தகவலறியும் உரிமைச் சட்டம் பகிரங்க அதிகாரசபைகளின் வசமுள்ள, பிரஜைகளின் வாழ்க்கையில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை குறித்த அதிகாரசபையிடம் தகவலறியும் விண்ணப்பமொன்றினை தாக்கல் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறுகின்றது.
தகவலறிவதற்காக பகிரங்க அதிகாரசபையில் யாரிடம் கோரிக்கையினை முன்வைப்பது? யார் இதற்கு பதிலளிப்பார்கள் என்ற கேள்வி நிச்சயமாக தோன்றும். அதற்காக ஒவ்வொரு பகிரங்க அதிகாரசபையும் ஒரு அலுவலகரை கொண்டிருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது. அவர் தான் “தகவல் அலுவலர்” (Information Officer) சில வேளைகளில் சில பகிரங்க அதிகாரசபைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் அலுவலகர்களும் காணப்படுவர்.
தகவல் அலுவலர்கள் அவர்களது அலுவலகங்களிற்கு கிடைக்கப்பெறும் தகவலறியும் கோரிக்கைகளை கையாளுகின்றனர். அதாவது அந்த கோரிக்கைகளை பரிசீலித்து தகவல் வழங்கக்கூடிய விண்ணப்பங்களா என்று சரிபார்த்து அதற்கான பதில்களை அனுப்பிவைக்கின்றனர். இவர்கள் தங்களால் முடிந்தளவிற்கு தகவல் கோரியவரிற்கு உதவ முன்வர வேண்டும். தகவல் அலுவலர் தனது சேவையை வழங்கும் போது அவரிற்கு ஏனைய ஊழியர்களும் அவர்களது உதவியினை வழங்குவது கட்டாயமாகும்.
பகிரங்க அதிகாரசபையொன்றில் தகவல் அலுவலர் நியமிக்கப்படும் வரையில் அப் பகிரங்க அதிகாரசபைகளின் தலைவர்கள் அல்லது பிரதான நிறைவேற்று அதிகாரிகள் தற்காலிக தகவல் அதிகாரிகளாகவும் பணிபுரிவர்.
தகவல் அலுவலர் உங்களிற்கு அனுப்பிய பதிலில் திருப்தியடையவில்லையாயின் பகிரங்க அதிகாரசபையிலுள்ள இன்னோர் அலுவலகரிடம் மேன்முறையீடு செய்யலாம். அவர் தான் “குறித்தளிக்கப்பட்ட அலுவலர்” (Designated Officer). இவர் தகவல் அலுவலகரிற்கு எதிரான மேன்முறையீட்டினை கேட்டு அதற்கான பதிலை வழங்குவார்.
தகவல் அலுவலரையோ அல்லது குறித்தளிக்கப்பட்ட அலுவலரையோ தொடர்பு கொள்ள வேண்டுமாயின் குறித்த பகிரங்க அதிகாரசபையுடன் நேரடியாகவோ அல்லது தொலைபேசியினூடாகவோ தொடர்பினை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். அல்லது அதிகாரசபையின் இணையத்தளம் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து பகிரங்க அதிகாரசபைகளின் இணையத்தளங்களிலும் விபரங்களை பெறலாம் என்று கூறு முடியாது.
மூலம்: தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கான பிரஜைகள் கையேடு
Recent Comments