News

வட மாகாண பாடசாலைகளுக்கு மூடுவிழா?

By In

ப.பிறின்சியா டிக்சி

தனியொரு நபரின் ஆளுமையை வளர்த்தெடுத்து, அதன்மூலம் சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கல்வியை பாடசாலைகள் வழங்குகின்றன. இதனால்தான் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பாடசாலை கட்டுவது சிறந்தது” என்று சான்றோர் கூறுகின்றனர்.  

எனினும், வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் எதிர்மறையான துரதிர்ஷ்ட நிலையே இன்று தோன்றியுள்ளது. அண்மைக்காலமாக இங்கு பல பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. 

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் யாழ்ப்பாணம் – நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இருப்பினும், இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் அப்போது வெளியிடவில்லை.

எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி கோரப்பட்ட தகவலுக்கு அமைய, நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்கள் தொகை குறைவடைந்து சென்றமையால், அப்பாடசாலையை தற்காலிகமாக மூடியுள்ளதாக, வட மாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல் அலுவலர் திருமதி கி.வாசுதேவன் கூறினார். 

அத்துடன், அங்கு கல்வி கற்ற மாணவர்கள், அயலில் உள்ள யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் மற்றும் யா/அத்தியார் இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கு இணைக்கப்பட்டுள்ளனர். 

தரம் 1 மற்றும் 2 இல் மாணவர்கள் எவரும் இல்லாத நிலையில், தரம் 5 வரை மொத்தம் 6 மாணவர்களுடன் நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை இயங்கி வந்துள்ளது. இதில் தரம் 3 இல் ஒரு மாணவரும் தரம் 4 இல் 2 மாணவர்களும் தரம் 5 இல் 3 மாணவர்களும் கல்வி கற்று வந்துள்ளனர். இம்மாணவர்களில் தரம் 4இல் கற்று வந்த 2 மாணவர்களும் கருணாலய இல்லத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருந்துள்ளனர். 

இந்நிலையில், தரம் 5 இல் கல்வி பயின்ற மாணவர்கள் மூவரும் கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் தரம் 6 இற்காக வேறு பாடசாலைகளில் இணைந்துள்ளனர். மிகுதி 3 மாணவர்களில் கருணாலய இல்லத்தில் இருந்து வருகை தந்த இரு மாணவர்களையும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு இணைப்பதற்கு கருணாலய நிர்வாகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, தற்போது இணைக்கப்பட்டுள்ளனர். 

மிகுதியாக உள்ள ஒரேயொரு மாணவனும் கற்றல் நடவடிக்கைக்காக யா/அத்தியார் இந்துக் கல்லூரியில் பெற்றோரினால் இணைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்தே, யாழ்ப்பாணம் – நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

மிகவும் குறைந்த மாணவர்களுடன் இப்பாடசாலை இயங்கி வந்திருந்தாலும் அதன் கடந்த கால கல்வி நடவடிக்கைகள் திறம்படவே இருந்துள்ளன. அதன்படி, 2022ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலையிலிருந்து 3 மாணவர்கள் தோற்றி, 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றதன் அடிப்படையில் 100 சதவீத சித்தி கிடைத்துள்ளது. 

அத்துடன், 2021ஆம் ஆண்டு 5 மாணவர்கள் தோற்றி, ஒரு மாணவன் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதோடு, 3 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்ததற்கு அமைவாக பாடசாலை 60 சதவீத சித்தியடைந்துள்ளது. 

மேலும், 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒரு மாணவன் தோற்றி, 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த நிலையில் பாடசாலை 100 சதவீத சித்தியடைந்திருந்ததாகவும் அதாவது அப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் திருப்தியாக இடம்பெற்று வந்ததாகவும் வட மாகாண கல்வித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.  

அறிவுசார் முன்னேற்றத்திற்கும், ஆளுமைத் திறனை வளர்ப்பதற்கும் பாடசாலைகள் துணைபுரிகின்றன. அதற்காக வட மாகாணத்தில் மொத்தம் 453 ஆரம்ப பிரிவு பாடசாலைகள் இயங்குகின்ற நிலையில், தற்போது  நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  

அது மாத்திரமல்ல, வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் காலப் பகுதியில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 49 பாடசாலைகளும், கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும், மன்னார் மாவட்டத்தில் 10 பாடசாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பாடசாலைகளும், வவுனியா மாவட்டத்தில் 34 பாடசாலைகளுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். 

குறிப்பாக, வவுனியா வடக்கு கல்வி வலயத்திலேயே இந்த எண்ணிக்கை உயர்வாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வட மாகாண பாடசாலைகள் இவ்வாறு தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றமைக்கு சமூகத்தின் போக்கும் ஒரு காரணமாக உள்ளது. பாடசாலைகள் சமூகத்தின் கண்கள் ஆகும். ஒரு பாடசாலை சிறப்பாக இயங்க வேண்டுமானால் அப்பாடசாலை அமைந்துள்ள சமூகத்தினுடைய வகிபங்கு மிகவும் இன்றியமையாதது. அவை நிதி, பாதுகாப்பு மற்றும் மனித வளம் போன்ற பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். வட மாகாண பாடசாலைகளில் மனித வளமே குன்றிப்போகின்றது. 

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்லும் நிலையில், இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக அகில இலங்கை இந்துமா மன்ற உப தலைவரும் சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் எச்சரித்தார். 

“யாழ்.தீவகத்தில் பல பாடசாலைகள் போதியளவு மாணவர் இன்மையால் மூடப்பட்டுள்ள அதேவேளை, யாழ். மாவட்டத்தில் பல தனியார் பாடசாலைகள் முளைத்த வண்ணமுள்ளன” என்றும் அவர் சாடினார். 

எனவே, பொறுப்பு வாய்ந்தவர்கள் தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றாது போனால் எமது இனத்தின் பரம்பல் குறைந்து செல்வதுடன், எதிர்காலத்தில் பல்வேறு சவால்களை தமிழ் மக்கள் எதிர்நோக்க வேண்டியேற்படுமெனவும் அவர் எச்சரித்தார்.

 வட மாகாணத்தில் அரச பாடசாலைகள் பல மூடு விழா கண்டுவருவதற்கு முக்கிய காரணங்களாக பிறப்பு வீதம் குறைந்தமை மற்றும் புதிது புதிதாக பல தனியார் பாடசாலைகள் தோன்றியமையுமே பிரதான காரணங்களாக உள்ளதாக கலாநிதி ஆறு.திருமுருகன் கூறினார்.

இதேவேளை, “வடக்கில் எந்தவொரு பாடசாலையும் நிரந்தரமாக மூடப்படவில்லை. வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கூறிய 103 பாடசாலைகளும் தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளன. மாணவர் பற்றாக்குறை காரணமாகவே இவை மூடப்பட்டுள்ளன” என்பதை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் ஒத்துக்கொண்டார். 

இதற்கு இடப்பெயர்வுகள், நகர்ப் புற பாடசாலைகளின் வளர்ச்சி, நகரமயமாக்கல், சனத்தொகைப் பற்றாக்குறை எனப் பல காரணங்கள் காணப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

“மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் இன்று சில பாடசாலைகளில் புதிதாகக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. மறுபுறம் சில பாடசாலைகள் மூடப்படுகின்றன. நகர்ப்புற பாடசாலைகளின் வளர்ச்சியும் இதற்குக் காரணம். பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு சில இடங்களில் மக்கள் இல்லை. சில இடங்களில் நகரமயமாக்கல் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. இது குறித்து நாம் அவதானம் செலுத்துகின்றோம். முறைப்படியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எமது தரப்பில் நாமும் முன்னெடுப்பதற்குத் தயாராக உள்ளோம். தற்காலிகமாகப் பாடசாலைகளை மூடுவது எமது விருப்பு அல்ல. போதிய எண்ணிக்கையான மாணவர்கள் வருகை தருவார்களாயின் நிச்சயமாக பாடசாலைகள் மீள ஆரம்பமாகும்” என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ. உமாமகேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்தார். 

ஒரு நாட்டின் வளமான எதிர்காலத்தை தீர்மானிப்பதில் பாடசாலைகள் முதன்மை வகிக்கின்றன. பாடசாலை கல்வியே எதிர்கால சமூகத்தின் ஆணிவேராக உள்ளது. பாடசாலைகளில் இருந்தே நாட்டை ஆளப் போகும் தலைவர்கள் முதல் வைத்தியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல அறிவார்ந்த பிரஜைகள் உருவாக்கப்படுகின்றனர். எனவே, அக்கல்வியைத் திறம்பட வழங்க வேண்டியது அவசியமாகின்றது.  

“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் ஔவையார். வாழ்க்கையில் எவ்வளவு வறுமை நிலை வந்தாலும் கல்வி கற்பதை மாத்திரம் நிறுத்திவிடக் கூடாது என்பதே இதன் பொருள். 

ஆனால், இன்றைய நெருக்கடியான நிலையில் வட மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றமையால் மாணவர்களும் பாடசாலையை விட்டு இடைவிலகும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.   

2020 – 2022 ஆண்டு காலப்பகுதியில் வட மாகாணத்தில் 2,206 மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக வட மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதாவது, பாடசாலையொன்று மூடப்படுவது என்பது, அந்தப் பாடசாலையில் கல்விகற்றுவந்த மாணவர்களின் இடைவிலகலை ஊக்குவிப்பதாக அமைவதுடன், அவர்களின் கல்வியை பாதிக்கும் நிலையையும் உருவாக்கும். 

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பாடசாலைக்கு சென்று வரும் மாணவர்கள், பாடசாலைகள் மூடப்படுவதால் தேவையான கல்வியைப் பெறாதிருப்பது ஒரு நாட்டின் வளத்தை வீணாக்கும் செயலாகவே இருக்கும். அத்துடன், வாழ்க்கையில் கிடைக்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காமல் போவதால் இளம் வயதில் கிடைக்கக்கூடிய அனுபவங்களையும் மாணவர்கள் தவற விடுகின்றனர். 

யுத்த காலத்தில்கூட வடக்கில் “பண்டிதர்” பலர் தோன்றினர். ஆனால், தற்காலத்தில் வட மாகாண பாடசாலைகளின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, வட மாகாண பாடசாலைகளின் இருப்பை தக்கவைத்துக்கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 

News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In
News

யானை – மனித முரண்பாடும் அதிகரிக்கும் உயிரிழப்புக்களும் !

வீ.பிரியதர்சன் உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் தொடர்கதையாகி வருகின்றன. இதில் முக்கியமாக யானை – மனித முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இலங்கையில்…

By In
News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *