News

போதைப்பொருள் கடத்தலுக்காக வெளிநாடுகளில் கைதாகும் இலங்கையர்கள்

By In

க.பிரசன்னா

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாகும். நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகவும் ஆண்கள் கட்டுமானம் உள்ளிட்ட ஏனைய துறைகளில் வேலைவாய்ப்பை பெற்றுச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

 இவ்வாறு வெளிநாட்டு    வேலைவாய்ப்புக்காகச் செல்லும்  பலர் வன்முறைகள், துன்புறுத்தல்களை எதிர்கொள்வதைப் பற்றி நாம் அதிகம் பேசிக்கொண்டிருந்தாலும் மறுபுறும் குற்றங்களுக்காக வெளிநாடுகளில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது.

இலங்கையிலிருந்து பல்வேறு நோக்கங்களுக்காக பலரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் நிலை காணப்படுகின்றது. வேலைவாய்ப்பு, வணிக நடவடிக்கை, கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்காகச் சென்றாலும் அங்கு அவர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத நடவடிக்கைகளின் காரணமாக தடு;த்து வைக்கப்படவோ அல்லது சிறைத் தண்டனைக்கோ உள்ளாகின்றனர். இந்நிலையில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகாகச் சென்று குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்ற நபர்களின் விபரங்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய தகவல்கள்

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு உள்ளிட்ட அதிகமான தொழிலாளர்களை உள்வாங்கும் நாடுகளில் குற்றங்களில் ஈடுபட்டு    25.07.2022 ஆம் திகதி வரை 541 இலங்கையர்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 32 பேர் கொலைக் குற்றங்களுக்காகவும் 350 பேர் போதைப்பொருள் குற்றம் அல்லது மதுபானம் விற்றமை தொடர்பாகவும் 156 பேர் ஏனைய குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் அதிகமாக கட்டார் நாட்டில் 153 இலங்கையரும்    குவைத்தில் 142 இலங்கையரும்    சவுதி அரேபியாவில் 125 இலங்கையரும் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். அதிகமாக குவைத்தில் 121 பேரும் கட்டாரில் 119 பேரும் சவுதியில் 82 பேரும் போதைப்பொருள் குற்றம் அல்லது மதுபான விற்பனையுடன் தொடர்புடையவர்களாவர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வழங்கிய தகவல்கள்

இதேவேளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு மேற்கொள்ளப்பட்ட தகவல் கோரிக்கையின் அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள 39 இலங்கை தூதரங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களில் இருந்து தகவல் வழங்கப்பட்டிருந்தது. 

மத்திய கிழக்கு நாடுகள்

றியாத் மற்றும் ஜெத்தா: சவுதி அரேபியாவுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்ற 131 பேர் இதுவரை குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் 68 பேருக்கான தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 63 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகமாக 86 பேர் போதைப்போருள் மற்றும் மதுபானத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர்   கொலை, திருட்டு, நிதிசார் குற்றம், பாலியல் துன்புறுத்தல், இலஞ்சம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர். ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் றியாத்திலிருந்து 51 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஜெத்தா தூதரக தகவல்களின் அடிப்படையில், 13 இலங்கையர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொலை, போதைப்பொருள், மதுபானம், திருட்டு உள்ளிட்ட   குற்றங்களுக்காக   இவர்கள்   தண்டனை பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தண்டனை பெற்ற 57 பேர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 

அபுதாபி: ஐக்கிய அரபு இராச்சிய அரசு தூதரகங்களுக்கு எந்த தகவலையும் அம்பலப்படுத்துவதில்லை. பல முறை வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல்களை பெறுமாறு     தூதரகத்தால்    கோரப்பட்டது.   ஐக்கிய அரபு இராச்சியத்தின் விதிகளை மீறுதல், அதிக நேரம்     தங்கியிருப்பது, போதைப்பொருள்       உட்கொள்வது அல்லது விற்பது மற்றும் எந்தவித சட்டவிரோத நடவடிக்கையிலும் கலந்து கொள்வது போன்ற காரணங்களால் இலங்கையர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 2020 முதல் ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம்    தூதர அதிகாரிகள் சிறைச்சாலைகளுக்கு    வருகை   தருவதை அனுமதிக்கவில்லை. ஏப்ரல் 2022 இல் சிறைச்சாலை வருகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, அதன் பின்னர் தூதரக அதிகாரிகள் 43 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நேரில் பார்வையிட்டனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிக்கையின்படி 110 கைதிகள் குறிப்பிட்ட காலத்திற்கு எஞ்சியுள்ளனர்.  

நாடு கடத்தல் முகாம்கள் தற்காலிக பயண ஆவணத்தை கோரினால் மட்டுமே திருப்பி அனுப்பப்படுவது பதிவு செய்யப்படும். கைதிகளிடம் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகள் இருக்கும்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறைகள் அவர்களை தூதரகத்துக்கு தெரிவிக்காமல்    நேரடியாக    நாடு   கடத்தியது. 2014   முதல் 2022 வரையான காலப்பகுதியில் 1207 தற்காலிக பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன.

குவைத்: குவைத் தூதரகத்தின் தகவல்களின் அடிப்படையில் 161 புலம்பெயர் தொழிலாளர்கள் குற்றச்செயல்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன்: 2022 செப்டெம்பர் மாதம் வரை 13 இலங்கை கைதிகள் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2016 இல் 21 பேரும் 2017 இல் 46 பேரும் 2018 இல் 27 பேரும் 2019 இல் 22 பேரும் 2020 இல் 10 பேரும் 2021 இல் 24 பேரும் இவ்வாறு சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். இலங்கைக்கும் பஹ்ரைனுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் எதுவும் இல்லை. எனவே, பஹ்ரைன் சிறைகளில்   உள்ள    இலங்கை     கைதிகளை   மாற்றுவதற்கு வசதியாக தற்போது எந்த ஏற்பாடும் இல்லை.

ஜோர்தான்: ஜோர்தான் தூதரக தகவல்களின்படி, 21 பேர் இந்நாட்டில் கைதிகளாக உள்ளனர். 6 பேர் பல்வேறு குற்றங்களுக்காகவும் 3 பேர் திருட்டில் ஈடுபட்டதற்காகவும் 12 பேர் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தமை மற்றும் வெளியேறியமைக்காகவும் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளனர்.

கட்டார்: இந்நாட்டில் 2010 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 705,967 பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக பணியாற்றியுள்ளனர். 2010-2022 வரை தகவல் கோரப்பட்ட காலத்தின் அடிப்படையில், தூதரகமானது கட்டார் அரசாங்கத்திடம் இருந்து தகவல்களை சேகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. எனினும் புலம்பெயர் தொழிலாளர் அல்லாத 156 இலங்கையர்கள் (154 ஆண்கள், 2 பெண்கள்) டோஹாவில் கைதிகளாக உள்ளனர். 

லெபனான்: இந்நாட்டில் 2015 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குற்றங்களில் ஈடுபட்ட 827 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 89 ஆண்களும் 738 பெண்களும் உள்ளடங்குவர். குற்றங்களில் ஈடுபட்ட 590 பேர் தூதரகங்களிலும் 237 பேர் தடுப்பு    முகாம்களிலும்     சட்டவிரோதமாகவும் தங்கியுள்ளனர். இவற்றில் 237 கைதிகள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நால்வருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்: 36 பேர் குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். அவர்களில் 34 பேர் அவ்வப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான்: ஈரானுக்கான இலங்கைத் தூதரக தகவல்களின்படி, போதைப்பொருள் கடத்தலுக்காக ஈரானில் ஒருவரும் அசர்பைஜான் நாட்டில் பெருங்குற்றத்துக்காக ஒருவரும் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.

துருக்கி:  துருக்கியில் 124 இலங்கையர்கள் (32 – தொழில் வல்லுனர்கள், 3 – வீட்டு பணியாளர்கள், 74 – தொழிலாளர்கள், 15 – சுய தொழில் உரிமையாளர்கள்) சிறைக் கைதிகளாக உள்ளனர். உக்ரைனில் 61 இலங்கையர்கள் (20 – தொழில்   வல்லுனர்கள், 2 – தொழிலாளர்கள், 39 – சுய தொழில் உரிமையாளர்கள், 7 – சட்டவிரோத குடியேற்றவாசிகள்) சிறைக் கைதிகளாக உள்ளனர். ஜோர்ஜியாவில் ஏழு இலங்கை தொழில் வல்லுனர்கள் சிறையிலுள்ளனர். 28.11.2022 இல் உக்ரைனில் 03 வல்லுனர்கள் மற்றும் 08 சுய தொழில்   உரிமையாளர்கள்    மட்டுமே உள்ளனர். உக்ரைனில் நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ் 07 சட்டவிரோத குடியேற்றவாசிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.    

ஜகர்த்தா: 2022 இல் இடம்பெயர்வுக்கான சர்வதேச ஸ்தாபனத்தின் காவலில் இருந்த 4     இலங்கையர்களைத் திருப்பி   அனுப்பும் பணியை தூதரகம் ஒருங்கிணைத்தது. அவர்கள்  அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு குடிபெயரும் நோக்கத்துடன் இந்தோனேசியாவிற்கு வந்துள்ளனர். தூதரகம் 2022 இல் இந்தோனேசியாவிற்கு வந்த மேலும் 7 இலங்கையர்களை நாடு கடத்தும் பணியை ஒருங்கிணைத்தது. இவர்கள் வேலை வாய்ப்புகளை நாடி, முகவரால் ஏமாற்றப்பட்டனர். இந்தோனேசியாவில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி தடுப்பு மையங்களில் இருந்த 20 இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு தூதரகம் வழிவகுத்தது. அவர்கள் வேலை வாய்ப்புகளை தேடிக்கொடுக்கும் முகவரால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்

வாஷிங்டன் : அமெரிக்க அரசாங்கம் அதன் கடுமையான தனியுரிமைச் சட்டங்களின் அடிப்படையில் இதுபோன்ற தகவல்களை தூதரங்களுக்கு வழங்குவதில்லை. எனவே, அத்தகைய புள்ளிவிவரங்கள் தூதரக வசம் இல்லை. குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் – அத்தகைய சிறைத்தண்டனைக்கான பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

பிரசெல்ஸ்: 2021 இல் பெல்ஜியத்திலுள்ள இரண்டு சிறைச்சாலைகளில் 2 இலங்கை கைதிகள் இருந்தனர், தற்போது ருர்ன்ஹ_ட் சிறைச்சாலையில் ஒரு இலங்கை கைதி மட்டுமே உள்ளார். பெல்ஜியத்தில் உள்ள தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு சட்டங்களின்படி, கைதிகள் மற்றும் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய மேலதிக தகவல்களை தூதரகம் பெற முடியாது. கடந்த வருடங்களில் லக்சம்பேர்க்கில் இலங்கை பிரஜைகள் எவரும் சிறை வைக்கப்பட்டிருக்கவில்லை. 

ஆஸ்திரியா: தூதரகத்தில் கிடைக்கப்பெறும் பதிவுகளின்படி, மேற்படி காலப்பகுதியில் குடிவரவுச் சட்டத்தை மீறியமை, சட்டவிரோதமான எல்லைக் கடப்பு, மனித கடத்தல் மற்றும் தவறான நடவடிக்கைகளுக்காக 34 இலங்கையர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் செர்பியாவில் 8 பேரும் ஹங்கேரியில் 12 பேரும் ஆஸ்திரியாவில் 8 பேரும் ரோமானியாவில் மூன்று பேரும் பொஸ்னியாவில் இரண்டு பேரும் ஸ்லோவேனியாவில் ஒருவரும் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

2010 – 2022 காலப்பகுதியில் ஆஸ்திரியாவிலிருந்து இருவரும் ஹங்கேரியிலிருந்து நால்வரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். (புலம்பெயர் தொழிலாளர்)

கனடா , டொரண்டோ: கனடாவில் நடைமுறையில் உள்ள தனியுரிமைச் சட்டத்தின்படி, சிறைத்தண்டனை, சிறைத்தண்டனை பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி தூதரகத்துக்கு தெரிவிக்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், தபாலில் உள்ள பதிவேடுகளின்படி, கனடா எல்லை சேவை முகாமையின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை பிரஜைகள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவதற்காக 2017 – 2022 வரை 114 தற்காலிக பயண ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

கனடா, ஒட்டாவா: 2013 – 2022 நவம்பர் வரையான காலப்பகுதியில் 75 கைதிகளுக்கு தற்காலிக பயண ஆவணங்கள் வழங்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்து:   இலங்கை பெண் ஒருவர் குற்றவியல் குற்றம் செய்ததாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

லண்டன்:   பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் காரணமாக, ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறது. எனவே, இது தொடர்பான விபரங்களை உள்துறை அலுவலகத்திடம் இருந்து தூதரகம் கோரியது மற்றும் தகவல் கிடைத்ததும் தெரிவிக்கப்படும்.

ஸ்டொக்ஹோல்ம்:   ஸ்வீடனில்   வீட்டு    வன்முறையில்     ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது நாடு திரும்பியுள்ளார். (இவர் புலம்பெயர் தொழிலாளர் அல்லர், மாணவர் விசாவில் இருந்தார்) – லத்வியாவில் ஒருவர் கைது (அவர் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியா என்ற விவரங்கள் கிடைக்கவில்லை)

போலாந்து: ரோமானியாவில் கொலை மற்றும் சண்டையில் ஈடுபட்ட இருவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி (ரோம்): புலம்பெயர் தொழிலாளர்கள் 27 பேர் குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ளனர்.

ஆபிரிக்க நாடுகள்

தென்னாபிரிக்கா: குற்றங்கள் தொடர்பில் 2015 – 2016 இல் மொசம்பிக்யூ நாட்டில் இருவரும் 2018 இல் தென்னாபிரிக்காவில் ஏழு பேரும் 2021 இல் நமிபீயாவில் ஒருவரும் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.

நைரோபி: தூதரகத்தில் உரிய பதிவுகள் இல்லை. 2021-2022 காலகட்டத்தில் தன்சானியா வழியாக லண்டனுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்றதற்காக, இலங்கையரான கே.பிரசாந்தன், தன்சானியாவில் சிறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

திருடியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சுற்றுலா பயணி ஒருவர் ருவாண்டா, ருபாவு மாவட்டத்தில் உள்ள ஜிசென்யி புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எகிப்து: 2007 ஆம் ஆண்டு குற்றத்தில் ஈடுபட்டமைக்காக ஒரேயொரு இலங்கையர் தற்போது சிறைதண்டனை பெற்று வருகின்றார்.

ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகள்

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்கள் அல்லாத 141 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் 55 பேரும் கேரளாவில் 38 பேரும் கர்நாடகாவில் 48 பேரும் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.

ஷாங்காய்:  சீனாவில்  புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

குவாங்சூ: (துணைத் தூதரகத்தின் அங்கீகாரம் பெற்ற மாகாணங்களில்) வேலை தேடும் இலங்கையர் எவரும் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் செய்யப்பட்ட குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு வர்த்தக நோக்கத்திற்காக சீனாவின் குவாங்சோவுக்குச் சென்ற இலங்கைப் பிரஜை   ஒருவருக்கு சட்டவிரோதமாக நாட்டுக்கு பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் சிறைத் தண்டனை முடிந்து இலங்கைக்கு திரும்பினார்.

கொரியா: சீனாவில் புலம்பெயர் தொழிலாளர் 37 பேர் குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். தண்டனை பெற்ற நிலையில் 27 பேர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

மலேசியா: புலம்பெயர் தொழிலாளர்கள் 297 பேர் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் 181 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்தமைக்காகவும் 33 பேர் மனித கடத்தலுக்காகவும் 29 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காகவும் தண்டனை பெற்றுள்ளனர். மேலும் விபச்சாரம், பாலியல் துஷ்பிரயோகம், கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்காகவும் பலர் தண்டனை பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ்: புலம்பெயர் தொழிலாளர் இருவர் குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ளனர்.

சிங்கப்பூர்: 2011 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட 4903 புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும் நிலையில் அவர்களில் 1061 பேர் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றுள்ளனர். (அந்தந்த ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகளின் விவரங்கள் அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரிவின் கீழுள்ளவர்களா அல்லது சுற்றுலாப் பிரிவின் கீழ் உள்ளவர்களா என்பதைக் குறிப்பிடவில்லை)

தாய்லாந்து: புலம்பெயர் தொழிலாளர் 110 பேர் குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இலங்கைக் கைதிகள் எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிக்க இலங்கைக்கு மாற்றப்பட்டதாக எந்தப் பதிவும் இல்லை. குற்றவாளிகளை மாற்றுவது மற்றும் தண்டனையை அமுல்படுத்துவதில் ஒத்துழைப்பு (கைதிகளின் சர்வதேச பரிமாற்றம்) 26 அக்டோபர் 2019 முதல் நடைமுறைக்கு வந்தது.

டோக்கியோ: 2022 நவம்பர் வரையான காலப்பகுதியில் 20 புலம்பெயர் தொழிலாளர்கள் தண்டனை பெற்று திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கான்பெரா (அவுஸ்திரேலியா): 2010 ஆம் ஆண்டு முதல் 2022 நவம்பர் இறுதி வரை 77 இலங்கைப் பிரஜைகள் குயின்ஸ்லாந்து புனர்வாழ்வுச் சேவைகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இரகசியத்தன்மை காரணங்களுக்காக குற்றம் தொடர்பான தகவல்களை வழங்க முடியாது.

வெளிநாடுகளில் தண்டனை பெற்ற இலங்கையரை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு 1995 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றவாளிகளைப்     பரிமாறிக்கொள்ளும் சட்டம் நடைமுறையிலிருந்தாலும் இலங்கையர் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நாட்டினுடைய       உள்நாட்டு சட்டங்கள்       எவ்வாறு அமைந்திருக்கின்றன மற்றும் குற்றவாளி பெற்றுள்ள தண்டனை என்பவற்றைப் பொறுத்தே கைது செய்யப்பட்டவர்களின்     விடுதலையும் தண்டனை        நிறுத்தமும் குற்றவாளிகளை பரிமாறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் சட்டங்கள்     மிகவும் கடுமையானதாகவும்      இலகுவில் சமரசத்துக்கு உட்படாத வகையிலும் அமைந்திருப்பதால் அங்கு தண்டனை பெற்றவர்களை உடனடியாக விடுவிப்பதோ, நாட்டுக்கு மீண்டும் அழைப்பதோ இலகுவான விடயமல்ல. 

News

முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் என்ன?

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் நீண்டு செல்லும் நிலையில் தொடர்ச்சியாக அவர்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியொதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான…

By In
News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  யாழ். குடாநாட்டில்…

By In
News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை…

By In
News

2025 மார்ச் முதல்முழுமையாக அமுலுக்கு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்

ஜனக சுரங்க தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *