நாட்டில் வீட்டு, வணிக மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் நீர் மாசுபாட்டிற்கு மக்கள் எதிர்வினையாற்றுவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் (CEA) சில கேள்விகளைக் கேட்பதற்காக தகவல் உரிமைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் கழிவுப்பொருட்களை வெளியேற்றும் தொழிற்சாலைகள், வீடுகள், ஹோட்டல்கள் மற்றும் பிற வணிகங்களுக்கு எதிராக புகார்கள் எத்தனை முறை வந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் இப் பொதுஅதிகாரத்திடம் கேட்டது. கோரப்பட்ட துல்லியமான தகவல்களை CEA ஆல் வழங்க முடியவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் பதிலில் சில பொதுவான தகவல்களை வழங்கினர்.
பதில் கடிதத்தில், தொழில்துறை நடவடிக்கைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவது (waste water discharges from industrial activities) தொடர்பான புகார்கள் தொடர்பான மாவட்ட ரீதியான தரவுகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கியது.
கீழேயுள்ள தரவுகள் 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியிலிருந்து (அதாவது 01/01/2020 முதல் 30/06/2020 வரை) இருப்பதையும், இந்த புகார்கள் சுற்றுச்சூழலுக்கு (நீர்நிலைகள், மண் முதலியவற்றுக்கு) கழிவு நீர் வெளியேற்றப்படுவது தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடையவை என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
அதிக புகார்கள் கொழும்பிலிருந்து பெறப்பட்டன; அதற்கடுத்து அதிக எண்ணிக்கையில் அனுராதபுரத்திலிருந்து பெறப்பட்டன. இருப்பினும், இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், கொழும்பிலிருந்து 12 புகார்கள் வந்திருந்தாலும், அனுராதபுரத்திலிருந்து இதன் பாதி அளவிலான புகார்கள் மட்டுமே வந்திருந்தன. ஹம்பாந்தோட்டை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய இடங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து தலா 5 கழிவு நீர் வெளியேற்ற பிரச்சினைகள் தொடர்பான புகார்கள் இருந்தன.
பதுளை, காலி, கம்பஹா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இருந்து ஒரு மாவட்டத்திற்கு தலா 2 புகார்களும், அம்பாறை, மொனராகலை மற்றும் நுவரேலியாவிலிருந்து ஒரு மாவட்டத்திற்கு தலா 1 புகாரும் பெறப்பட்டன. மொத்தத்தில், இந்த 6 மாத காலத்திற்குள் 16 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 57 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும், இத்தகவல் அறியும் விண்ணப்பம், இந்த புகார்களைத் தொடர்ந்து ஏற்கனவே என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றில் எத்தனை வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன என்றும் கேள்வி எழுப்பியது. இதற்கு CEA இந்த புகார்கள் அனைத்தையும் கவனிப்பதாக பதிலளித்தது. மேலும் “CEA நடவடிக்கை மீதான அடையப்பட்ட முன்னேற்றம் – 50%” என்றும் பதிலில் கூறப்பட்டது.
Recent Comments