க.பிரசன்னா
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு பரிணாமத்துக்குள் நகர்ந்துள்ளது. இந்திய மீனவர்கள் கடலடியில் இழு வலை மடியை பயன்படுத்தி (கடலடியில் வாரிச் செல்லும் பை போன்ற மிகப்பெரிய வலை) மீன் பிடிக்கின்றனர். இதனால் கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மீனவர்களையும் நேரடியாக பாதிக்கிறது. இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பகுதியில் இழுவலை மடியைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இலங்கை மீனவர்களின் வலைகள் சேதம் அடைகின்றன. இது வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாக தொடராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் நடவடிக்கையானது, இரு நாட்டு மீனவர்களிடையே அவ்வப்போது முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றது. இதனால் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தேசிய மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் விடுவிக்கப்படுவதும் தொடர்கதையாக நீடிக்கிறது.
இத்தகைய நீண்ட வரலாற்றில் ஒரு பகுதியாக இலங்கை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு மீனவர்கள் மற்றும் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையில் இந்திய மீனவர்கள் மற்றும் இந்திய மீன்பிடி படகுகள் மாத்திரம் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்படுவதாக பரவலான கருத்தாக்கம் இருந்தாலும் இலங்கை மீனவர்களும் மீன்பிடி படகுகளும் இந்திய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2017 – 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 206 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 32 மீனவர்கள் இந்திய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய கடற்படையினரால் 112 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 29 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. குறித்த காலத்தில் கைது செய்யப்பட்ட சகல மீனவரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் மூன்று படகுகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
2018 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 236 இலங்கை மீனவர்கள் மாலைதீவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 24 இலங்கை மீனவர்கள் மியன்மாரில் கைது செய்யப்படடு விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 89 இலங்கை மீனவர்கள் சீசெல்ஸில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரீயூனியன் தீவுகளில் 2022 ஆம் ஆண்டு 13 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மீனவர்கள் குறித்த விவரங்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் இல்லை. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விபரங்கள் மட்டுமே திணைக்களத்தில் உள்ளன. மேலும், ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்த விவரங்கள் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. எனவே, கடற்றொழில் தொடர்பில்லாத பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பிலான தகவல்கள் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் உள்ளதால், அவ்வாறான தகவல்களை அந்த நிறுவனங்களிடம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 264 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் 36 இந்திய மீனவப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2022 ஆம் ஆண்டு 264 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகில் ஒரு படகு மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 2018 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 583 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சேதமாக்கப்பட்ட மற்றும் ஏலம் விடப்பட்ட படகுகள்
2013 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் 382 இந்திய மீனவப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 305 படகுகள் விடுவிக்கப்பட்டதுடன் பழுதடைந்த 138 படகுகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2021 ஆம் ஆண்டு வரை குறித்த படகுகளை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதே காலப்பகுதியில் இந்திய கடற்படையினரால் 60 இலங்கை மீனவப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஒன்பது படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 51 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு இந்திய மீனவர்களினால் இலங்கை மீனவர்கள் மற்றும் படகுகள் மீது ஏழு தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தாக்குதல் சம்பவங்களினால் இலங்கை மீனவர்களுக்கு 1,975,000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 150 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 6,104,700 ரூபா கட்டணமாக அறவிடப்பட்டதாகவும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இரு நாடுகளுக்குமிடையிலான மீனவப் பிரச்சினைகள் மீனவர்களின் கைது, விடுவிப்பு, படகு பறிமுதல், விடுவிப்பு என கடந்து சென்றாலும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு இரு அரசாங்கங்களும் முயற்சிக்கவில்லை. இப்பிரச்சினையை உயிர்ப்புடன் வைத்திருப்பது அரசியல் ரீதியான இலாபங்களை இரு நாடுகளுக்கும் வழங்குகிறது. ஆனால் மீனவர்களும் அவர்களின் வாழ்வாதாரங்களுமே தொடர்ச்சியாக பாதிப்படைகின்றன. இப்பிரச்சினையில் உயிர்நீத்த மீனவர்களின் குடும்பங்கள் இன்றும் நிர்க்கதியாகியுள்ள நிலையில், இருநாட்டு அரசாங்கங்களும் இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காது இழுத்தடிக்கின்றமை கவலைக்குரியதாகும்.
Recent Comments