Uncategorized

கொவிட் 19 : இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

By In

க.பிரசன்னா

ஆடை ஏற்றுமதியின் மூலம் 2025 ஆம் ஆண்டு 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதை இலக்காகக் கொண்டு இலங்கையின் ஆடைத்தொழிற்துறை செயற்பட்டு வருகின்றது. 2019 ஆம் ஆண்டு உலக ஆடைக்கைத்தொழில் துறையின் மதிப்பு 492 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இதில் இலங்கையின் பங்களிப்பு ஒரு வீதமாகும். அதாவது, 5.3 பில்லியன் ரூபாவாகும். இலங்கையின் தொழிற்படையில் 15 வீதமானோர் ஆடைத் தொழில்துறையுடன் இணைந்து செயற்படுகின்றனர். எனினும் கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கையின் ஆடைத்துறை பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. இது ஆடைத்துறையின் வருமானத்தையும் வெகுவாகப் பாதித்தது.

இந்நிலையில் இலங்கையின் ஆடைத் தொழில்துறை மற்றும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை முதலீட்டுச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்தது. 

அதன்படி நாட்டின் 25 மாவட்டங்களில் 302 ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக குறித்த தரவுகள் கூறுகின்றன. இவற்றில் மிக அதிகமாக கம்பஹா மாவட்டத்தில் 65 ஆடைத்தொழிற்சாலைகளும் கொழும்பு மாவட்டத்தில் 49 ஆடைத்தொழிற்சாலைகளும் குருநாகல் மாவட்டத்தில் 29 ஆடைத்தொழிற்சாலைகளும் காணப்படுகின்றன. மிக்க குறைவான எண்ணிக்கையாக யாழ். மாவட்டத்தில் ஓர் ஆடைத்தொழிற்சாலை மாத்திரம் காணப்படுகின்றது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஆடைகள் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜேர்மனி, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உற்பத்திகளில் 45 வீதமானவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

இவற்றின் மூலம் 2010 – 2020 வரையான காலப்பகுதியில் 46,923 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை ஆடைக் கைத்தொழிற்துறை பெற்றுக்கொண்டுள்ளதுடன் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 19,109 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. மிக அதிகமாக 2019 ஆம் ஆண்டு 5,043 மில்லியன் அ.டொலர் வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் 2017 ஆம் ஆண்டு மிக அதிகமாக 2,100 மில்லியன் அ.டொலர் மூலப்பொருள் இறக்குமதிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. 


இலங்கையில் கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட துறைகளுள் ஆடைத் தொழிற்சாலைகள் குறிப்பிட்டுக் கூறத்தக்கவை.  பெரும்பாலான தொழிற்சாலை ஊழியர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் ஆடைத் தொழிற்சாலையின் பெயரிலேயே ஒரு கொத்தணி அடையாளப்படுத்தப்பட்டது.  இதனால் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளில் பல தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின் போது நாட்டில் எவ்வித ஆடைத்தொழிற்சாலைகளும் மூடப்படாமல், சுகாதார வழிமுறைகளைப் பேணி தொடர்ச்சியாக இயங்கும் வகையில் அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கொவிட் தொற்று காலப்பகுதியில் மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்பான விபரங்களை கோரிய போதிலும் அதற்கு தெளிவான பதில் வழங்கப்படவில்லை. “மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளை வகைப்படுத்துவது கடினம். நிறுவனங்கள் இலங்கை முதலீட்டுச் சபை உடனான பதிவை மீளப் பெற்றுக் கொண்டாலும் அவை ஏனைய நிறுவனங்களுடன் அல்லது நாட்டின் சாதாரண சட்டங்களின் கீழ் இணைந்து செயல்படலாம்” என பதில் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று ஆடைத் தொழிற்சாலைகள் பெற்றுக்கொள்கின்ற வருமானம் தொடர்பான விபரங்களை நாம் கோரிய போதிலும், அவை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 5(1) (ன) இன் கீழ் வழங்கப்பட முடியாதவை என மறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொவிட் தொற்றுக் காலப்பகுதியில் ஆடைத் தொழிற்துறை எதிர்கொண்ட நெருக்கடிகளை சமாளிக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் கொவிட் தொற்று நோய்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய இலங்கை முதலீட்டுச் சபை நிறுவனங்களுக்கு கூடுதல் உற்பத்திகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது. 

வாடகை, வருடாந்த கட்டணம் போன்ற இலங்கை முதலீட்டுச் சபைக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை, நிதி சிக்கல்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தவணை கொடுப்பனவு முறையில் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. 

ஊரடங்குச் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் இலங்கை முதலீட்டுச் சபை வலயத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்யவும் விசேட அனுமதிகள் வழங்கப்பட்டன. 

இலங்கை முதலீட்டுச் சபை நிறுவனங்களுக்கு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேவையின் அடிப்படையில் விலக்கு அளிக்க கட்டண ஆலோசனைக் குழு மத்தியஸ்தம் செய்தது. 

ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் அரசாங்க நிறுவனங்களான சுகாதார அமைச்சு, சுகாதார சேவைகள் திணைக்களம், முப்படைகள், இலங்கை பொலிஸ் மற்றும் கொவிட் சிகிச்சை நிலையம் ஆகியவற்றுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதற்கு அல்லது நன்கொடையாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. 

கொவிட் தொற்று காலப்பகுதியில் நாட்டில் பல நிறுவனங்கள் மூடப்பட்டாலும் ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏற்றுமதி வருமானத்தை முன்னிலைப்படுத்தி இதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் இத்துறையில் பணிபுரியும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வருமானம் உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கை பொருளாதாரத்தில் ஆடைக் கைத்தொழில்துறை முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொண்டதுடன் 1986 இல் இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி கைத்தொழிலாகவும் காணப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இலங்கை ஆடைக்கைத்தொழில் துறையின் ஏற்றுமதி வருமானம் 2424 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இவை நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 52 வீதமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 வீதமாக காணப்பட்டது.  அத்துடன் 1060 ஆடைத்தொழிற்சாலைகளில் 330,000 நேரடி ஊழியர்கள் பணியாற்றியதுடன் நாட்டின் மொத்த தொழிலாளர்களில் 5 வீதமாக காணப்பட்டது. தற்போதைய கொவிட் நிலைமை இத்தொழில்துறையை கடும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றது. 

கொவிட் தொற்றுக்கு முந்தைய 2019 இல், ஆடை ஏற்றுமதி 5.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இது அனைத்து உற்பத்தி ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 48 வீதமாகும். 2020 இல், தொற்றுநோய் பரவலானது ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் ஒரு செங்குத்தான சரிவுக்கு வழிவகுத்தது.  இலங்கையின் ஆடை ஏற்றுமதியும் 2020 இல் வெகுவாகக் குறைவடைந்தது. தேசிய அளவில் அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கம் உற்பத்தியை பாதித்தது, மேலும் உற்பத்திக்கான முன்பதிவுகள் அதிகமாக இரத்துச் செய்யப்பட்டன. ஏற்றுமதி கிட்டத்தட்ட காலாண்டில் (24 வீதத்துக்கும் அதிகமாக) 3.93 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதியில் ஆடை ஏற்றுமதி 21.5 வீதத்தினால் அதாவது 3.54 பில்லியன் அ.டொலர்களாக அதிகரித்தது. 

இன்னுமொரு குழப்பமான ஆண்டை எதிர்கொண்ட போதிலும், 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடைத் தொழில்துறை குறிப்பிடத்தக்க மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. கொவிட் தொற்றின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளால் இலங்கைக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுகளைத் தொடர்ந்து, தற்போது ஒமிக்ரோன் தொற்று குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது. அத்துடன் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஆகியவற்றின் பின்னணியில் நிலைமை மோசமடையுமாயின் ஆடை ஏற்றுமதித்துறை பாரிய சவால்களைச் சந்திக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் அந்நியக் செலாவணி பற்றாக்குறை காரணமாக தொடரும் எரிபொருள் நெருக்கடி, மின்துண்டிப்பு போன்றவற்றாலும் ஆடைத்தொழிற்துறை பாரிய பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றமை கண்கூடு. 

Uncategorized

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது நியாயமற்றதா? 

2025 ஜனவரியில் மாத்திரம் 34 மில்லியன் ரூபாய்! மொஹமட் ஆஷிக் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினை, எமது நாட்டு அரசியல் அரங்கில் பல வருட…

By In
News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In
News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *