News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

By In

வீ.பிரியதர்சன்

சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்புகள் இல்லாமையே. பிள்ளைகள் மற்றும் சிறுவர்களுடன் நாம் நேரடி தொடர்புகளைப் பேண வேண்டிய நிலை தற்போது காணப்படுகின்றது. சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கென  சட்டங்கள் காணப்பட்டாலும் தற்போதும் நூறு வீதம் அவற்றை கட்டுப்படுத்த முடியாதவையாகவே காணப்படுகின்றன. கொவிட் 19 தொற்றுக் காலத்திலும் இதே நிலையே நீடித்தது. 

இலங்கையில் அண்மைக்காலமாக சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல்வேறு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகின்றன.  சிறுவர்கள் அவர்களது பெற்றோர்களாலேயே கொலை செய்யப்படல், கைவிட்டுச் செல்லல், பெற்றோர் மற்றும் உறவினர்களால் கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளாகுதல் என தொடர்ச்சியாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் சிறுவர்களைக் கடத்தல், யாசகம் பெறச் செய்தல், தொழிலுக்கமர்த்தல், கல்வியை இடைநிறுத்தல், கொடுமைப்படுத்தல், பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தல், பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தல், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தல், சட்டபூர்வமான பாதுகாவலரிடமிருந்து சிறுவர்களைக் கடத்தல், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தல், பாலியல் உறவுக்கு தொடர்புகளைப் பெறுவதற்கு தூதாக சிறுவர்களைப் பயன்படுத்தல், சிறுவர்களை கவனிக்காமை, விபச்சாரத்துக்கு பயன்படுத்தல் என பல்வேறு வகையான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தரவுகளின் அடிப்படையில் சிறுவர்களுக்கெதிராக 10,497 துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2021 இல் இவ் எண்ணிக்கை 11,187 ஆகக் காணப்பட்டது. இது 2020 இல் 8165 ஆகவும்  2019 இல் 8558 ஆகவும்  2018 இல் 9512 ஆகவும் காணப்பட்டது. இவை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் மாத்திரம் பதிவாகியுள்ள தரவுகளின் எண்ணிக்கையாகும். எனினும்  சமூகத்தில்  இதுபோன்ற சம்பவங்களில் 50 சதவீதமானவை வெளிப்படுத்தப்படாமல் இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

“சிறுவர்கள் புத்திசாலியானவர்கள். அவர்கள்  எந்த சூழ்நிலையையும் தங்களுக்குரியதாக மாற்றிக்கொள்ளக்கூடியவர்கள். இதனால் அவர்கள் அன்பு மற்றும் நம்பிக்கை வைத்தவர்களால் ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்திற்குள்ளாகி கொலையும் செய்யப்படுகின்றார்கள்.  இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான அக்கறை மற்றும் நேரடி தொடர்புகள் இல்லாமையே. பிள்ளைகள் மற்றும் சிறுவர்களுடன் நாம் நேரடி தொடர்புகளையும் அக்கறையையும் அடிக்கடி பேண வேண்டும்.” என்கிறார் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆர்வத்துடன் பரப்புரை செய்பவரும் இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை தடை செய்யும் அமைப்பை நடத்துபவருமான கலாநிதி துஷ் விக்கிரமநாயக்க.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தரவுகளின் படி 2020 ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பில் 2237 முறைப்பாடுகளும் சிறுவர்களுக்கு எதிரான ஏனைய வன்முறைகள் தொடர்பில் 2580 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இதேவேளை, 2021 ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பில் 2741 முறைப்பாடுகளும் சிறுவர்களுக்கு எதிரான ஏனைய வன்முறைகள் தொடர்பில் 3432 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

“சிறு சிறு இடங்களில் இருக்கும் போதும் பொருளாதார பிரச்சினைகள் காணப்படும் போதும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் எமது சமூகத்தில் இடம்பெறுகின்றன. அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில், எமது சமூகத்தைப் பொறுத்தவரையில், வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் சாதாரணமாகிவிட்டன. அழுத்தங்கள் அதிகரிக்கும் போது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மேல் தான் அதனை வெளிப்படுத்துவார்கள். அடிப்பார்கள், தள்ளுவார்கள், திட்டுவார்கள். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் எரிச்சலை வெளிப்படுத்துவார்கள்” என்று கூறுகிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும்  சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் .

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை,  மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு ஆகியவற்றில் தகவல் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கோரப்பட்ட தகவல்களுக்கு அமைய சிறுவர்கள் மீதான அக்கறையின்மை தொடர்பில்  கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட் முடக்க நிலையில் 466 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1535 ஆக அதிகரித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி பலர் மன அழுத்தம் அதிகரிக்கும் நிலையில் மன அழுத்தங்கள், கோபதாபங்களை வீட்டில் இருக்கும் பிள்ளைகள் மீதும் மனைவி மீதும் வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் அந்தந்த குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் வன்முறைகள், துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

“வன்முறை, துஷ்பிரயோகங்களை எவ்வாறு நிறுத்துவதென்பதும் அவற்றை கட்டுப்படுத்துவதென்பதும் இயலாத காரியம். எமது நாட்டில் உள்ள பொறிமுறைகளைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு எந்த வழிகளும் இல்லை. முறைப்பாடுகள் செய்ய வழி இருந்தாலும் பலருக்கு எவ்வாறு முறைப்பாடு செய்வதென்பது கூடத் தெரியாதுள்ளது. முறைப்பாடுகள் செய்தால் கூட முறைப்பாடுகள் சரியாக எடுபடுவதில்லை. முறைப்பாடுகள் செய்யக்கூடிய இடங்களின்  அவசர தொலைபேசி இலக்கங்கள் கூட இயங்காத நிலை காணப்படுகின்றன. அவ்வாறு இயங்கி முறைப்பாடுகள் கிடைத்தாலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை” எனக் கூறுகிறார்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும்  சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன்.

இவ்வாறான நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின் படி சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் 2019 ஆம் ஆண்டில் 8558 ஆகவும் 2020 ஆம் ஆண்டில் 8165 ஆகவும் 2021 ஆம் ஆண்டில் 11187 ஆகவும் அதிகரித்த போக்கையே காட்டி நிற்கின்றது.

இவ்வளவு தொகையான முறைப்பாடுகள் பதிவான போதிலும் பதியப்படாத முறைப்பாடுகள் இதைவிடப் பல மடங்கு இருக்கவே வாய்புகள் உள்ளன. குறிப்பாக முறைப்பாடளிக்கத் தெரியாமை, குடும்ப கௌரவம், அச்சுறுத்தல், பயம், சமூகத்திற்கு முகங்கொடுப்பதிலுள்ள சங்கடங்கள் போன்ற காரணங்களால் ஏராளமான சம்பவங்கள் முறைப்பாடு செய்யப்படாது வெளிவராதிருக்கின்றன.

“ பிள்ளைகளுக்கு நாம் சிறுவர் துஷ்பிரயோக மற்றும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். பிள்ளைகள் குறைந்தது 3 நபர்களிலாவது நம்பிக்கை வைத்துப்பழக வேண்டும். ஏனெனில் அப்போது தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படுத்தப்படும் துஷ்பிரயோகங்களை யாராவது  ஒருவருக்காவது வெளிப்படுத்துவர்.” என்கிறார் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆர்வத்துடன் பரப்புரை செய்பவரும் இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை தடை செய்யும் அமைப்பை நடத்துபவருமான கலாநிதி துஷ் விக்கிரமநாயக்க.

குறிப்பாக 10 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் 2019 ஆம் ஆண்டில் 3634 ஆக பதிவாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டில் 3416 ஆக பதிவாகியிருந்தது. 2021 ஆம் ஆண்டில் 4352 ஆக பதிவாகியிருந்தது. இதைவிட 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களே வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்னர். 2019 ஆம் ஆண்டில் 6768 ஆகவும் 2020 ஆம் ஆண்டில் 6333 ஆகவும் 2021 ஆம் ஆண்டில் 8579 ஆகவும் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

“ ஒரு வன்முறையோ அல்லது துஷ்பிரயோகமோ இடம்பெற்றால் அருகில் வசிப்போர் முறைப்பாடுகளை மேற்கொள்வார்களா? இல்லை என நினைக்கின்றேன். ஏனெனில் தங்களுக்கு பிரச்சினை வருமென்று தெரிந்து முறைப்பாடுகளை மேற்கொள்ளமாட்டார்கள். எத்தனையோ துஷ்பிரயோகச் சம்பவங்கள் சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லும் காலங்களில் தான் வெளிவருகின்றன. பெரும்பாலும் சிறுவர்கள் தங்களது நண்பர்களிடம் கூறி, நண்பர்கள் ஆசிரியர்களிடம் கூறும் போதுதான் அது வெளித் தெரியவரும். பாடசாலைகள் நடைபெறாத கொவிட் போன்ற பெருந்தொற்றுக் காலங்களில் குறிப்பாக முடக்க நிலை நாட்களில் இணையவழி கற்றல் நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன. இதனால் தங்களது நண்பர்களுடன் கதைக்க முடியாதநிலை காணப்படும் அல்லது ஆசிரியருக்கு தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கமுடியாத நிலை இருக்கும்.  இதனால் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஒவ்வொரு பிள்ளைகளையும் தனித்தனியாக உரையாடுவதற்கு ஏதாவதொரு வழிமுறையை கொண்டுவர வேண்டும். இவ்வாறான முடக்க நிலைகளில் பிள்ளைகளுக்கு தனிப்பட்ட ரீதியில் வாரத்தில் ஒருமுறையாவது இணையவழி மூலம் உளவியல் சார்ந்த வகுப்புக்களை முன்னெடுப்பது சிறப்பானது” என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும்  சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்டவை இயங்குகின்றன. இது தொடர்பான அலுவலகங்கள் சகல பிரதேச செயலகப்பிரிவுகளிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அப்பால் பொலிஸ் திணைக்களம் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் விவகாரங்களில் முன்னின்று செயற்படுகிறது. எனவே பாதிக்கப்படும் சிறுவர்கள் அல்லது அவர்களின் நலன் விரும்பிகள் எவ்வித அச்சமும் இன்றி இவற்றை நாடி முறைப்பாடளிக்க முடியும்.

“பங்களாதேஷ், கென்யா, ஜப்பான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள், மற்றும் வன்முறைகள் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து முன்னோக்கிச்சென்றுள்ள நிலையில், எமது நாடான இலங்கை பின்நோக்கியே சென்றுள்ளது” என கலாநிதி துஷ் விக்கிரமநாயக்க சுட்டிக்காட்டுகிறார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 350 வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீதிவான் நீதிமன்றங்களில் சுமார் 350 – 400 வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர பாடசாலைகளில் மாணவர்கள் மீதான துன்புறுத்தல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை என்பன இணைந்து ‘பாடசாலை மாணவர் பாதுகாப்பு குழு’ செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.

“நாம் எமது பொறிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும். எமது நாட்டில் உள்ள பொறிமுறைகள் அனைத்தும் பலவீனமான பொறிமுறைகள்.  பொறுப்புவாய்ந்த இடங்களில் கடமையாற்றுபவர்கள் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை வழங்க முன்வருவதில்லை. எம்மைப் பொறுத்தவரையில் சரியானதொரு பொறிமுறையை அமைத்துக்கொள்வது முக்கியமானது. அத்துடன் அங்கு கடமையாற்றுபவர்களுக்கு தொடர்புபட்ட துறையுடன் சரியான தெளிவு மற்றும் அறிவு இருக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பான விழிப்புணர்வும் தேவை.” என்கிறார் அம்பிகா சற்குணநாதன்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் வருடாந்தம் சுமார் 8000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. அதாவது மாதத்திற்கு 600 – 800 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. சிறுவர்களை கொடூரமாக தாக்குதல் மற்றும் காயப்படுத்தல் என்பவை தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகின்றன. பாலியல் துஷ்பிரயோகம் அடுத்த கட்டத்தில் காணப்படுகிறது.

“இணையவழி வகுப்புக்கள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களிலேயே எத்தனையோ துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக நாம் செய்திகள் வாயிலாக அறிந்துள்ளோம்.  கைத்தொலைபேசிகளை கற்றலுக்காக பிள்ளைகளுக்கு வழங்கும் போது அவர்களை அறியாமலேயே அவர்கள் தொடர்பான தரவுகள் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை எடுத்து அவற்றை விற்கும் நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன. இதற்கு என்று ஒரு குழுவே இயங்குகின்றது. இவ்வாறான விடயங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்று ஆராய வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு இவ்வாறான விடயங்கள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அம்பிகா சற்குணநாதன் கூறுகிறார்.

தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட மேற்படி தரவுகள் நாட்டில் சிறுவர்களின் உரிமைகள் குறித்தும் அவர்களது பாதுகாப்பு குறித்தும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. இதற்கான ஏலவே இருக்கும் சிறுவர் பாதுகாப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதுடன் நவீன காலத்திற்கேற்றவாறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய பாதுகாப்பு பொறிமுறைகளை மேலும் அறிமுகப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.  

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *