News, Uncategorized

சபாநாயகர் பாராளுமன்ற மரபுகளை மீறியுள்ளாரா?

By In

– சாமர சம்பத்

முழுமையான ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பாராளுமன்றம் சுயாதீன நிறுவனமாக நடத்தப்பட வேண்டும் எனச் சகலரும் கருதுவதுடன், மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள், சிறப்புரிமைகள் மற்றும் பாராளுமன்ற மரபுகள் உருவாக்கப்பட்டிருப்பது இவற்றை அடிப்படையாகக் கொண்டே அன்றி அவற்றை இல்லாதொழிப்பதற்கு அல்ல. பாராளுமன்றத்தில் சபாநாயகர் சுயாதீனத்துடன்  செயற்படுவாரென ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நம்புகின்றனர்.

எவ்வாறாயினும், சபாநாயகர் பாராளுமன்ற மரபுகளை மீறியுள்ளதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை உபயோகித்து அதன்படி பெறப்பட்ட தகவலுக்கு அமைய குறித்த சந்தர்ப்பங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாராளுமன்ற செயற்பாட்டைத் தலைமை தாங்கும் ஆசனத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் :

பாராளுமன்றம் கூடும்போது சபாநாயகர் சபைக்குத் தலைமை தாங்குவார். சபாநாயகர் இல்லாத பட்சத்தில், துணை சபாநாயகர் அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை வகிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் இல்லாத பட்சத்தில்,  பாராளுமன்றத்தின் அலுவல்களைத் தடையின்றி மேற்கொள்ள, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய தவிசாளர் குழாத்தை நியமித்தல் வேண்டும்.

இந்தக் குழுவிற்கு அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள்   நியமிக்கப்படமாட்டார்கள் மற்றும் மரபு ரீதியாக மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்படுவதில்லை. பெரும்பாலாகப் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தவிசாளர் குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். தவிசாளர் குழாத்தின் தலைவர் பதவியை வகிக்கும் உறுப்பினர் ஒருவர் அமைச்சரானால், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அக்குழுவிற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களைச் சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.

பாராளுமன்ற அவையை தலைமை தாங்கும் உறுப்பினர் மாற்றப்பட்டமை:

கடந்த மே 18 ஆம் திகதி பாராளுமன்ற சபையைத் தலைமை தாங்கும் உறுப்பினர் தொடர்பாகச் சிக்கல் நிலை ஏற்பட்டது. பாராளுமன்ற ஆரம்ப அமர்வில் தலைமை தாங்கிய சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் சபையை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டதால், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை அவைத் தலைவராகப் பொறுப்பேற்குமாறு அறிவித்திருந்தார். சபையைத் தலைமைப் பொறுப்பேற்க இராசமாணிக்கம் பிரசன்னமாகியிருந்த போதிலும், சபாநாயகர், முன்னாள் அமைச்சரும் அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டாரவை சபைக்குத் தலைமைதாங்குவதற்கு அழைப்பு விடுத்தார். அப்போது பாராளுமன்றத்தில் சிறப்புரிமை தொடர்பாகக் கேள்வியொன்றை எழுப்பிய இராசமாணிக்கம், இந்த எதிர்பாராத நிலைமைக்குச் சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவே காரணம் எனவும் குற்றம் சுமத்தினார்.

அப்போது பாராளுமன்றத்தில் பின்வருமாறு கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. (சபைக்குத் தலைமைவகித்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார)

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்: நீங்கள் பாராளுமன்ற சபையை வழிநடத்த குறித்த ஆசனத்திற்கு வரும் முன்னர், படைக்கலச் சேவிதர் ஒருவர்  என்னிடம் பேசி, சபாநாயகர் நாற்காலியை விட்டு வெளியேறப் போவதாகவும் முடிந்தால் பாராளுமன்ற அவையை தலைமைதாங்க வருமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார். அதனால் பாராளுமன்ற சபையைத் தலைமை தாங்கும் உறுப்பினருக்காக ஒதுக்கியுள்ள இடத்திற்கு அருகில் இருந்த நாற்காலியொன்றில் நான் அமர்ந்து இருந்தேன். அப்போது சபைத் தலைவர் தினேஸ் குணவர்தன என்னை அவை தலைமைக்கு அமர்த்தாமல் உங்களை அமர்த்துமாறு இரு செயலாளர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார். நான் அதனைத் தெளிவாகப் பார்த்தேன். அப்போது பாராளுமன்ற செயலாளரிடம் என்ன நடக்கிறது என்று கேட்டேன். பிறகு DON’T ASK ME (என்னிடம் கேட்க வேண்டாம்) என்றார். நான் ஸ்பீகர்ஸ் பேனலில் உறுப்பினராக உள்ளேன். பாராளுமன்றம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்று நான் நினைக்கிறேன். இது தாமரை மொட்டு (பொஹொட்டு) உறுப்பினர்களின் பாராளுமன்றம் அல்ல. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் சம உரிமை உண்டு. என்னை அந்த நாற்காலிக்கு வரச் சொல்லிவிட்டு மீண்டும் அந்த நாற்காலியில் அமர இடமளிக்க வேண்டாமெனக் கூறுவது எவ்வளவு மோசமான செயலாகும். என்னைப் பொறுத்தவரை இந்த நாற்காலிகளில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும் இரண்டும் ஒன்றுதான். நான் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுவதால் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் டீல் தொடர்பில் நான் உரையாற்றும் காரணத்தினால் நான் பாராளுமன்ற சபையைத் தலைமை தாங்குவதை  நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்தப் பாராளுமன்றத்தின் சுயாதீனத்துவம் என்ன? தினேஷ் குணவர்தன இங்கே இருக்கிறார். உங்களால் முடிந்தால், ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று சொல்லுங்கள். நான் உங்களிடமிருந்து பதிலொன்றை பெற எதிர்பார்க்கிறேன்.

சபைத்தலைவர் தினேஷ் குணவர்தன: பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு கதை கூறுகிறார். ஆனால் நான் இதற்குப் பதிலளிக்க தயாரில்லை. சபாநாயகருக்கே பதில் கூறும் உரிமையுண்டு.

அவைத் தலைவராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார: அதற்கான விளக்கம் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் அவர்களுக்கு இந்தச் செய்தி கிடைக்கப்பெற்ற அதே தருணத்தில் தான் எனக்கும் அந்தச் செய்தி கிடைத்தது. அந்தக் குழுவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினராக நான் முதலிடத்தில் இருக்கிறேன். அதனால் தான் எங்கள் இருவருக்கும் அழைப்பு வந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்  இராசமாணிக்கம்: நீங்கள் சபாபீடத்திற்குள் கூட இருக்கவில்லையே.

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார: இல்லை, நான் சபாபீடத்தில் தான் இருந்தேன்

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த நடவடிக்கையினால் பாராளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கத்தின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நெருக்கடி நிலை

சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து ஏப்ரல் 12 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றார். பின்னர், மே 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை இராஜினாமா செய்ததை அடுத்து,  அனைவரும் அமைச்சர் பதவிகளை இழந்தனர். அமைச்சராக உள்ளவரை தலைவராக நியமிக்க முடியாது. அத்துடன் மே 09ஆம் திகதிக்கு பின்னர் சாந்த பண்டாரவை குழு பிரதி தவிசாளரின் பட்டியலில் உள்ளடக்கியதாக சபாநாயகர் அறிக்கை வெளியிடவில்லை. இதனால், இது குறித்து சிக்கல் நிலவியது.

தகவல் கோரிக்கை

இந்த சிக்கலை தெளிவாக அறிந்துகொள்ள, அதாவது சபாநாயகர் பாராளுமன்ற மரபை மீறியுள்ளாரா என்பதை ஆராய்வதற்கு குறித்த சந்தர்ப்பத்தில் நடைமுறையில் காணப்பட்ட தலைவர் பட்டியல், அதன் நியமன திகதி மற்றும் சபாநாயகர் அதனை பாராளுமன்றத்திற்கு முன்வைத்த திகதி தொடர்பான சாட்சி குறிப்புகள் போன்ற ஆவணங்களை கோரி மே மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு தகவல் கோரிக்கை விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.

சபாநாயகரின் அறிவிப்பு

தகவல் கோரியதற்கு மறுநாள் அதாவது மே 19 ஆம் திகதி பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட போது சபாநாயகர் பாராளுமன்றத்தில் உரையாற்றியதுடன் குழு தவிசாளர் பட்டியல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. மே மாதம் 19 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரும் என சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார். அதாவது அன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பிய போதிலும், சபாநாயகர் அதற்கு அனுமதியளிக்காததுடன், அது தொடர்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடாமல் பாராளுமன்ற அவை செயல்பாட்டை  தொடர்ந்தார். சபாநாயகர் அன்றைய தினம் வெளியிட்ட அறிக்கை மற்றும் உரை பின்வருமாறு:

“பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 140க்கு இணங்க ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் 19.05.2022 முதல் சேவையாற்றுவதற்கு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை தவிசாளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளேன் என்பதை பாராளுமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்”:-

● சாந்த பண்டார

● வேலு குமார் 

● மயந்த திசாநாயக 

● ஹர்ஷன ராஜகருணா 

● ரோஹினி குமாரி விஜேரத்ன 

● ஹேஷா விதானகே 

● கோகிலா குணவர்தன 

● பிரேம்நாத் சீ தொலவத்த

● வசந்த யாபாபண்டார 

● சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் 

● வீரசுமண வீரசிங்க

● கலாநிதி சுரேன் ராகவன்

● கலாநிதி ஹரினி அமரசூரிய

தகவல் கோரிக்கைகளுக்கு வேறுபட்ட பதில்கள்

இது தொடர்பில் மே மாதம் 18 ஆம் திகதி தகவல் கோரியிருந்த போதிலும், மே 19ஆம் திகதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு கடந்த மே 31 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் பதில் வழங்கப்பட்டுள்ளது. 

தகவல் வழங்கும் கடிதம் பாராளுமன்றத்தால் முன்வைக்கப்பட்டு சபாநாயகரால் 19 ஆம் திகதி நியமிக்கப்பட்ட தவிசாளர்களின் பெயர்ப் பட்டியலை வழங்கியுள்ளனர். எவ்வாறாயினும், மே 18 ஆம் திகதி வரை, அமுலில் உள்ள தவிசாளரின் பெயர் பட்டியல் மற்றும் அதை சபையில் முன்வைத்தமைக்கான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பாராளுமன்றம் பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் தற்போது பாராளுமன்றத்தின் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் மீள்முறையிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் சபாநாயகர் பாராளுமன்ற மரபை மீறியுள்ளதாக ஊகிக்கலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பாராளுமன்றத்துக்கு உள்ளேயே சரியான தகவல்களை வழங்குவதற்குப் பதிலாக அதற்கு முரணாக கோரப்பட்ட தகவல்களை வழங்காமல் இருப்பது கவலைக்குரியதாகும். ‘வேலியும் அணையும் பயிர்களை சாப்பிடுமாயின் யாருக்கு கஷ்டத்தை சொல்ல’ என்ற கூற்று இங்கு பொருந்தும்.

News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In
News

யானை – மனித முரண்பாடும் அதிகரிக்கும் உயிரிழப்புக்களும் !

வீ.பிரியதர்சன் உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் தொடர்கதையாகி வருகின்றன. இதில் முக்கியமாக யானை – மனித முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இலங்கையில்…

By In
News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
Uncategorized

20 மில்லியன் மக்களுக்கு 40 மில்லியன் கையடக்கத் தொலைபேசி சாதனங்கள்!

ஜே.ஏ.ஜோர்ஜ் உலகில் தொலைத் தொடர்பு துறை நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்,  அதன் வேகத்திற்கேற்ப இணையம் மற்றும் கையடக்க தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதை அண்மைய தரவுகள்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *