News

மின்சார சபை ஊழியர்களின் சலுகைகளுக்கான செலவாகும் பெருந்தொகை நிதி!

By In

2022 இல் கொடுப்பனவுகளுக்காக 5522 கோடி ரூபா ஒதுக்கீடு

மருத்துவ செலவுகளுக்காக 2022 இல் 125.8 கோடி ரூபா ஒதுக்கீடு

போக்குவரத்துக்காக (7 பிரிவுகள்) 2022 இல் 284 கோடி ரூபா செலவு

க.பிரசன்னா

இலங்கை மின்சார சபை அதிக நட்டத்தில் இயங்கி வருவதாக கூறி அதனை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் எரிபொருள் மற்றும் உற்பத்திச்   செலவு  என்பவற்றை காரணம் காட்டி மின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்   அரச  வங்கிகளுக்கு இலங்கை மின்சார சபை  51,600  கோடி  ரூபா கடனாளியாக உள்ளதாக மிக்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

உண்மையில் இலங்கை மின்சார சபையானது மக்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்குவதால் மாத்திரம் நட்டமடைகின்றதா என்பதை ஆராய வேண்டும். அதை விடவும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மருத்துவ செலவுகள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கும் அதிகமான செலவுகளை இலங்கை மின்சார சபை மேற்கொள்கின்றது. 

இலங்கை மின்சார சபையானது, நிதி, திட்டம், விநியோகம், ஆதன முகாமைத்துவம், மின் உற்பத்தி, சட்டம் மற்றும் புலனாய்வு, பரிமாற்றம், பெருநிறுவன மூலோபாயம் உள்ளிட்ட 12 பிரிவுகளை கொண்டுள்ளது. இவற்றில் நான்கு விநியோக பிரிவுகளும் உள்ளடங்கும். விநியோக பிரிவு 1 இல் வடமத்திய, வடமேல், வடக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு நகரமும் உள்ளடங்குகின்றது. விநியோக பிரிவு 2 இல் கிழக்கு, மத்திய மாகாணம், மேல் மாகாணத்தின் வடக்கு ஆகியன உள்ளடங்குகின்றன. விநியோக பிரிவு 3 இல் மேல் மாகாணத்தின் தெற்கு 2, சப்ரகமுவ, ஊவா மாகாணங்கள் உள்ளடங்குகின்றன. விநியோக பிரிவு 4 இல் தென் மற்றும் மேல் மாகாணத்தின் தெற்கு 1 ஆகியன உள்ளடங்குகின்றன.

இந்நிலையில் குறித்த    பிரிவுகளில்   ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள், போக்குவரத்து செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இலங்கை மின்சார சபையிடம் 29.03.2022 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கப்படாத நிலையில் 07.06.2022 ஆம் திகதி மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டது. அவற்றுக்கும் உரிய பதில் வழங்கப்படாமையால் 21.07.2022 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது. 02.02.2023 ஆம் திகதி மேன்முறையீடு   விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தகவல் வழங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டும்    இலங்கை மின்சாரசபையிலுள்ள 12 பிரிவுகளில் 8 பிரிவுகளுக்கான தகவல்கள் மாத்திரமே இதுவரை வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில்,

ஊழியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவு

இலங்கை மின்சார சபையில் 30.06.2022 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 21,522 நிரந்தர ஊழியர்களும் 628 அமய ஊழியர்களும் 82 ஒப்பந்த ஊழியர்களும் 2593 தேசிய தொழில் தேர்ச்சி பயிற்சி ஊழியர்களும் என மொத்தமாக 24,825 ஊழியர்கள் பணியாற்றுவதாக இலங்கை மின்சார சபையின்  பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் பி.ஏ.ஜே.பி.கே.பெரேரா தெரிவித்துள்ளார். இதில் விநியோகப்பிரிவு 1 இல் 4593 ஊழியர்கள் (30.09.2022) கடமையாற்றுகின்றனர். (எனினும் 2023 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 1100 க்கும் அதிகமான ஊழியர்கள் ஓய்வு பெற்றிருந்தனர்.)

ஊழியர்களின் தனிப்பட்ட கொடுப்பனவுகளுக்காக 2015 – 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 316,921 மில்லியன் ரூபா (31,692.1 கோடி ரூபா) நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 2015 ஆம் ஆண்டு 26,233 மில்லியன் ரூபாவும் 2016 இல் 29,405 மில்லியன் ரூபாவும் 2017 இல் 24,795 மில்லியன் ரூபாவும் 2018 இல் 38,862 மில்லியன் ரூபாவும் 2019 இல் 44,317 மில்லியன் ரூபாவும் 2020 இல் 45,134 மில்லியன் ரூபாவும் 2021 இல் 52,954 மில்லியன் ரூபாவும் 2022 இல் 55,223 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இ.மி.ச. நிதி பிரிவின் மேலதிக நிதி முகாமையாளர் எஸ்.ஜயலத் தெரிவித்துள்ளார்.

விநியோக பிரிவு 1 இல் கடமையாற்றும் ஊழியர்களுக்காக (2022) வருடாந்தம் கொடுப்பனவுகளுக்காக 5674.17 மில்லியன் ரூபா (567.41 கோடி) ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரிவு ஒன்றின் மேலதிக நிதி முகாமையாளர் ஜே.எம்.டி.விஜயவீர தெரிவித்துள்ளார். 30.09.2022 ஆம் திகதி வரை இங்கு 4593 ஊழியர்கள் கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஆதன முகாமைத்துவ பிரிவின் ஊழியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவுகளுக்கு 422.22 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் ஆர்.ஞானேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து செலவுகள்

விநியோக பிரிவு 1 இல் கடமையாற்றும் ஊழியர்களுக்கான வருடாந்த போக்குவரத்து செலவுகளாக (தனிப்பட்ட போக்குவரத்து, மின் தடையின் போதான போக்குவரத்து மற்றும் ஏனையவை உள்ளடங்கலாக) 2015 – 2022 ஆம் ஆண்டு வரை 5325.76 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 2015 இல் 535.82 மில்லியனும் 2016 இல் 593.84 மில்லியனும் 2017 இல் 558.58 மில்லியனும் 2018 இல் 602.22 மில்லியனும் 2019 இல் 629.55 மில்லியனும் 2020 இல் 639.44 மில்லியனும் 2021 இல் 718.11 மில்லியனும் 2022 இல் 1048.17 மில்லியனும் செலவு செய்யப்பட்டுள்ளது.

விநியோக பிரிவு 3 இல் மொத்தமாக 729 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 2015 – 2022 நவம்பர் வரையான காலப்பகுதியில் போக்குவரத்து செலவுகளாக 3751.47 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் வாகனங்களின் பராமரிப்புக்காக 1140.93 மில்லியன்  ரூபாவும் எரிபொருள், எண்ணெய், வாகன அனுமதிப் பத்திரங்களுக்காக 1244.40 மில்லியன் ரூபாவும் மற்றும் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களுக்காக 1366.14 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 2015 இல் 322.71 மில்லியனும் 2016 இல் 336.91 மில்லியனும் 2017 இல் 360.95 மில்லியனும் 2018 இல் 454.77 மில்லியனும் 2019 இல் 483.52 மில்லியனும் 2020 இல் 502.37 மில்லியனும் 2021 இல் 555.82 மில்லியனும் 2022 நவம்பர் வரை 714.40 மில்லியனும் செலவு செய்யப்பட்டுள்ளதாக விநியோக பிரிவு 3 இன் தகவல்   அதிகாரி, பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.எம்.பிரதீப் தெரிவித்துள்ளார். 

இலங்கை மின்சார சபையின்   பரிமாற்ற பிரிவில் மின்கம்பி பரிமாற்ற நடவடிக்கைகளுக்காக இ.மி.ச.வுக்கு சொந்தமான 202 வாகனங்களும் 8 வாடகை வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மின்கம்பி பரிமாற்ற நடவடிக்கை அல்லாத செயற்பாடுகளுக்காக இ.மி.ச.வுக்கு சொந்தமான 57 வாகனங்களும் 5 வாடகை வாகனங்களும் பயன்படுத்தப்படுவதாக பரிமாற்ற பிரிவின் தகவல் அதிகாரி பொறியியலாளர் டீ.எஸ்ஆர். அழககோன் தெரிவித்துள்ளார். குறித்த வாகனங்களுக்கான    பராமரிப்பு, எரிபொருள், எண்ணெய், வாகன அனுமதி பத்திரம், வாகன வாடகை கட்டணம், மூலப்பொருட்கள் கொண்டு செல்வதற்கான கட்டணம் என்பவற்றுக்காக 2015 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1156.56 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் வாகன பராமரிப்புக்கு 522.56 மில்லியனும் வாகன எரிபொருள், எண்ணெய், வாகன அனுமதி பத்திரம் என்பவற்றுக்காக 498.87 மில்லியனும் வாடகை   வாகன கட்டணமாக 119.32 மில்லியனும் மூலப்பொருள் கொண்டு செல்வதற்கு 15.80 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை இலங்கை மின்சார சபையின் பரிமாற்ற பிரிவுக்கான போக்குவரத்து செலவுகளுக்காக 2015 இல் 94.92 மில்லியனும் 2016 இல் 114.09 மில்லியனும் 2017 இல் 105.34 மில்லியனும் 2018 இல் 138.84 மில்லியனும் 2019 இல் 153.38 மில்லியனும் 2020 இல் 135.59 மில்லியனும் 2021 இல் 154.89 மில்லியனும் 2022 இல் 259.49 மில்லியனும் செலவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் நிதிப் பிரிவில் 2022 ஆம் ஆண்டு 12 வாகனங்கள் ஊழியர்களின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. 2010 – 2022 ஆம் ஆண்டு வரை வாகனங்களுக்கான  எரிபொருள் கொடுப்பனவுகளுக்காக 49.80 மில்லியன் ரூபாவும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளுக்காக 44.58 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.  2021 ஆம் ஆண்டு 12 வாகனங்களுக்காக 6.8 மில்லியன் செலவு செய்யப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு 10.64 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக நிதிப் பிரிவின் தகவல் அதிகாரி ஜயலத் தெரிவித்துள்ளார்.

விநியோக பிரிவு 2 இல் கடமையாற்றும் ஊழியர்களுக்கான வருடாந்த போக்குவரத்துக்கு 2016 – 2022 ஆம் ஆண்டு வரை 3712.46 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவின் தகவல் அதிகாரி பொறியியலாளர் எச்.எம்.கே.ஜே.வீரசூரிய தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு 678 வாகனங்களுக்காக 771.24 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 2016 இல் 346.52 மில்லியனும் 2017 இல் 385.86 மில்லியனும் 2018 இல் 448.86 மில்லியனும் 2019 இல் 527.87 மில்லியனும் 2020 இல் 550.94 மில்லியனும் செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மின்சார சபையின் திட்ட முகாமைத்துவ பிரிவின் போக்குவரத்துக்காக 276 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் 2015 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 49.05 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக இப்பிரிவின் தகவல் அதிகாரி பொறியியலாளர் என்.எஸ்.கலன்சூரிய தெரிவித்துள்ளார். 

இதேவேளை சொத்து முகாமைத்துவ பிரிவிலுள்ள ஊழியர்களால் பயன்படுத்தப்படும் 18 வாகனங்களுக்காக     28.31 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கான மருத்துவ செலவுகள்

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 40 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் வருடத்தில் ஒரு தடவையாவது விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வருடாந்தம் 25 ஆயிரம் ரூபா ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் இ.மி.ச. ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனைகளுக்காக வருடாந்தம் 12,500 ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. பெண் ஊழியர்களுக்கு 21 வகையான    பரிசோதனைகளும்   ஆண் ஊழியர்களுக்கு 20 வகையான பரிசோதனைகளும் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது. மேலும் இ.மி.ச. ஊழியர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்கலாக வருடாந்தம் தலா 347,000 ரூபா பெறுமதியான மருத்துவ காப்பீடு வழங்கப்படுகின்றது. 

இதனடிப்படையில் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் மருத்துவ செலவுகளுக்காக 2015 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 7710 மில்லியன் ரூபா (771 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதில் 2022 நவம்பர் வரை 5241 மில்லியன் ரூபா (524.1 கோடி) செலவு செய்யப்பட்டுள்ளதாக இ.மி.ச. நிதி பிரிவின் தகவல் அதிகாரி, மேலதிக நிதி முகாமையாளர் எஸ்.ஜயலத் தெரிவித்துள்ளார்.

இறுதியாக 2022 ஆம் ஆண்டு மருத்துவச் செலவுகளுக்காக 1258 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2022 நவம்பர் வரை 554 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருந்தது. இதில் சொத்து முகாமைத்துவ பிரிவிலுள்ள ஊழியர்களின்  மருத்துவ செலவுக்காக  184.36 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

விநியோக பிரிவு 1 இல் கடமையாற்றும் ஊழியர்களுக்கான வருடாந்த மருத்துவ செலவுகளுக்காக 2015 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1359.94 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் 942.31 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. 2022 இல் 217.44 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் 119.3 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கை மின்சார சபையானது, வருமானத்தை விடவும் அதிகமான செலவுகளை கொண்டுள்ளதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன. 2022 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளுக்கு மாதாந்தம் சுமார் 3500    மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதை      மின்சக்தி   அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இ.மி. சபை ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக மாத்திரம் அதிகளவான வருமானத்தை ஈட்டவேண்டியுள்ளது. இதற்கு மின் கட்டணங்களை அதிகரித்து பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்படுத்தப்படுகின்றது.

News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In
News

யானை – மனித முரண்பாடும் அதிகரிக்கும் உயிரிழப்புக்களும் !

வீ.பிரியதர்சன் உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் தொடர்கதையாகி வருகின்றன. இதில் முக்கியமாக யானை – மனித முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இலங்கையில்…

By In
News, Uncategorized

இரத்தினபுரி மாவட்ட ஊடவியலாளர்களுக்கான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை  

பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான தகவல் அறியும் உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து ஊடகவியலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் RTI…

By In
News

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறிமுறை வலுப் பெற வேண்டும்!

வீ.பிரியதர்சன் சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப்பொறுப்பு, பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெறவே அனைவரும் முயற்சிக்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் வரும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. இதற்கு முக்கிய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *