Uncategorized

இலங்கையில் தகவலுரிமை நடப்பாட்சியின் நான்கு வருட நிறைவை முன்னிட்டு இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் விடுக்கப்படுகின்ற அறிக்கை

By In

பெப்ரவரி 19, 2021

2021 பெப்ரவரி 3 ஆம் திகதியுடன் இலங்கையின் தகவலுக்கான உரிமைச் சட்டம் செயற்பட ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவானது பகிரங்க அதிகார சபைகள், சமுதாயங்கள் மற்றும் பிரஜைகளுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ஆதரித்து வாதாடும் நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபட்டது. இது நுவரெலிய மாவட்ட செயலாளர், திரு. எம்.பி.ஆர். புஷ்பகுமார, பிரதேச செயலக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் பங்குபற்றுகையுடன் 2021 ஜனவரி 21 ஆம் திகதி நுவரெலியாவில் இடம்பெற்ற மாகாணக் கலந்துரையாடலையும் உள்ளடக்குகின்றது. 

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவானது களனிப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றிலுள்ள சிரேஷ்ட கல்வியியலாளர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுடன் முறையே 2021 பெப்ரவரி 9ஆம் திகதி மற்றும் 16ஆம் திகதிகளில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது என்பதுடன் இக்கலந்துரையாடல்களில் கடந்த பல ஆண்டுகளில் அடையப்பெற்ற பயன்கள் மற்றும் சவால்கள் பற்றிய மேலதிக மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டது. பிந்தைய நிகழ்ச்சியில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் ஒத்துழைப்பு குறிப்பாக குறித்துக் கொள்ளப்பட்டது. 2021 பெப்ரவரி 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் மாத்தறையில் இடம்பெற்ற, தகவலுக்கான உரிமைச் சட்டத்தினை வினைத்திறனாக பயன்படுத்தியுள்ள சமுதாய அடிப்படையிலான அமைப்புக்கள் மற்றும் மாத்தறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட பகிரங்க அலுவலர்கள் ஆகியோருடனான  இரண்டு நாள் மாகாணக் கலந்துரையாடலையும் இச்செயற்பாடுகள் உள்ளடக்கும். 

அம்பாறை மாவட்டத்திலுள்ள பானம என்ற இடத்திலும், நுவரெலிய மாவட்டத்திலுள்ள அம்பகமுவ என்ற இடத்திலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சூரியவேவா என்ற இடத்திலும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சியிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலுள்ள கருவலகஸ்வேவா என்ற இடத்திலும், பதுளை மாவட்டத்திலுள்ள மஹியங்கன மற்றும் பண்டாரவளை ஆகிய இடங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் என்ற இடத்திலும், கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிடிய என்ற இடத்திலும் மற்றும் காலி மாவட்டத்திலுள்ள பத்தேகம என்ற இடத்திலும் ஆணைக்குழு முன்பதாக கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது. இத்தகைய ஆதரித்து வாதாடுகின்ற செயற்பாடுகளை அடுத்துவரும் ஆறு மாதக் காலப்பகுதிக்கு தொடர்வதற்கு ஆணைக்குழு எண்ணியுள்ளது என்பதுடன் மாவட்ட செயலகங்களுக்கும், குறித்த பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கும், பகிரங்க அதிகார சபைகளின் தலைவர்களுக்கும், சமுதாய அடிப்படையிலான அமைப்புக்களுக்கும் மற்றும் இலங்கையில் கொவிட்-19 இன் பரவுகையினால் ஏற்பட்ட பல்வேறு தடைகளைக் கடந்து இந்நிகழ்ச்சிக்கு ஊக்கத்துடன் ஆதரவளித்த பொதுநல உணர்வுடைய பிரஜைகளுக்கும் ஆணைக்குழு தனது ஆழமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது. 

தகவலுரிமை நடப்பாட்சியின் பயன்கள் மற்றும் சவால்களை மதிப்பிடுதல், சுகாதார கேடுகளுக்கான அபாயத்தினைக் குறைத்துக் கொள்ளும்பொருட்டு கிரம அடிப்படையில் ஆணைக்குழுவின் மாகாண மேன்முறையீட்டு அமர்வுகளை நடத்துதல் மற்றும் இணையவழி மேன்முறையீட்டு அமர்வுகளை நடத்துதல் தொடர்பாக ஆராய்தல் உள்ளடங்கலாக நாட்டிலுள்ள உலகளாவிய நோய்த்தொற்றின் தொடர்ச்சித்தன்மை காரணமாக தகவலுக்கான உரிமைச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ளத் தடைகளைக் குறைத்தல் என்பன தொடர்பில் இக்கலந்துரைடயால்கள் முன்னெடுக்கப்பட்டன.  

வேண்டுமென்றே தாமதத்தினை ஏற்படுத்தியமைக்கு மற்றும் சட்டத்தின் கீழுள்ள உத்தியோகபூர்வ கடமையினைப் புறக்கணித்தமைக்கு பொறுப்பானவர்கள் என மதிப்பிடப்பட்ட பகிரங்க அலுவலர்களுக்கு, தற்போது வழக்குத் தொடரப்படுமென்பதற்கான  எச்சரிக்கை அறிவித்தல்கள் ஆணைக்குழுவின் முத்திரையின்கீழ் அனுப்பப்பட்டு வருவதாக கூறிய ஆணைக்குழு, இலங்கையின் தகவலுக்கான உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களை வழங்குவதில் பகிரங்க அதிகார சபைகளின் தரப்பில் காணப்படுகின்ற தாமதங்கள் தொடர்பான தனது அதிகரித்த கரிசனைகளை வெளிப்படுத்தியது. இது தொடர்பிலான எண்ணிக்கை குறைவானதாகக் காணப்பட்டபோதிலும், தகவலுக்கான உரிமைச் சட்டம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுமாயின் அல்லது மீறப்படுமாயின், குற்றவியல் சட்ட செயன்முறையினைத் தொடர்வதற்கானத் தனது நியதிச்சட்ட அதிகாரத்தினைப் பயன்படுத்துவதற்கு ஆணைக்குழு தயங்காது என்பது அவதானிக்கப்பட்டது. 

தகவலுக்கான உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட ஆரம்பித்து நான்கு வருடங்கள் நிறைவுபெற்றுள்ளமையினைத் தொடர்ந்து, பகிரங்க அதிகார சபைகள் தரப்பில் ஏற்பட்டிருக்கும் நேர்மறையான கொள்கை மாற்றங்கள் மற்றும் முன்கூட்டிய வெளிப்படுத்துகை என்பன வரவேற்கப்படுகின்றன. சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் ஏனைய பொதுநல முன்னெடுப்புக்களின் கீழ் பொது நிதியினால் பயனடைந்த பயனாளிகளின் பெயர்ப்பட்டியல்களை திறந்த அடிப்படையில் வெளியிட்டிருந்தமையினையும் இது உள்ளடக்குகின்றது. பொது மக்கள் மீது தாக்கம் செலுத்துகின்ற கொள்கைகள், வழிகாட்டல்கள் மற்றும் சுற்றுநிரூபங்கள் என்பனவும் பிரஜைகளுக்கு கிடைக்கக்கூடியதாக்கப்படுகின்றன என்பதுடன் நகராட்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் செயற்திட்டங்கள் தொடர்பானத் தகவல்களை உயரிய அளவில் வெளிப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றன என்பதும் குறித்துக் கொள்ளப்பட்டது. எவ்வாறெனினும், விசேடமாக பொது நிதியின் பிரயோகம் பிரச்சினைக்குட்படுகின்ற சந்தர்ப்பங்களில், தகவலுக்கான உரிமைச் சட்டத்தினால் சித்தரிக்கப்பட்டுள்ளவாறான முன்கூட்டிய வெளிப்படுத்துகை மற்றும் அச்சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன இன்னும் பலப்படுத்தப்பட வேண்டியனவாகவே எஞ்சியுள்ளன. 

அதேவேளை, ‘வாக்குறுதியிலிருந்து நடைமுறைக்கு’ எனத் தலைப்பிடப்பட்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பினால் (யுனெஸ்கோ) பொது சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட, தகவலறியும் உரிமை நடப்பாட்சிகளின் உலகளாவிய நிலைப்பாடு தொடர்பான 2020 ஆம் ஆண்டு அறிக்கையில் வெற்றிக்கான சாத்தியமுள்ள நிகழ்வுக் கற்கையொன்றாக இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாங்கள் மிகுந்த உற்சாகமடைகின்றோம். இவ் அறிக்கையினை https://ifap.ru/pr/2020/n201207b.pdf என்ற இணைப்பினூடாக அணுக முடியும்.

2017-2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஆணைக்குழுவின் ஆணைகளில் 85 வீதமான மேன்முறையீடுகளில் தகவல் முழுமையாக அல்லது பகுதியளவில் வெளிப்படுத்தப்பட வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளது என்ற நிகழ்வு அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையினை நாம் குறித்துக் கொள்கின்றோம். இது தகவலுக்கான உரிமைச் சட்டத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்ற உச்சபட்ச வெளிப்படுத்துகை என்ற கோட்பாட்டினைப் பாதுகாப்பதற்கான ஆணைக்குழுவின் திடமான நிலைப்பாட்டிற்கு அமைவானதாகும். 

இலங்கை தனது தகவலுரிமைக்கான பயணத்தில் முன்னோக்கிச் செல்கின்றபோது, கடந்த பல வருடங்களாக செய்த பெருமுயற்சியினால் கிடைக்கப்பெற்ற தகவலுரிமையின் பயன்கள் பாதுகாக்கப்படும் மற்றும் மேம்படுத்தப்படும் என்பது எமது எதிர்பார்ப்பாகவும் நம்பிக்கையாகவும் அமைகின்றது.

டி.ஜி.எம்.வி ஹப்புஆராச்சி

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் நிமித்தம் வெளியிடப்படுகின்றது

அறைகள் 203-205, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கொழும்பு 7, இலங்கை

தொலைபேசி / தொலைநகல்: + 94 11 2691625  

http://www.rticommission.lk

பிப்ரவரி 19, 2021 தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் அறிக்கையினை இங்கே தரவிறக்கம் செய்யலாம்.

News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In
News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In
News, Uncategorized

சபாநாயகர் பாராளுமன்ற மரபுகளை மீறியுள்ளாரா?

– சாமர சம்பத் முழுமையான ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பாராளுமன்றம் சுயாதீன நிறுவனமாக நடத்தப்பட வேண்டும்…

By In
News, Uncategorized

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களைக் கோர முடியுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் முக்கியத்துவம் மற்றும் RTI சட்டம் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சமூக ஊடக தளங்களில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *