க.பிரசன்னா
நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதில் அம்பகமுவ கோரளை பிரதேச செயலகமானது, மூன்று பிரதேச செயலகங்களாக உருவாக்கப்பட வேண்டுமென முன்மொழியப்பட்டாலும் அம்பகமுவ கோரளை, நோர்வூட் என இரண்டு பிரதேச செயலகங்கள் மாத்திரமே உருவாக்கப்பட்டன.
இவ்வாறு கடும் முயற்சிகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட நோர்வூட் பிரதேச செயலகமானது, நோர்வூட் – தியசிறிகம பகுதியில் இயங்கி வருகின்றது. எனினும் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் குறித்த பிரதேச செயலகத்தை அங்கு பணிபுரியும் ஊழியர்களின் நலன்கருதி ஹட்டன் நகரத்துக்கு மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு ஆறு நாட்களில் முழுமையான தகவல்கள் வழங்கப்பட்டமை எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனடிப்படையில் உழியர்களின் நலன் கருதி மாத்திரமே குறித்த பிரதேச செயலகத்தை இடமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அறியமுடிந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் சனத்தொகைக்கு ஏற்ப பிரதேச செயலகங்களையும் அதிகரிப்பது தொடர்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் 2019.05.07 ஆம் திகதிய அமைச்சரவை கூட்டத்தில் உயர் சனத்தொகை அடர்த்தி மற்றும் உள்ளடக்குவதற்கான பாரிய விஸ்தீரணம் கொண்ட பிரதேசம் காணப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு பொதுச்சேவைகளை வழங்கும் போது எதிர்நோக்கப்படும் சிரமங்களையும் அனுகுவழியில் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்களையும் தவிர்க்கும் பொருட்டும் 2012 எல்லை நிர்ணயக்குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டும் நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட, நீல்தன்டாஹின்ன, தலவாக்கலை, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு மற்றும் நோர்வூட் ஆகிய புதிய பிரதேச செயலக பிரிவுகளை தாபிப்பதற்கு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, அம்பகமுவ கோரளை, நோர்வூட், கொத்மலை (கிழக்கு), கொத்மலை (மேற்கு), திஸ்பனை, வலப்பனை, நுவரெலியா, தலவாக்கலை, ஹங்குராங்கெத்த, மத்துரட்ட ஆகிய 10 பிரதேச செயலகங்கள் உருவாகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையானது, 12 ஆக அதிகரிக்கப்படவேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் அம்பகமுவ கோரளை பிரதேச செயலகமானது, அம்பகமுவ கோரளை, நோர்வூட் என இரண்டாகவும் நுவரெலியா பிரதேச செயலகமானது, நுவரெலியா, தலவாக்கலை என இரண்டாகவும் கொத்மலை பிரதேச செயலகமானது, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு என இரண்டாகவும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலகமானது, ஹங்குராங்கெத்த, மத்துரட்ட என இரண்டாகவும் வலப்பனை பிரதேச செயலகமானது, வலப்பனை, திஸ்பனை என இரண்டாகவும் அதிகரிக்கப்பட்டு முதற் கட்டமாக 10 பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் தலவாக்கலை மற்றும் நோர்வூட் உப பிரதேச செயலகங்களாக செயற்பட்ட நிலையில் கடந்த 29.05.2023 ஆம் திகதி பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டது. நோர்வூட் – தியசிறிகம பகுதியில் இயங்கி வரும் நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் நகரில் அமைந்துள்ள புகையிரத நிலைய கட்டிடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், தற்போது நுவரெலியா மாவட்டத்தில் 10 பிரதேச செயலகங்கள் இயங்கி வருவதுடன் திஸ்பனை, வலப்பனை மற்றும் மதுரட்ட அலுவலகங்களில் பிரதேச செயலாளர்கள் இல்லாததால், அவ்வலுவலகங்கள் உப அலுவலகங்களாக தற்போது செயற்பட்டு வருகின்றன. அம்மூன்று பிரதேச செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்குரிய ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 10 பிரதேச செயலகங்களும் அரசாங்க கட்டிடங்களிலேயே தற்போது இயங்கி வருகின்றன. நோர்வூட் பிரதேச செயலாளரினால் குறித்த பிரதேச செயலகத்தை இடமாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, குறித்த கோரிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் புகையிரத திணைக்களத்துக்குரிய கட்டிடத்துக்கு கொண்டு செல்வதற்கு நோர்வூட் பிரதேச செயலாளரினால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் சேவை பெறுகின்ற பொது மக்களுக்கும் போதுமான இடவசதியின்மை மற்றும் போக்குவரத்து சிரமங்கள் காரணமாகவும் நோர்வூட் பிரதேச செயலகம் தியசிறிகம எனும் கிராமத்தில் அமைந்துள்ளதுடன் பிரதேச செயலகத்திலிருந்து நோர்வூட் நகரத்துக்கும் ஹட்டன் நகரத்துக்கும் சமமான தூரமே காணப்படுவதால் இவ்வாறு இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச செயலகமானது, ஹட்டன் புகையிரத கட்டிட நிலையத்துக்கு இடமாற்றப்படுவதால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அது பயனள்ளதாக அமையும். ஆனால் பொதுமக்களுக்கு அது மேலதிக சுமையை ஏற்படுத்தும் என்பதே உண்மை. குறிப்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பொகவந்தலாவ, காட்மோர், சாமிமலை, மஸ்கெலியா, நல்லத்தண்ணி ஆகிய பிரதான மற்றும் பின்தங்கிய இடங்களைச் சுற்றியுள்ள தோட்டப்புறங்களைச் சேர்ந்த மக்களே சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
இதனால் குறித்த பிரதேச செயலகத்தை நோர்வூட் பகுதிக்கு மாற்றினால் பொதுமக்களின் பயண தூரம் மற்றும் செலவை ஓரளவுக்கு குறைக்க முடியும். அத்துடன் சனநெரிசலின்றி சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கேற்றவகையிலான இடப்பரப்பை தெரிவு செய்து புதிய கட்டிடத்தை உருவாக்கவோ அல்லது இருக்கும் கட்டித்தை பயன்படுத்தவோ முயற்சிக்கலாம் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஹட்டன் நகரமானது ஏற்கனவே சனநெரிசல்மிக்க பகுதியாகும். மேற்படி பகுதிகளிலிருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் மக்கள் ஹட்டன் பஸ் நிலையத்துக்கு வருவதற்கான பொதுப் போக்குவரத்து வசதி காணப்பட்டாலும், ஹட்டன் புகையிரத நிலைய கட்டிடத்துக்கு நடந்தோ அல்லது வாடகை வாகனங்களிலோ செல்ல வேண்டி ஏற்படும். வாடகை வாகனத்தில் பயணிப்பதற்கான செலவானது அவர்களின் சொந்த ஊரிலிருந்து பொதுப்போக்குவரத்தில் செல்வதற்கான செலவை விடவும் அதிகமாகும். வயோதிபர்களுக்கு இந்த தூரம் அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
விசேட காலங்களில் குறித்த பகுதிகளுக்கு செல்வது கடும் சிரமங்களை உருவாக்கும். அந்தளவுக்கு பாரிய போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் பிரதேசமாக ஹட்டன் நகர் பகுதி காணப்படுகின்றது. இதனால் அதிக நேரத்தை பொதுமக்கள் போக்குவரத்துக்காகவே செலவளிக்க வேண்டிய நிலை காணப்படும்.
ஹட்டன் நகரம் ஏற்கனவே பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களை அதிகம் கொண்டிருப்பதும், அவற்றால் பல தொழில் முயற்சியாளர்கள் வாழ்வாதார அபிவிருத்தியை பெற்றுள்ளதுடன் நகரமும் அபிவிருத்தியடைந்து செல்லும் நிலை காணப்படுகின்றது. இதனால் நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரின் பொருத்தமான இடத்துக்கு மாற்றும் போது அங்குள்ள தொழில் முயற்சியாளர்களும் நகரமும் ஓரளவு விருத்தியடையும் என்ற வாதமும் காணப்படுகின்றது.
இவ்வாறு மக்கள் நலன் சார்ந்து தீர்மானங்களை முன்னெடுக்கும் போது, அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிக்க முடியும். ஊழியர்களின் நலன்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமானாலும், ஒரு சிலரின் தேவைகளுக்காக ஒட்டுமொத்த மக்களை அசௌகரியப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தற்போதுள்ள நோர்வூட் பிரதேச செயலக கட்டிடத்தை விஸ்தரித்தல் அல்லது சகலருக்கும் பொருத்தமான இடத்துக்கு இடமாற்றுதல் என்பதே இவ்விடயத்தில் பாரபட்சமற்ற தீர்வாக அமையும். இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
Recent Comments