க. பிரசன்னா
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
தோட்டத் தொழிலாளர்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் விபத்துக்களுக்கு இதுவரை எந்தவொரு காப்புறுதித் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. பணியிடங்களில் அவர்கள் சந்திக்கும் விபத்துக்களுக்கு தோட்ட நிர்வாகம் போதிய நிவாரணம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் பயன் பெறும் வகையில், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து இலங்கை பெருந்தோட்ட மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரத்தியேகமான ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடான ஜீவன சக்தி காப்புறுதி திட்டத்தை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது.
இலங்கை பெருந்தோட்ட மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள விசேட காப்பீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம், காப்புறுதி உரிமையாளர் மரணித்தால், நிரந்தர இயலாமை அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய நிதி ஸ்திரத்தன்மையினை வழங்குமெனவும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் குறிப்பிடப்பட்டது.
இந்த பின்னணியில் ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளதா?, காப்புறுதி திட்டத்துக்குள் தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்களா?, காப்புறுதி திட்டம் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் இலாபம் பெற்றது யார்? என்பது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளது.
இவ்வாறான கேள்விகள் எழுவதற்கு ஜீவன சக்தி காப்புறுதி திட்டத்தின் நோக்கம் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதே பிரதான காரணமாகும். ஜீவன சக்தி காப்புறுதி திட்டத்தின் மூலம் காப்புறுதிதாரர்களாக இணைக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குறிப்பிட்ட காப்புறுதி திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் நன்மை பெறவில்லை என்பது கண்டறியப்பட்டது.
ஜீவன சக்தி காப்புறுதித் திட்டத்துக்கு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் அதன் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும் அனுசரணை வழங்கிய போதும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக அமைச்சுக்கு முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கை தொடர்பான மேன்முறையீட்டு விசாரணையின் போது, ஜீவன சக்தி காப்புறுதி தொடர்பில் எவ்வித தகவலும் இல்லையெனவும் அதனை சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளுமாறும் ஆணைக்குழு முன்பாக அறிவித்திருந்தது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி ஜீவன சக்தி காப்புறுதி திட்டத்தின் அங்குரார்பண நிகழ்வு கொழும்பு ஹில்டன் கிரேண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. இவ்வாறு பல இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை ஒரு தொழிலாளர் கூட உள்வாங்கப்படவில்லை. இந்த திட்டத்துக்காக 04.09.2024 ஆம் திகதி வரை எவ்வித கட்டணங்களும் அறவிடப்படவில்லை எனவும் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் தோட்ட நிர்வாகத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க முடியுமெனவும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
குறித்த காப்புறுதி திட்டம் தோட்டத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்க முடியுமென கூறி கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்தாலும் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களுக்கு அவை தொடர்பில் எவ்வித விழிப்புணர்வு நடவடிக்கைகளோ அல்லது அவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களையோ வழங்காமையால் தற்போது இத்திட்டம் தோல்வியடைந்த மற்றும் கைவிடப்பட்ட திட்டமாகவே காணப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்கள் விண்ணப்பத்தை தங்களின் சம்மதத்துடன் பூர்த்தி செய்து அவர்களின் தோட்ட முகாமையாளருக்கு பிரீமியம் கட்டணத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக 99 ரூபா அறவிடப்படுமென கூறப்பட்டது. தோட்ட முகாமைத்துவமே விண்ணப்பங்களையும் பிரீமியம் கட்டணத்தையும் சேகரிக்க வேண்டும். இந்நடவடிக்கையுடன் அரசாங்கம் எந்த தொடர்பையும் பேணாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரச செலவில் உருவாக்கப்பட்ட காப்புறுதி திட்டத்தில் உள்வாங்கப்படும் தொழிலாளர்கள் அதன் பின்னர் எவ்வித கரிசனைகளுக்கும் உட்படமாட்டார்கள். ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் தங்களது காப்புறுதி திட்டத்தை பிரபல்யப்படுத்துவதற்காக தோட்டத் தொழிலாளர்களை இலக்கு வைத்தாலும் அது சாதகமாக அமையவில்லை.
அனைத்து பெருந்தோட்ட கம்பனிகளும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸின் ஆதரவுடன் அந்தந்த நிறுவனங்களுக்கு ஜீவன சக்தி காப்புறுதி பொதியை ஊக்குவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அந்தந்த நிறுவனங்களே தோட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதி தொடர்பான விபரங்களை ஊக்குவிக்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
18-70 வயதுக்குட்பட்ட அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் இத்திட்டத்துக்கு தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு மாதாந்தம் 99 ரூபா வீதம் கட்டணம் அறவிடப்படும். எனினும் பணத்தை செலுத்துவதற்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனத்திடையே எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குறித்த காப்புறுதித் திட்டம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள போதும், இதுவரை எவ்வித தோட்டத் தொழிலாளர் குடும்பங்களும் காப்புறுதி திட்டத்துக்குள் உள்வாங்கப்படவில்லை.
காப்புறுதி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரதியை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அதனை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவர் பரத் அருள்சாமியிடம் வினவிய போது, “ஜீவனசக்தி காப்புறுதி திட்டம் தொடர்பில் முதல் கட்டமாக ஹட்டன், புசல்லாவ மற்றும் அகவலவத்தை பெருந்தோட்ட நிறுவனங்களில் விழிப்புணர்வு மற்றும் தெளிவுபடுத்தல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. எனினும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இத்திட்டத்துக்கு பொறுப்பானவர்கள் தொடர்ச்சியாக மாற்றத்துக்கு உள்ளானமையால் இத்திட்டத்தை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியவில்லை. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் காப்புறுதி திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையை மாத்திரமே முன்னெடுத்தது. 99 ரூபா பணத்தை செலுத்தி காப்புறுதி திட்டத்துக்குள் இணைய பலரும் ஆர்வம் காட்டவில்லை. 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை இதற்கான கால வரையறை காணப்பட்ட போதும், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் அது தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை” என தெரிவித்தார்.
ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் தொடர்பில் பின்வரும் விடயங்கள் விளம்பரம் செய்யப்பட்டிருந்தன. பெருந்தோட்ட தொழிலாளர் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு இந்த காப்புறுதித்திட்டம் செல்லுபடியாகும். காப்புறுதிதாரர் மரணம் அல்லது நீண்டகால நோய்களுக்கு ஆளாக நேரிடும் பட்சத்தில் இழப்பீட்டுத்தொகையாக 300,000 ரூபா வழங்கப்படும். காப்புறுதி செய்தவர் ஆகக்குறைந்தது 48 மணித்தியாலங்கள் வைத்தியசாலையில்; அனுமதிக்கப்படும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 500 ரூபா வீதம் வழங்கப்படும்.
இதற்கு மேலதிகமாக 25 வகையான நோய்களுக்கு முதலாம் நபரான காப்புறுதிதாரருக்கு 100,000 ரூபாவும் அவரது துணைக்கு 50,000 ரூபாவும் வழங்கப்படும். பிள்ளைகளுக்கு தீவிர நோய்கள் மற்றும் மரண கொடுப்பனவுகள் வழங்கப்படும். இதுவே இந்த ஜீவன சக்தி காப்பீட்டுத் திட்டத்தின் ஆரம்ப வேலைத்திட்டமாக உள்ளது.
மேற்படி திட்டத்தின் பரீட்சார்த்த செயற்றிட்டம் சுமார் 5000 தொழிலாளர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் முதற்கட்டமாக ஹட்டன், அகலவத்தை, புசல்லாவை, மத்துரட்ட, பொகவந்தலாவை மற்றும் அரச பெருந்தோட்ட யாக்கம் ஆகிய பெருந்தோட்ட கம்பனிகளின் கீழ் தொழில் புரியும் தொழிலாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்ட போதும் இத்தகவல் பெற்றுக்கொள்ளப்படும் வரை எவரும் காப்புறுதி திட்டத்துக்குள் உள்வாங்கப்படவில்லை.
பணியிடங்களிலும் வாழ்விடங்களிலும் பல்வேறு அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம் முக்கிய அம்சமாக காணப்பட்டாலும் அரச நிறுவனங்களே அவற்றை கவனத்திலெடுத்து செயற்படாமை கவலைக்குரிய விடயமாகும். 200 வருடங்களாக பல்வேறு இன்னல்களை அனுபவித்த அவர்கள் இன்றும் தங்களுடைய உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஊழியர்களுக்கான காப்புறுதி திட்டத்தை வழங்க வேண்டியது தோட்ட நிர்வாகங்களின் கடமையாக இருந்தாலும் அதற்கான எந்த ஏற்பாடுகளும் காணப்படவில்லை. அத்துடன் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனம் இலங்கையில் பொது நிறுவனமாக இருக்கும் நிலையில் இவ்வாறு பாரிய நிதிச் செலவில் அங்குரார்ப்பண நிகழ்வுகளை மேற்கொண்டு அந்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த முடியாதிருப்பது பொது நிதியை வீணடிப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
Recent Comments