Uncategorized

மக்களின் வரிப்பணமும் நாடாளுமன்ற சாப்பாடும்

By In

க.பிரசன்னா

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உயர் சலுகைகளை அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மக்களுடைய நலன்கள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில் புதிதாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றபோது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செலவீனங்கள் குறித்து  விளக்கமளித்திருந்த பாராளுமன்ற நிதிப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.எஸ்.உபநந்த, பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு பாராளுமன்ற உணவு விடுதியில் மதிய உணவு 200 ரூபாவுக்கும் சிற்றுண்டியுடன் தேநீர் 50 ரூபாவுக்கும் வழங்கப்படுவதாக தெரிவித்ததுடன், வெளியில் மூவாயிரம் ரூபா பெறுமதியான உணவே 200 ரூபாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்தவே, உறுப்பினர் ஒருவருக்கு உணவுக்காக செலவாகும் தொகை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. 

எனவே இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக இலங்கை பாராளுமன்றத்தில் (P/I/20/0056) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் அவற்றுக்கான அறவீடுகள் தொடர்பில் வினவியபோது பின்வரும் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. 

காலை உணவு

பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு காலை உணவுக்காக 100 ரூபா அறவிடப்படுகின்றதெனினும் அவ்வுணவை தயாரிப்பதற்கு பாராளுமன்றத்தால் 275 ரூபா செலவு செய்யப்படுகின்றது. இலங்கை உணவுகளின் அல்லது ஆங்கில காலை உணவுகளின் தெரிவுக்கு இணங்க காலை உணவு பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. இலங்கை காலை உணவாக பழங்கள் மற்றும் பழச்சாறுகள், இரண்டு வகையான புதிய பழங்கள், இளநீர் என்பவற்றுடன் உடனுக்குடனான உணவுகளாக இடியப்பம், பால்சோறு, சிவப்பரிசி பால்சோறு, பாண், நூடில்ஸ் (இரண்டு வகை மாத்திரம்), கோழி இறைச்சி கறி, மீன் கறி, முட்டை கறி, உருளைக்கிழங்கு கறி, கருவாட்டு கறி, நெத்தலி கறி, தேங்காய் சம்பள் மற்றும் உப்பு மிளகாய், தேநீர், கோப்பி என்பன வழங்கப்படுகின்றன. ஆங்கில காலை உணவாக இரண்டு வகையான பழங்கள், ஜேம்,பட்டர் கலந்த குரக்கன் பாண் அல்லது கோதுமை பாண், பட்டர் அல்லது மர்மலாடே, வறுத்த முட்டை, சொசேஜஸ் கலந்த ஒம்லெட், தேநீர், கோப்பி என்பன காலை உணவுகளாக வழங்கப்படுகின்றன. காலை உணவினை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் மற்றும் சமையல் பொருட்களின் அளவு, உணவு பட்டியலை பொறுத்து காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

dav

மதிய உணவு

பாராளுமன்ற உறுப்பினரொருவரிடமிருந்து மதிய உணவுக்காக 200 ரூபா மாத்திரமே அறவிடப்படுகின்றது. ஆனாலும் அவ்வுணவை தயாரிப்பதற்கு 333 ரூபா முதல் 713 ரூபா வரை பாராளுமன்றத்தால் செலவு செய்யப்படுகின்றது. மதிய உணவானது உணவு பட்டியல் அல்லது புபே ரீதியில் வழங்கப்படுகின்றது. புபே முறையிலான மதிய உணவில் 2 வகை சலாது, 2 வகை சூப் (1 மரக்கறி மற்றும் மரக்கறி சாரா), 3 வகையான சோறு, நூடில்ஸ் அல்லது பாஷ்ட்டா, ஒருவகை இறைச்சி, இரண்டு வகை கடல் மீன், மரக்கறி, சுண்டல் (ஹொட் சாபிங்), மூன்று வகையான பழங்கள், இரண்டு வகையான டெஷர்ட் என்பன வழங்கப்படுகின்றன. உணவு பட்டியல் முறையின் மூலம் சூப் (மரக்கறி தெரிவு, மரக்கறி சாரா), சோஸ் கலந்த மீன் அல்லது கோழி இறைச்சி, மரக்கறி, ஸ்டார்ச் (சோறு உருளைக்கிழங்கு) மற்றும் சலாது என்பனவும் டெஷர்ட்டுகளாக புதிய பழ ப்லெட்டெர், ப்லேட்டெட் டெஷர்ட் என்பனவும் வழங்கப்படுகின்றன. மதிய உணவினை தயாரிப்பதற்கு செலவாகக்கூடிய சமையற்பொருட்களின் அளவு மற்றும் மேற்படி உணவுகளை தயாரிப்பதற்காக கொள்வனவு செய்யப்படுகின்ற இறைச்சி, மீன்களின் அளவு தொடர்பிலான கோரிக்கைகளுக்கு உணவு பட்டியலைப் பொறுத்தே அளவு கணிப்பிடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

இவ்வாறான உணவு பட்டியலை எம்மால் உணவகங்களில் மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும். அவ்வாற கொள்வனவு செய்வதாயின் குறைந்தது 3000 – 5000 ரூபா வரையில் செலவு செய்ய வேண்டி வரும். ஆனால் 100 ரூபாவுக்கு காலை உணவும் அண்ணளவாக 500 ரூபாவுக்கு பகல் உணவும் வழங்கப்படுகின்றது. இவ்வாறு பிரமாண்டமான சமையலை செய்து முடிப்பதற்காக பாராளுமன்ற சமையலறையில் 26.08.2020 ஆம் திகதி வரையில் 61 பேர் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதற்காக செலவிடப்படும் பணம் யாருடையது. அது மக்களுடையது. மக்களுடைய பணத்தில் உணவருந்துபவர்கள் மக்களுக்கான சேவையை விட வேறு விடயங்களையே அதிகமாக பாராளுமன்றத்தில் ஆற்றுகின்றார்கள். 

2010 ஜனவரி மாதம் தொடக்கம் 2020 பெப்ரவரி மாதம் வரை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவுக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் அறவிடப்பட்ட தொகை தொடர்பில் பின்வருமாறு (அட்டவணை) கணக்கிடலாம். (இவற்றில் குழு கூட்டம் உள்ளடக்கப்படவில்லை மற்றும் பகல் உணவுக்காக அண்ணளவாக 500 ரூபா கொள்ளப்படுகின்றது) 2010 ஜனவரி மாதம் தொடக்கம் 2020 பெப்ரவரி மாதம் வரை 859 நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாட்களில் காலை உணவுக்காக பாராளுமன்றத்தால் 53,150,625 ரூபா செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து 19,327,500 ரூபாவே அறவிடப்பட்டுள்ளது. அவ்வாறெனின் மக்களுடைய பணம் 33,823,125 ரூபா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. 

மதிய உணவுக்காக 38,655,000 ரூபா அறவிடப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தால் 96,637,500 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறெனின் 57,982,500 ரூபா மக்கள் பணம் செலவிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையின் அடிப்படையில் இவ்வாறு மக்கள் பணத்தை தமது சொந்த நலன்களுக்கு செலவிட முடியுமா? எனவே 2010 ஜனவரி மாதம் தொடக்கம் 2020 பெப்ரவரி மாதம் வரை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 91,805,625 ரூபா உணவு சலுகையை பெற்றவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் 183,611.25 ரூபாவினை உணவுக்கான சலுகையாக பெற்றிருக்கின்றார்கள்.

அதேவேளை பாராளுமன்றத்தில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் மற்றும் சிற்றூழியர்களின் உணவு செலவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவு செலவுடன் இணைத்து வெளிப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஒப்பீட்டளவில் பாராளுமன்றத்தில் வழங்கப்படுகின்ற உணவுகளை உணவகங்களில் கொள்வனவு செய்யும்போது அதிக விலையை செலுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டை பார்த்தால் மொத்த பாராளுமன்றமே அதிக சலுகையை பெறுவதாகவே கருத வேண்டியுள்ளது. 

அத்துடன் பாராளுமன்றத்தின் மாதமொன்றுக்கான மின்சார கட்டணம் ஏறக்குறைய 50 இலட்சமாகும். எனினும் இத்தொகை, வரவு செலவுத்திட்டக் காலப்பகுதியின் போது மாதமொன்றுக்கு 70 இலட்சம் ரூபாவினை விஞ்சிச்செல்லும். அதேவேளை மாதமொன்றுக்கான தொலைபேசி கட்டணம் ஏறக்குறைய 75 இலட்சம் ரூபாவாகும். இவ்வாறு நாட்டின் சட்டவாக்கசபைக்கும் அதன் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கோடி கணக்கில் மக்கள் பணம் செலுத்தப்படுகின்றது. பாராளுமன்றத்தின் தோற்றம் அழகானதாக இருக்குமளவுக்கு மக்களின் வாழ்க்கையை அழகானதாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை போதியளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்திருக்கவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. 

News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In
News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In
News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *