முகம்மது ஆசிக்
கண்டி – யாழ்ப்பாணம் A9 பிரதான வீதியில் அமைந்துள்ள ஒரு பிரதான வணிக நகரமே அக்குறணை. பல்வேறு நாடுகளுடன் நேரடி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு இந்த நகரம் ஒரு மையமாக செயற்படுகிறது. இருப்பினும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அக்குறணை கடுமையானதும் தொடர்ச்சியானதுமான வெள்ளப்பெருக்குகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும் எந்தவொரு நீடித்த தீர்வும் அமுல்படுத்தப்படவில்லை.
வெள்ளப் பெருக்குகள் ஒரு தொடர்ச்சியான பேரழிவாக மாறியுள்ளதுடன், இதனால் பெருமளவான நிதி இழப்புகளும் நகரத்தின் அன்றாட வாழ்வில் அடிக்கடி இடையூறுகளும் ஏற்படுகின்றன.
A9 பிரதான வீதி இலங்கையின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். அக்குறணை ஊடாகச் செல்லும் முதன்மையான நீர்வழி பிங்கா ஓயா என்பதுடன், வாககல ஓயா நகரத்தின் பிரதான துணை வீதியான துனுவில வீதிக்கு சமாந்தரமாகப் பாய்கின்றது. கனமழையின் போது, இந்த நீர்வழிகள் நிரம்பி வழிவதால் அக்குறனை மூழ்கடிக்கப்பட்டு, இது இப்பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும் நகரங்களில் ஒன்றாக அமைகின்றது.
மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு: வளர்ந்து வருகின்ற நெருக்கடி
2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கனமழை அக்குறணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டும், நகரமானது குறைந்தது ஒன்பது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெள்ளப்பெருக்கை சந்தித்தது. சில சந்தர்ப்பங்களில், நீர்மட்டம் 12 முதல் 13 அடி வரை சென்றதுடன், இதனால் சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு கணிசமானளவு சேதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் ஏற்பட்ட வெள்ளம் சுமார் 500 வணிகங்கள் மற்றும் குடியிருப்புகளைப் பாதித்ததுடன், மொத்த நிதி இழப்புகள் சுமார் 400 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு அக்குறணையை வணிகங்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஆபத்தான இடமாக மாற்றியிருக்கின்றது. இது இவ்வாறிருந்த போதிலும், உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் பெரும்பாலும் சட்டவிரோத கட்டுமானங்களுக்காக குற்றம் சாட்டப்படுவதுடன், இது நிலைமையை மோசமாக்குவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தக் கட்டுமானங்களில் சில சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இது வெள்ளப்பெருக்கிற்கான உண்மையான காரணங்கள் குறித்த வினாக்களை எழுப்புகின்றது. இந்த நிலைமைக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளாக நகரம் தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதுடன், முறையான வடிகால் அமைப்புக்களின் பற்றாக்குறை, சரிபார்க்கப்படாத நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் இயற்கை நீர் ஓட்டத்தைத் தடுக்கும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் ஆகியவை உள்ளடங்குகின்றன.
221 சட்டவிரோத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டன
அக்குறணை பிரதேச சபையின் உள்ளூராட்சி அதிகார சபையின் கீழ் உள்ள அக்குறணை நகரத்தில் கட்டுமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பானதாகும். அனைத்து புதிய கட்டிடங்களும் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று அதிகாரசபை கட்டளையிடுகின்றது. இருப்பினும், பல கட்டமைப்புகள் முறையான அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளன என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (12ம் இலக்க சட்டம்) கீழ், அக்குறணையில் சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து பொது விசாரணை நடாத்தப்பட்டதுடன், மொத்தமாக 222 இதுபோன்ற கட்டமைப்புகள் இருப்பது தெரியவந்தது.
நகரின் 200 மீட்டர் நீளமுள்ள பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபை நடாத்திய கள ஆய்வில், 109 கட்டிடங்கள் கால்வாய்கள் மற்றும் நீர்வழிகள் மீது நேரடியாக கட்டப்பட்டுள்ளதுடன், 53 கட்டிடங்கள் ஒதுக்கப்பட்ட கட்டுமான பிராந்தியங்களுக்குள் இருந்தன. ஆனால் பாதுகாப்பு ஒழுங்கு விதிகளை பூர்த்தி செய்யவில்லை என்பதுடன், மேலும் 45 கட்டிடங்கள் வீதி ஒதுக்கிடங்களில் கட்டப்பட்டுள்ளன. மேலதிகமாக, முக்கியமான நீர்வழிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 15 கட்டமைப்புகள் அடையாளம் காணப்பட்டன. இந்த கண்டறிவுகள் இருந்தபோதிலும், ஒரே ஒரு கட்டுமானத்திற்கு எதிராக மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது அமுலாக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கரிசனங்களை எழுப்புகிறது.
சட்ட சிக்கல்
அடையாளம் காணப்பட்ட 222 சட்டவிரோத கட்டுமானங்களில், எத்தனை அனுமதியுடன் கட்டப்பட்டன, எத்தனை சட்டவிரோதமானவை என்பது தெளிவாகத் தெரியவில்லை. விசாரித்தபோது, மாத்தளை வீதியில் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக ஒரேயொரு நபருக்கு எதிராக மட்டுமே சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். அக்குறணை பிரதேச சபையும் ஒரு சில தனிநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தாலும், நிலைமையைச் சரிசெய்வதற்கு பெரிய அளவிலான அமுலாக்கம் எதுவும் இருக்கவில்லை.
அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சட்டவிரோத கட்டுமானத்துடன் மட்டுமல்லாமல், பாலம் கட்டுவதுடனும் தொடர்புடையதாகும். நகரத்தில் நடாத்தப்பட்ட ஒரு ஆய்வில், 7வது மைற்கல்லிலிருந்து நகரத்தின் இறுதி வரை கிட்டத்தட்ட 50 அணுகல் பாலங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த காணிகளில் சிலவற்றிற்கு உத்தியோகபூர்வ அனுமதிகள் இருந்தாலும், அவை தேவையான தரநிலைகளின்படி மேம்படுத்தப்படவில்லை என்பது, பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறது.
சுற்றுச்சூழல் நிபுணரின் பார்வை
அக்குறணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு ஒழுங்குபடுத்தப்படாத நகரமயமாக்கல் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களே முதன்மையான காரணங்கள் என்று சிரேஷ்ட சுற்றுச்சூழல் விஞ்ஞானி பிரதீப் சமரவிக்ரம தெரிவித்தார். “பொறுப்பு அரசாங்க நிறுவனங்களிடம் உள்ளது,” என்று அவர் விளக்கினார்.
“உள்ளூராட்சி சபை மற்றும் பிரதேச செயலகம் போன்ற உள்ளூர் திட்டமிடல் அமைப்புகள் அனைத்து கட்டுமானங்களும் சட்ட கட்டமைப்பிற்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும். அணுகல் பாலங்கள் போன்ற பல கட்டமைப்புகள் முறையான அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்டதுடன், அனுமதிகள் உள்ள கட்டமைப்புகள் கூட தேவையான ஒழுங்குவிதிகளைப் பின்பற்றி கட்டப்படவில்லை.” என்றார்.
தடைப்பட்ட மணல் அகற்றும் செயற்திட்டம்
வெள்ளப்பெருக்கைத் தணிக்கும் முயற்சியாக, பிங்கா ஓயா நதிப்படுகையிலிருந்து அதிகப்படியான வண்டலை அகற்ற மணல் அகற்றும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும், அக்குறணை பிரதேச சபைத் தலைவர் டி.ஜி.எம்.பி. ரணசிங்கவின் கூற்றுப்படி, இந்த செயற்திட்டமானது தளவாட மற்றும் நிர்வாக பிரச்சினைகள் காரணமாக நிறுத்தப்பட்டது.
“நாங்கள் வெள்ளப்பெருக்கைத் தடுக்க ஆற்று மணலை அகற்றும் செயற்திட்டத்தை ஆரம்பித்தோம்” என்று அவர் கூறினார். “ஆனால் பிரித்தெடுக்கப்பட்ட மணலை விற்பனை செய்யும் செயன்முறை பல தடைகளைச் சந்தித்துள்ளதுடன், இதனால் தாமதங்கள் ஏற்படுகின்றன. வெள்ளப்பெருக்கை நிரந்தரமாகத் தடுக்க வேண்டுமென்றால், இந்த செயற்திட்டத்தை நாம் தொடர வேண்டும்.”
இந்த செயற்திட்டத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கனரக இயந்திரம், தற்போது பயனற்று காணப்படுகின்றது. மேலதிகமாக, அதிகளவில் பிரித்தெடுக்கப்பட்ட மணல், முறையாக அகற்றப்படாமல் ஆற்றங்கரைகளில் குவிந்து கிடப்பதுடன், இது வெள்ளப்பெருக்கு தணிப்பு முயற்சிகளில் உள்ள வினைத்திறனின்மையை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சவால்கள்
நீண்டகால வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்காக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கீழ் தற்போது ஒரு விரிவான ஆய்வு நடாத்தப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல் அதிகாரியும் பிரதித்திட்டமிடல் பணிப்பாளருமான டாக்டர் H. M. W. ஹேரத் தெரிவித்தார். பணிகள் முடிவடைந்ததும், மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளங்களை நிவர்த்தி செய்வதற்கான மூலோபாய பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும்.
கண்டியில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரான இந்திக ரணவீர, அக்குறணையில் வெள்ளப்பெருக்கு பல தசாப்தங்களாக ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருகிறது என்பதை ஏற்றுக்கொண்டார். “பல ஆண்டுகளாக, பல்வேறு அரசாங்கங்கள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் பல தீர்வுகளை முயற்சித்துள்ளனர். இருப்பினும், 25 ஆண்டுகளுக்குப் பிறகும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. இது மிகவும் கவலைக்குரியது,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஏராளமான ஆய்வுகள், வெள்ளப்பெருக்கு தடுப்புசெயற்திட்டங்கள் மற்றும் அரசாங்கத் தலையீடுகள் இருந்தபோதிலும், அக்குறணை ஆண்டுதோறும் நீரில் மூழ்கிக் கொண்டே இருக்கிறது. மோசமான நகர்ப்புற திட்டமிடல், கட்டுமானச் சட்டங்களை போதுமான அளவு அமுல்படுத்தாமை மற்றும் தேக்கமடைந்த வெள்ளப்பெருக்கு தணிப்புசெயற்திட்டங்கள் ஆகியவற்றின் கலவையானது குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களை தொடர்ந்து பாதிக்கப்படக்கூடிய நிலையில் ஆழ்த்தியுள்ளது.






Recent Comments