மக்களின் உணவுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அரிசி, சீனி, மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஆட்சியில் வரும் அரசாங்கங்கள் ஒரு கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயிக்கின்றன. அதாவது குறிப்பிட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யும் போது விதிக்கப்பட்ட விலையினை மீறி அதிக விலைக்கு மக்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் விற்பனை செய்யக் கூடாது. இக் கட்டுப்பாட்டு விலை மக்களின் நலன் கருதி அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்றது. அவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்தால் நாம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம்.
தேங்காயொன்றிற்கு அதன் சுற்றளவை அடிப்படையாக வைத்து கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்திருந்தது. அதன்படி 12 அங்குலத்தை விட குறைந்த சுற்றளவை கொண்ட தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 60 ரூபா, 12 அங்குலத்திற்கும் 13 அங்குலத்திற்கும் இடைப்பட்ட சுற்றளவையுடைய தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 65 ரூபா, மற்றும் 13 அங்குலத்தை விட கூடுதலான சுற்றளவையுடைய தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 70 ரூபா. ஆனாலும் கடைகளில் தேங்காய் குறிப்பிட்ட விலையினையும் மீறி அதிக விலைக்கு விற்கப்பட்டதும் நாம் கேள்விப்பட்டதுண்டு. அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் முறைப்பாடுகள் ஏதாவது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்றதா என்பதை அறிந்துகொள்வதற்காக குறித்த அதிகாரசபைக்கு தகவலறியும் விண்ணப்பமொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு குறித்த அதிகாரசபை பின்வருமாறு பதிலளித்திருந்தது.
2020 ஆம் ஆண்டு, செப்டெம்பர் தொடக்கம் நவம்பர் வரையில் தேங்காய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு 267 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் 108 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. கொழும்பு மாவட்டமே அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற மாவட்டமாகும். அத்துடன் குறைந்தளவிலான முறைப்பாடுகள் நுவரேலியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த வியாபாரிகளிற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்வதற்கு அதிகாரசபை தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recent Comments