றும் 17 வகையான நத்தைகள் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஹக்கிந்தா தீவுக்கூட்டத்தில் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) நடாத்திய ஆய்வில் அங்கு வாழும் 18 வகையான மீன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் கிரீன் லேபியோ (Labeo fisheri) என்ற இனம் இலங்கையின் உள்நாட்டுக்குரிய இனமென்பதுடன், அதனை இந்த இடத்தில் மட்டுமே காண முடியும். இந்த இனம் 2007 இல் IUCN சிவப்பு பட்டியலில் அழிந்து வரும் இனமாக பட்டியலிடப்பட்டது. இந்த பகுதியில் பல உள்நாட்டுக்குரிய மீன் இனங்கள், 16 வகையான தும்பிகள், ஐந்து அழிந்து வரும் நீர்த்தாவர இனங்கள் மற்றும் பல ஊர்வன மற்றும் பறவைகள் உள்ளன.

ஹக்கிந்த ஈரநிலப் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்படாத நிர்மாணங்களையும் தாவரங்கள் அகற்றப்படுவதையும் தடுப்பதற்காக 2017 ஜூன் 17 ஆம் திகதி 2024/6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வரதென்ன-ஹக்கிந்த பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து தீவுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் அழிவு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக குரல்கொடுக்கும் அமைப்புகள் குற்றம் சாட்டுவதுடன், ஹக்கிந்தா EPA இனைப் பாதுகாப்பதற்காக அதிகாரமளிக்கப்பட்ட அரசாங்க நிறுவனங்கள் தங்கள் கடமைகளை புறக்கணித்ததற்கான உதாரணங்களையும் மேற்கோள் காட்டுகின்றன. அதிக பொறுப்பு வகிக்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது, அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அதனுடைய பொறுப்பை புறக்கணிப்பதாக சுற்றாடல் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. ஹக்கிந்தாவை நேசிக்கும் பலரிடையே, அப்பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளதா? ஆக்கிரமிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லை என்றால், என்ன காரணத்திற்காக? என்பன போன்ற பல கேள்விகள் இருந்தன.

இந்தச் சூழலில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையிடம் (CEA) தொடர்புடைய தகவல்களைக் கோருவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இதற்கு பதிலளித்த CEA, அந்த பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களாக அடையாளம் காணப்பட்ட ஆறு தளங்கள் இருப்பதாகத் தெரிவித்தது.

தொடம்வல சேர் குடா ரத்வத்த மாவத்தையில் பொல்கத்த என்ற இடத்தில் மகாவலி ஆற்றின் வலது கரையை வெட்டி அரச செலவில் கொங்கிறீட் கைப்பிடியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை இடித்துத் தள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு CEA கண்டி மாநகர சபைக்கு எழுத்து மூலம் அறிவித்த போதிலும் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆற்றை அண்டிய இரண்டாவது ராஜசிங்க மாவத்தையில் ஆற்றிற்கு அண்மையாக Why Not Garden என்ற அங்கீகரிக்கப்படாத ஹோட்டல் கட்டப்பட்டு வருவதாகவும், தேசிய சுற்றாடல் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காமையால் அதன் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் CEA தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த நிர்மாணத்திற்கு எதிராக கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம் 36491 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடா ரத்வத்தை மாவத்தையில் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்திற்கு மாறாக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு கட்டுமானம் தொடர்பில் கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றில் 36490 எனும் இலக்கத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கு CEA நடவடிக்கை எடுத்துள்ளது.

வரதென்ன – ஹக்கிந்த EPA க்குள் அனுமதிக்கப்படும் எந்தவொரு கட்டுமானமும் ஆற்றங்கரையில் இருந்து ஐந்து மீற்றர் தொலைவில் ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வெளியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று CEA தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் பொதுச் சேவைக்கு நன்கு பரிச்சயமான அவர்களின் வழமையான மெதுவான வேகத்தில் இந்தக் கட்டுப்பாடுகளை மீறி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளுக்கு எதிராக அவர்கள் செயற்பட்டுள்ளனர். காடழிப்பு, நில ஆக்கிரமிப்பு உட்பட பல சட்டவிரோத நடவடிக்கைகள் இந்த குறிப்பிட்ட EPA இல் இருந்தாலும், அவற்றிற்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது 2017 ஆம் ஆண்டில் ஹக்கிந்தா தீவுக்கூட்ட பிரதேசத்தை EPA ஆக பிரகடனப்படுத்துவதற்கு வழிவகுத்த ஐந்து முக்கிய காரணிகளை கோடிட்டுக் காட்டியது. தகவல்களுக்கான கோரிக்கைக்கு இணங்க CEA அப்பகுதியைப் பாதுகாப்பதற்கான அதிகாரங்களையும் அறிமுகப்படுத்தியது. அவர்கள் அளித்த தகவலின்படி, கடந்த 5 ஆண்டுகளாக 6 இடங்களை மட்டுமே அனுமதியற்ற கட்டுமான இடங்களாக அடையாளம் கண்டுள்ளனர். குற்றவாளிகளில் இருவர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

News

வட மாகாண பாடசாலைகளுக்கு மூடுவிழா?

ப.பிறின்சியா டிக்சி தனியொரு நபரின் ஆளுமையை வளர்த்தெடுத்து, அதன்மூலம் சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கல்வியை பாடசாலைகள் வழங்குகின்றன. இதனால்தான் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பாடசாலை கட்டுவது…

By In
News

மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் 10 வருடங்களில் வருமானம் 63 கோடி : செலவு 5876 கோடி!

க.பிரசன்னா பாரிய முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எதிர்பார்த்தளவு அதன்மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள…

By In
News

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் 79 வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன

க.பிரசன்னா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகளை வாபஸ் பெறுதல்,…

By In
News

வாடகை கட்டிடங்களில் இயங்கும் பொலிஸ் நிலையங்கள்

N.M. நஸ்ரான் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *