News

வனஜீவராசிகளை அபாயத்திற்கு உட்படுத்த எட்டு கோடி ரூபாய் செலவில் இன்னொரு திட்டம்!

By In

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி

இலங்கையில் காலாகாலமாக காணப்படும் யானை – மனித மோதலுக்கு தீர்வு காண எந்தவொரு அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்காத பின்னணியில் எவ்வித பயனும் இல்லாத மற்றுமொரு செயல்திட்டத்தின் மூலம் மக்களின் பலகோடி ரூபா நிதி வீணடிக்கப்பட்டுள்ள விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இலங்கையில் யானை – மனித மோதலுக்குத் தீர்வு காணும் நோக்கில் லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் 425 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் காட்டு யானை தடுப்பு நிலையத்தை அமைப்பதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட எவ்வித பலனும் அற்ற ஹொரவப்பொத்தான யானைகள் தடுப்பு மத்திய நிலையத்தின் கட்டுமானத்திற்கு  2012/3/17 திகதியிடப்பட்ட  12/0151/549/001 ஆம் இலக்க அமைச்சரவை அறிக்கையின் பிரகாரம் 345 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையிலேயே இந்த திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் கட்டப்படவுள்ள யானை தடுப்பு நிலையத்திற்கான நிதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திட்டத்தினால் (ESCAMP) வழங்கப்படவிருந்தது. அந்தத் திட்டத்திற்கான நிதி 20 ஆண்டுகளில் மீளச் செலுத்தும் ஒப்பந்த அடிப்படையில் உலக வங்கியால் வழங்கப்படுகிறது. ஆனால் லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள காட்டு யானை தடுப்பு நிலையத்திற்கு ESCAMP திட்டத்தால் நிதி எதுவும் வழங்கப்படவில்லை என்று வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது. 

ESCAMP திட்டத்தினால் இதற்கான நிதி வழங்கப்படாவிட்டாலும், கடந்த 2022 ஆம் ஆண்டு லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் காட்டு யானை தடுப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்பு நிதியிலிருந்து 89 மில்லியன் ரூபா (89497806.30) செலவிடப்பட்டுள்ளதாகவும் குறித்த திட்டத்திற்கான எந்தவொரு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் தயாரிக்கப்படவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலில் தெரியவந்துள்ளது.  

வனவிலங்கு பாதுகாப்பு நிதி என்பது வன விலங்குகளின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் நிதியாகும். ஆனால், அந்த நிதியை, வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும், இது போன்ற தோல்வியடைந்த திட்டங்களுக்குப் பயன்படுத்துவது, அனுமதிக்கப்பட முடியாததாகும். 

எவ்வாறாயினும் இவ்வாறு லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்றி நிர்மாணிக்கப்பட்ட காட்டு யானை தடுப்பு நிலையத்தின் பணிகள் தற்போதுள்ள சட்ட நிபந்தனைகளினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக ரூபா 89 மில்லியனுக்கும் (89497806.30)  அதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது. தேசிய இயந்திர உபகரண நிறுவனம் ஊடாகச் சுமார் 33 கிலோமீட்டர் நீளத்திற்கும் 3 மீட்டர் அகலம், 08 அடி ஆழத்திற்கும் அகழிகள் தோண்டப்பட்டு சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அகழி வெட்டப்பட்டதால் வனப்பகுதியின் 27 ஏக்கருக்கும் அதிகமான நிலம் இழக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அகழிகளை வெட்டுவதற்கு தேசிய இயந்திர உபகரண நிறுவனத்திற்கு அப்போதைய வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் நிர்மாணிக்கப்பட்ட காட்டு யானை தடுப்பு நிலையத் திட்டத்திற்கு முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்றி அகழிகளை வெட்டுவதற்கு அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியமை பாரிய பிரச்சினைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது. 

வனவிலங்குகளை அபாயத்திற்கு உள்ளாக்கும் அகழிகள் 

யானை – மனித மோதலுக்குத் தீர்வு காணும் நோக்கில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் காட்டு யானைகளைப் பிடித்து  ஹொரொவப்பொத்தானை பிரதேசத்தில் அமைந்துள்ள யானை தடுப்பு நிலையத்தில் பராமரிப்பதற்கு  2012 ஆம் ஆண்டு முதல் 345 மில்லியன் ரூபா செலவில் 997 ஹெக்டேயர் நிலப்பரப்பில் யானை தடுப்பு நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தத் திட்டமும் பயனற்ற திட்டம் என்பதனை ‘அத’ பத்திரிகை வெளியிட்ட செய்தி அறிக்கைகள் ஊடாக தெரிந்து கொள்ள முடிகின்றது. 

இவ்வாறானதொரு பின்னணியில், லுணுகம்வெஹர தேசிய பூங்காவின் காட்டு யானை தடுப்பு நிலையத்தைச் சுற்றி 425 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான செலவில் 3000 ஹெக்டேயர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் வேலி நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அகழி வெட்டப்படுவதால், லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் உள்ள வனப்பகுதிக்கு சேதம் ஏற்படுவதோடு, வன விலங்குகளின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.   

காடுகள் வன விலங்குகளின் தாயகமாகும். அங்கே அவை விரும்பியபடி வாழ சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும். ஆனால் இன்று லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் வெட்டப்பட்ட அகழிகளால் வனவிலங்குகள் அந்த அகழிகளில் விழுந்து உயிரைப் பணயம் வைக்க  வேண்டியுள்ளது. இந்த அகழிகள் வெட்டப்படுவதால் காட்டு யானைகள் மாத்திரமன்றி ஏனைய வனவிலங்குகளின் நடமாட்டம் தடைப்பட்டுள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

சுற்றுச்சூழல் அழிவு 

லுணுகம்வெஹர தேசிய பூங்காவின் காட்டு யானை தடுப்பு நிலையத்தைச் சுற்றி அகழிகள் தோண்டப்படுவதற்கு பூங்காவில் உள்ள பொல்ஹித குளம், கம்பலஸ்ஸ குளம்  மற்றும் தலகஹ திகன குளம் போன்ற குளங்களுக்குத் தாழ்வான பகுதிகளிலேயே அகழிகள் வெட்டப்பட்டுள்ளதால் எதிர்காலங்களில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் காணப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் (CEJ) இயக்குனர், சூழலியலாளர் ஹேமந்த விதானகே, இது தொடர்பில் தெரிவிக்கையில், “யானைகள் மட்டுமன்றி மற்றைய விலங்குகளும் பாதிக்கப்படும். ஏரிகளில் தண்ணீர் வளம் குறையலாம். ஆகவேதான்  இவ்வாறான திட்டத்திற்கு முன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளளது. ஆனால் இங்கு அது நடக்கவில்லை. இந்த வனவிலங்கு வலயம் பொதுமக்களுக்கு உரித்தானது. இவற்றைப் பாதுகாக்கவே அதிகாரிகள் காணப்படுகின்றனர், மாறாக இயற்கை வளங்களை அழிப்பதற்காக அல்ல.” என்றார்.

எவ்வாறாயினும், இந்த யானை தடுப்பு நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் திரு.சந்தன சூரியபண்டாரவிடம் 22.08.2022 அன்று வினவியபோது, லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் காட்டு யானை தடுப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து ஆய்வுப் பணிகளும்  மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இது தொடர்பாக, 28.03.2022 அன்று வனசீவிகள் பாதுகாப்பு திணைக்களத்திலிருந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட விசாரணையில்,  சம்பந்தப்பட்ட பகிரங்க அதிகார சபை 18.11.2022 அன்று வழங்கிய தகவலில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதுடன் அதன் அடிப்படையில் அறிக்கை  தயாரிக்கப்பட்டு வருவதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, எந்த விதமான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு செயல்முறையும் இல்லாமல் அரச அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டுமே இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தெளிவாகிறது. 

“இன்று, லுணுகம்வெஹர தேசிய பூங்காவில் எஞ்சியுள்ள காட்டு யானைகள் மத்தள ஹம்பாந்தோட்டை பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த யானைகள் மட்டுமேயாகும். இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்ட பிரதேசம் காட்டு யானைகளால் பயன்படுத்தப்படாத பிரதேசம் என இம்மக்கள் தெரிவிக்கின்றனர். அப்படி பயன்படுத்தவில்லை என்றால், அந்தப் பகுதி காட்டு யானைகளுக்கு ஏற்றதல்ல என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும். 3000 ஹெக்டேயர் பரப்பளவில் யானை தடுப்பு நிலையம்  அமைக்கப்படுவதால் ஏனைய காட்டு யானைகள் மற்றும் வன விலங்குகளின் வாழ்விடங்கள் இழக்கப்படுவது அடுத்த பிரச்சினையாகும். காட்டு யானைகளைப் பாதுகாப்பதை விட இதன் மூலம் காட்டு யானைகளை அழிக்கவே முடியும்” எனக் காட்டு யானைகள் தொடர்பான ஆய்வாளர் கலாநிதி பிருதுவிராஜ் பெர்னாண்டோ தெரிவித்தார். 

“வனவிலங்கு பாதுகாப்புக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும், அரச அதிகாரிகள்  மக்களைத் தவறாக வழிநடத்தி இது போன்ற செயல்களைச் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது” என அவர் மேலும் கூறினார்.

எஞ்சியுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழும் காட்டு யானைகளுக்குப் போதிய உணவு கிடைக்காமையே யானை – மனித மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து விளைச்சல் மற்றும் உயிர்களைச் சேதப்படுத்துவதால், காட்டு யானைகளை மக்கள் கொன்று வருகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வாக, காட்டு யானைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில், யானை தடுப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டபோதிலும் அந்த யானை தடுப்பு நிலையத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த காலங்களில் காணப்படாத யானை-மனித மோதல்கள் புதிதாக ஏற்பட்டுள்ளன என்பதற்கு, ஹொரொவப்பொத்தான யானைகள் தடுப்பு மத்திய நிலையம் சிறந்த எடுத்துக்காட்டாகும். 

இது பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக, பிரச்சினையை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மட்டுமே மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. ஹொரொவப்பொத்தான யானைகள் தடுப்பு மத்திய நிலையம் தொடர்பான பிரச்சினையில் இது ஒரு பக்கம் மட்டுமேயாகும். லுணுகம்வெஹெர தேசிய பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காட்டு யானை தடுப்பு நிலையமும் முறைசாரா திட்டமே என்பதை சுட்டிக்காட்டக்கூடிய முக்கிய விடயமாக அமைவது, இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் எந்தவொரு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் தயாரிக்கப்படவில்லை என்பதே ஆகும்.  

இது தொடர்பில் வனசீவிகள் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு.சந்தன சூரியபண்டாரவிடம் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“லுணுகம்வெஹெர தேசிய பூங்காவில் அமைக்கப்படவிருந்த  காட்டு யானை தடுப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்படவில்லை. யானை அகழி அமைத்தல் தொடர்பாக நீதிமன்றத்திடமிருந்து மறு உத்தரவு வரும் வரை அது தொடர்பான பணிகளை மேற்கொள்ளமாட்டோம் என நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளோம். இது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.” என்றார்.

மேலும், இந்த நடவடிக்கைகளுக்கு முன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஒன்று மேற்கொள்ளாமைக்கு என்ன காரணம் என வினவியபோது, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அங்கு முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது” என இயக்குனர் பதிலளித்தார். 

லுணுகம்வெஹெர தேசிய பூங்கா ஏரிகள், ஆறுகள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 1995 இல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பூங்கா பல்வேறுபட்ட காடுகளை உள்ளடக்கியுள்ளதுடன் இதன் முழு நிலப்பரப்பு 23498 ஹெக்டேயர் ஆகும். மேலும் 3283 ஹெக்டேயர் அல்லது முழு நிலப்பரப்பின் 14% நிலப்பரப்பு நீரால் அமைந்துள்ளது. நாட்டின் கோடிக்கணக்கான பொது நிதியைப் பயன்படுத்தி, இத்தகைய விலைமதிப்பற்ற சூழலியல் பகுதியில் இது போன்ற திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்பு அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் இதனைவிட கவனமாகவும் கரிசனையுடனும்  செயல்பட வேண்டியது அவசியம் என்பதையே மேற்படி நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன.

லுணுகம்வெஹெர தேசிய பூங்காவின் பெயர் பலகை

யானைகள் தடுப்பு நிலையத்திற்காக அமைக்கப்பட்ட அகழியில் சிக்குண்டு  இறந்த விலங்குகளின் புகைப்படம்.

யானைகள் தடுப்பு நிலையத்திற்காக வெட்டப்பட்ட அகழியைச் சுற்றி காட்டு யானைகள் நடமாடும் புகைப்படம்.

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *