அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் (Direct Aid Program – DAP) நேரடி உதவித் திட்டத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) “RTI: தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எமது உரிமையைப் பாதுகாப்போம்” என்ற தொடர் பயிற்சித் திட்டத்தின் மூன்றாவது பயிற்சி டிசம்பர் 07 ஆம் திகதி புத்தளத்தில் உள்ள சிலாபம் ஃபார் இன் வில்லேஜ் ஹோட்டலில் நடாத்தியது. இதில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன, ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி ஜகத் லியன ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப் பயிற்சி ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான தகவலறியும் உரிமையை பிரஜைகள் அனுபவிப்பதற்காக தகவலறியும் உரிமைச் சட்டத்தை வினைத்திறனுடன் எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது.
இப் பயிற்சியின் ஆரம்பத்தில் சட்டத்தரணி ஜகத் லியன ஆராச்சி அவர்கள் RTI தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பில் தனது அளிக்கையை வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் RTI ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினரான திரு. பிரசாத் பூர்ணிமால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி எழுதிய தனது வெற்றிக் கதைகளைப் பகிர்ந்துகொண்டதுடன், ஏனையவர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்தினார். கேள்வி பதில் பகுதியில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பங்குபற்றுனர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்திருந்தனர். அத்துடன் சட்டத்தினை பயன்படுத்தும் போது அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அவற்றிற்கான தீர்வுகள் போன்றன ஆணைக்குழுவினரால் வழங்கப்பட்டன. மேலும் மேன்முறையீடுகளை சரியான காலத்தினுள் மேற்கொள்ளுமாறும் பொது அதிகாரசபைகள் சட்டத்தினால் பரிந்துரைக்கப்பட்ட காலவரையினுள் கோரிக்கைக்கு முறையான பதிலை வழங்காவிடின் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு மேன்முறையீட்டினை செய்யுமாறும் வழியுறுத்தியிருந்தனர்.
Recent Comments