2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது!
மொஹமட் ஆஷிக்
போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை நிவர்த்தி செய்வதற்கான பல்வேறு தீர்வுகள், நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் என்பன வெவ்வேறு காலங்களில் செயற்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் பெருமளவிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுவது குறித்த தற்போதைய தரவுகள், அந்த முயற்சிகள் சரியான பலனைத் தரவில்லை என்பதைக் காட்டுகின்றன. வருடாந்தம் கைது செய்யப்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களாவர்.
இலங்கையில் கடந்த காலங்களில் பரவிய போதைப்பொருள் மற்றும் அது இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தகவல் அதிகாரி வழங்கிய தரவுகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
உலகமே போதையில் மூழ்கியுள்ளது
2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு குறித்த உலகளாவிய தரவுகளின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டு 292 மில்லியன் போதைப்பொருள் பாவனையாளர்கள் இருந்துள்ளமை பதிவாகியுள்ளது. இது முந்தைய தசாப்தத்தை விட 20 வீத அதிகரிப்பாகும். உலகில் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் போதைப் பொருளாக கஞ்சா காணப்படுவதாகவும், அதைத் தொடர்ந்து அபின், ஹெரோயின், ஐஸ் போன்றவை காணப்படுவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு பெயர்களால் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான போதைப்பொருட்கள் கடந்த காலங்களில் இலங்கையில் விரைவாகப் பரவியது அனைவரும் அறிந்ததே.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தரவுகளின்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 2023ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 162,088 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 0.06 வீத அதிகரிப்பாகும். 2022 ஆம் ஆண்டில் 1,52,976 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 40.8 வீதமானோர் ஹெரோயின் தொடர்பான குற்றங்களுடனும், 42.2 வீதமானோர் கஞ்சா தொடர்பான குற்றங்களுடனும், 16.1 பேர் ஐஸ் (மெத்தம்பெட்டமைன்) தொடர்பான குற்றங்களுடனும் தொடர்புடையவர்கள் ஆவர்.
இலங்கையும் நன்றாகவே போதையில் மூழ்கிப்போயுள்ளது!
கைதுசெய்யப்பட்டவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இது எண்ணிக்கை அடிப்படையில் 58.5 வீதமாகும். அதேபோன்று, வடமேற்கு மாகாணத்தில் 9 வீதமானோரும் தென் மாகாணத்தைச் சேர்ந்த 9.4 வீதமானோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அடிப்படையில் பார்த்தால், அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 41.6 வீதமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று, கம்பஹா மாவட்டத்தில் 12.7 வீதமானோரும் குருநாகல் மாவட்டத்தில் 6 வீதமானோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டில், நூறாயிரத்திற்கு 796 பேர் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாவரும் 15-64 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஹெரோயின் மற்றும் கஞ்சா குற்றங்களுக்கான கைதுகள் அதிகரித்துள்ளதாகவும், ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிடுகின்றது.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தரவுகளின் படி, 2023ஆம் ஆண்டு கஞ்சா குற்றங்களுக்காக அதிக எண்ணிக்கையிலான கைதுகள் இடம்பெற்றுள்ளன. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 68,458 பேர். இவர்களுள் 66,142 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புபட்டதன் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.
ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரிப்பு
போதைப்பொருள் தொடர்பாக 2023ஆம் ஆண்டில் இடம்பெற்ற கைதுகள் முந்தைய ஆண்டை விட அதிகமாக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு 850.7 கிலோ ஹெரோயின் மற்றும் 10,220.5 கிலோ கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டன. ஐஸ் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் அளவு குறைந்துள்ளதாக சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கஞ்சா போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை.
2019 – 45,923
2020 – 41,080
2021 – 44,239
2022 – 53,579
2023 – 68,458
ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை
2019 – 40,970
2020 – 51,603
2021 – 50,412
2022 – 69,688
2023 – 62,142
ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை
2019 – 2,073
2020 – 2,387
2021 – 13,720
2022 – 22,631
2023 – 26,096
எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டை விட 2023இல் ஹெரோயின் குற்றங்களுக்கான கைதுகள் குறைவடைந்துள்ளன.
2023ஆம் ஆண்டில் ஐஸ் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் அளவு குறைந்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில், 83 கிலோ மற்றும் 247 கிராம் ஐஸ் பேதைப்பொருளுடன் 26,096 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 2023ஆம் ஆண்டில், 15-64 வயதுக்குட்பட்டவர்களில் நூறாயிரத்திற்கு 128 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான கைதுகளின் போக்கு காணப்பட்டது.
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தரவுகளின் பிரகாரம், 2023ஆம் ஆண்டில் கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, மாகாண அடிப்படையில் பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுவாழ்வு இன்றியமையாதது
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தரவுகளின் படி, 2023ஆம் ஆண்டில் ஹெரோயினுடன் தொடர்புடைய 18,365 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 3,916 பேரும், ஐஸ் போதைப்பொருடள் தொடர்புடைய குற்றங்களுக்காக 6,767 பேரும், ஏனைய போதைப்பொருளுடன் தொடர்புடைய 144 பேரும் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
போதைக்கு அடிமையானவர்களைக் கைது செய்தது மட்டுமின்றி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இலக்கினை அடைய, அவர்கள் நான்கு மறுவாழ்வு நிலையங்களை செயற்படுத்தி வருகின்றனர். இவை உனவட்டுன (தெற்கு மாகாணம்), தலங்கம (மேற்கு மாகாணம்), ஹன்டெஸ்ஸ (மத்திய மாகாணம்), மற்றும் ஊரபொல நிட்டம்புவ ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போன்ற முக்கிய குழுக்களுக்கு இது தொடர்பாக அறிவினை வழங்குவதற்காக, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை பல திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. போதையில்லா இளைஞர் தலைமுறையை உருவாக்குவதே இதன் இலக்காகும்.
அவர்கள் பாடசாலை மாணவர்கள், சர்வதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு திட்டங்களை செயற்படுத்துகின்றனர். அதேபோன்று, மாணவர்களுக்கான திறன் அபிவிருத்தித் திட்டங்களையும், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்களையும் நடத்துகின்றனர். தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தடுப்புக் கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவு வழங்கிய தகவல்களின்படி, இளைஞர்களை இலக்காகக் கொண்ட தடுப்புக் கல்வி (போதைப்பொருளின் ஆபத்து மற்றும் அவற்றிலிருந்து விலகி இருப்பது பற்றிய கல்வி) மற்றும் பயிற்சித் திட்டங்களையும் முன்னெடுக்கின்றது.
Recent Comments