News

இலங்கையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களின் பற்றாக்குறை

By In

கமனி ஹெட்டியாராச்சி

இலங்கையின் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் வேகமாகப் பரவிவரும் ஐஸ் என்ற போதைப்பொருள் குறித்த தலைப்பு அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஐஸ் போதைப்பொருளின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் பொருட்டு, நாட்டில் பாடசாலை மாணவர்களை முதன்மையாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

போதைப்பொருள் பரவிய வரலாறு 1505ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த காலப்பகுதியில் இலங்கை மக்களிடையே ஆரம்பமாகிறது.  ‘அபின்’ என்ற போதைப்பொருள் அக்காலத்தில் போதைக்கு அடிமையானவர்களிடையே பிரபலமாக காணப்பட்டது. 1970களின் பின்னர் இலங்கையில் ஹெரோயின் பிரதான போதைப்பொருளாக மாறியது. சிலர் இதை திறந்த பொருளாதார கொள்கையின் எதிர்மறை விளைவு என்று விளக்குகிறார்கள். ஹெரோயின் உலகின் முக்கிய போதைப்பொருளாக அடையாளம் காணப்பட்டாலும், இன்று இலங்கையில் Methamphetamine எனப்படும்  ஐஸ் போதைப்பொருள் ஒரு தொற்றுநோயாகப் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின்   புள்ளிவிபரங்களின்படி ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை சுமார் 93 இலட்சம் எனவும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு இலட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு சிறுவர்களிடையே வேகமாக பரவிவரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள நாசகார நிலைமையை சமாளிக்கும் வகையில், ஆபத்தை விளைவிக்கும் மருந்துகள் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகவே இது வலுவான சமூகப் பிரச்சனையாக பரிணாமம் எடுக்கும் செயற்பாடாக உணரமுடியுமாக உள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவும் அரசாங்கமும் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளை அடையாளம் கண்டு, போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளன.

போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். அந்த நபர்களை அவர்கள் குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி நல்ல மனிதர்களாக சமூகமயமாக்குவது அரசாங்கத்தின் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும். இலங்கையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான வதிவிட சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகள் அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்நாட்டில் போதைக்கு அடிமையானவர்களின் தேவையுடன் ஒப்பிடுகையில், புனர்வாழ்விற்கான அவசியமான வசதிகள் மிகக்குறைவாகவே காணப்படுவதாக இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள பல தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இது கவனம் செலுத்த வேண்டிய பாரிய சமூகப் பிரச்சினை ஆகும். 

நாட்டில் தற்போதுள்ள பெரும்பாலான புனர்வாழ்வு நிலையங்கள் முறையான தரத்திற்கு அமைவாக செயற்படுவதில்லை என இது தொடர்பில் பணிபுரியும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மனோஜ் பெர்டினாந்து சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையானது நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிக்கும் நோக்கில் தனது பணிகளை முன்னெடுத்துவரும் முன்னோடி அரச நிறுவனமாகும். இவர்களின் ஏனைய பணிகளில், போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, போதைப்பொருளின் மீது தங்கியிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, மறுவாழ்வு என்பன முக்கியமானவை. 

போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு வலுவான தடையாக காணப்படும் புனர்வாழ்வு மையங்களின் பற்றாக்குறை மற்றும் அது தொடர்பாக காணப்படும்  பல பிரச்சினைகள் குறித்து 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின்படி இலங்கையின் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபைக்கு 2022.11.16 ஆம் திகதி  அனுப்பப்பட்ட தகவல் கோரிக்கை விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கும் விதமாக  தகவல் அதிகாரி ஆர்.எம்.எஸ்.பி.எம். ரத்நாயக்க எமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க 17 அரச நிறுவனங்களும் 24 அரச சார்பற்ற நிறுவனங்களும்  காணப்படுகின்றன. மேற்படி கட்டுப்பாடு சபையால் 4 மையங்களும், சமூக சேவைகள் திணைக்களத்தால் இரண்டு மையங்களும் இயக்கப்படுகின்றன. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகம் ஒரு மையத்தையும், சிறைச்சாலைகள் திணைக்களம் 10 புனர்வாழ்வு மையங்களையும் (பெயரிடப்பட்ட ) நடத்துகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட 24 தனியார் மறுவாழ்வு மையங்கள் காணப்படுகின்றன, அந்த மையங்களில் 12 தனியார் சிகிச்சை மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

அந்த மையங்களில் இருந்து எத்தனை பேர் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கட்டுப்பாட்டு சபை, அந்த எண்ணிக்கையை பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது.

மேல் மாகாண தடுப்பு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிறுவனம் நாற்பது சிகிச்சையாளர்களையும், தென் மாகாண தடுப்பு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிறுவனம் 35 சிகிச்சையாளர்களையும், மத்திய மாகாண நிறுவனம் 35 சிகிச்சையாளர்களையும் கொண்டுள்ளது. நவ திகந்தய சிகிச்சை நிறுவனம் நூறு சிகிச்சையாளர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கிறது மற்றும் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கை  ஒரே நேரத்தில் புனர்வாழ்வளிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையாகும். அத்துடன் சிகிச்சையின் காலம் மூன்று மாதங்கள் ஆகும்.   

அந்த மையங்களில் நிலவும் நெரிசலைக் குறைக்க அல்லது தடுக்க இன்னும் எவ்வளவு இடவசதி அல்லது மையங்கள் தேவை என்ற கேள்விக்கு கட்டுப்பாட்டு சபை  பின்வரும் பதிலை அளித்துள்ளது. “போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ளவர்களுக்கான சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு சம்பந்தமான 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நீதிமன்றங்கள்  ஊடாக அனுப்பப்படும் சிகிச்சையாளர்களுக்கு  தற்போது காணப்படும் வசதிகளை உபயோகித்து சிகிச்சை அளிக்கப்படுகின்றன. வதிவிட சிகிச்சை அல்லாதவர்களுக்கு சமூக அடிப்படையிலான சிகிச்சையை வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”  

இந்த குறைந்த வசதிகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா? அந்த அதிகாரிகள் யார்? அவர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கட்டுப்பாட்டு சபை  ‘ஆம்’ என்று பதிலளித்ததுடன், சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எங்களுக்கு அனுப்பிய பதிலில் அந்த அதிகாரிகளின் பதவிகளோ பெயர்களோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய நாடுகள் சபையின் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான அமைப்பின் 2019 இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டு சனத்தொகையில் 15 முதல் 64 வயதுக்குட்பட்ட இருபத்தேழு மில்லியன் மக்கள் ஒரு முறையாவது போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 5.5 சதவீதம் ஆகும். இதன்படி, இந்த தலைப்பில் பேசப்படும் போதைப்பொருள் பிரச்சினை இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பது தெளிவாகிறது. ஆனால் இலங்கையின் போதைப்பொருள் பாதிப்பை மிக மோசமாக்கும் தனித்துவமான காரணிகளில், புவியியல் காரணியும் பிரதான பங்கை வகிக்கின்றது. 

உலகில் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் இரண்டு முக்கிய பிராந்தியங்களான பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு சொந்தமான கோல்டன் கிரசண்ட் மற்றும் பர்மா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தங்க முக்கோணத்திற்கும் இடையில் இலங்கை அமைந்துள்ளதால், போதைப்பொருள் கடத்தலில் இலங்கை ஒரு மையமாக மாறியுள்ளது.  இது விசேட கவனம் செலுத்த வேண்டிய காரணியாக திகழ்கின்றன. 

இலங்கையில் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபடும் அனைவரையும் சட்டத்தின் மூலம் கையாள்வதன் காரணமாக,  சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரித்துள்ளது. அந்த கைதிகளின் மறுவாழ்வுக்கான வசதிகள் இல்லாததால், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு மீண்டும் அதே குற்றங்களுக்குத் திரும்புகிறார்கள், இதன் விளைவாக அந்தக் குற்றங்களுக்கு மீண்டும் சிறைவாசம் அனுபவிக்க ஏற்படுகிறது. 

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்காக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை  அமைக்கப்பட்டாலும், தற்போதுள்ள புனர்வாழ்வு மையங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை அவர்களுக்குத் தடையாக இருப்பது தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. புனர்வாழ்வளிக்கப்படுவோம் என எதிர்பார்க்கும் ஒருவர் பல வருடங்களாக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டியுள்ளது என்பது வேதனையான உண்மை. இந்தப் பிரச்சினையை மேலும் மறைப்பதானது இதனை ஒரு தீவிர சமூக அவலமாகவே மாற்றும்.   

News

வட மாகாண பாடசாலைகளுக்கு மூடுவிழா?

ப.பிறின்சியா டிக்சி தனியொரு நபரின் ஆளுமையை வளர்த்தெடுத்து, அதன்மூலம் சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கல்வியை பாடசாலைகள் வழங்குகின்றன. இதனால்தான் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பாடசாலை கட்டுவது…

By In
News

மத்தள சர்வதேச விமான நிலையத்தினால் 10 வருடங்களில் வருமானம் 63 கோடி : செலவு 5876 கோடி!

க.பிரசன்னா பாரிய முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எதிர்பார்த்தளவு அதன்மூலம் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ள…

By In
News

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் 79 வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன

க.பிரசன்னா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வழக்குகளை வாபஸ் பெறுதல்,…

By In
News

வாடகை கட்டிடங்களில் இயங்கும் பொலிஸ் நிலையங்கள்

N.M. நஸ்ரான் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ‘சுபீட்சத்தின்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *