News

மக்களது நம்பிக்கையை இழக்கும் பிரதேச சபைகள்

By In

மகேந்திர ரன்தெனிய

உள்ளூராட்சி நிறுவனங்களின் வரலாறு 1865 கொழும்பு மாநகர சபையிலிருந்து ஆரம்பமானதுடன் 1866 இல் கொழும்பு, கண்டி, காலி  மாநகர சபைகள் நடைமுறைக்கு வந்தன. அந்த மாநகர சபைகள் சுதந்திரம் பெற்றுக்கொள்ளும் வரை நடைமுறையில் காணப்பட்டதுடன் 1978 இல், 13 வது அரசியலைமைப்பின் கீழ் உள்ளூராட்சி முறைமை செயற்படுத்தப்பட்டது. அதன்படி 1991ஆம் ஆண்டு முதல் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டுவரை 341 உள்ளூராட்சி நிறுவனங்கள்  காணப்பட்ட  நிலையில் அதன் பின்னர் தேர்தல் முறை திருத்தம் காரணமாக அங்கத்தவர்களின் எண்ணிக்கை 4486 இல் இருந்து 8356 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது, ​​பணியாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகரிக்கும் ஒவ்வொருவருக்கும் மக்களின் வரிப்பணமே சம்பளமாகக் கொடுக்கப்படுகின்றது. அதிகரித்து வரும் இந்த உறுப்பினர்களின் சுமையை மக்கள் சுமக்க வேண்டியுள்ளது. தற்போது மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் கலைக்கப்பட்ட போதிலும் ஊழியர்களின் செலவு அப்படியே காணப்படுகின்றது. 

இன்றைக்கு இந்தத் தேர்தலை வேண்டிக் கூச்சல் போடுவது மக்கள் அல்ல, அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும்தான். மேடைகளில் மக்களுக்கு அழைப்பு விடுப்பது தேர்தல் வேட்பாளர்கள் அல்ல கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களே. அவர்களின் நோக்கம் கிராமத்தை அபிவிருத்தி செய்வதல்ல மாறாக நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது. அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலைக் கோருவது பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக அல்ல, மாற்றமாக மக்கள் கருத்தைச் சோதிப்பதற்காகவே ஆகும். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகச் சுமார் 3000 அரச ஊழியர்கள் விடுமுறையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் தள்ளிப்போனதால், அடிப்படை சம்பளம் மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. ஆனால் அவர்களிடமிருந்து எந்தச் சேவையும் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. 

மேலும், கிராமத்தின் அதிகாரத்தை வென்றால் மாத்திரம்  நாட்டின் அதிகாரத்தை வெற்றி கொள்ள முடியாது. எந்தக் கட்சி வேட்பாளரும் இதுவரை தான் ஆட்சிக்கு வந்ததும் கிராமத்தையும் நகரத்தையும் மேம்படுத்தவோ, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவோ ஒரு திட்டத்தை முன்வைக்கவில்லை. அவர்கள் மேற்கொள்ளும் ஒரே பணி ஆளுங்கட்சியையும் மற்ற அரசியல் தலைவர்களையும் விமர்சிப்பதே ஆகும்.

நாட்டின் அபிவிருத்திக்காகவே பாராளுமன்றம், மாகாண சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை நியமித்து அனுப்புகின்றனர். ஆனால் இன்று இந்த மக்கள் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரக் கொள்கைகளும் ஊழல் மோசடிகளுமே நாடு வங்குரோத்து நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. அவர்கள் நியமித்தவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும்தான் இங்கு பலன்களை அறுவடை செய்கிறார்கள்.

2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் கோரிய விசாரணையின்போது கிடைத்த தகவலின்படி நான் வசிக்கும் தொகுதியில் யட்டிநுவர பிரதேச சபை 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. இது எண்பத்தி ஒன்பது வட்டாரங்களில் வாழும் 102,000 பேரின் சேவைக்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். பிரதேச சபையில் 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் 22 உறுப்பினர்கள் இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து 45 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, உறுப்பினர்களின் செலவும்  இரட்டிப்பாகும். ஒவ்வொரு உறுப்பினரும் மாதாந்த சம்பளமாகப் பதினைந்தாயிரம் ரூபாயும், எரிபொருள் மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகளாக 6,000 ரூபாவுடன் மாதம் 21,000 ரூபாயும் பெறுகின்றனர். துணை தலைவரின் சம்பளம் ரூ.20,000. தலைவரின் சம்பளம் ரூபா 25,000  மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகள் மற்றும் 500 லீற்றர் எரிபொருளைப் பயன்படுத்த முடியும். இவ்வாறு, உறுப்பினர்களைப் பராமரிப்பதற்கு  ஆண்டுக்குக் கிட்டத்தட்ட ஒரு கோடியே ஐம்பது லட்சம் செலவழிக்கிறார்கள்.

அதிகார எல்லையின் அபிவிருத்திக்காக, 2023 வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஆண்டுக்கு 4 இலட்சங்கள் சபை நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இவ்வாறு 44 உறுப்பினர்களுக்குச் சபை நிதியிலிருந்து ஒரு கோடியே எண்பது இலட்சம் ரூபாவை விநியோகிக்க ஒரு கோடியே ஐம்பது இலட்சம் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்கின்றனர். இது தவிர, பொதுச் சபைக் கூட்டங்கள் மற்றும் கமிட்டி கூட்டங்களுக்குத் தேநீர் மற்றும் மதிய உணவுக்காக என மாதந்தோறும் ஒரு தொகை செலவிடப்படுகிறது. சபையின் 105 ஊழியர்களின் மாதாந்த சம்பளம் நாற்பத்தொன்பது இலட்சம் ரூபா என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது யட்டிநுவர பிரதேச சபையில் 46 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதுடன் மேலதிக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 26 ஆகும். மேலதிக ஆயுர்வேத பணியாளர்களின் எண்ணிக்கை 01 ஆகும். இந்த 27 பேருக்கும் கொடுக்கப்படும் சம்பளம் மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும்.

அத்துடன் பிரதேச சபையில் பணியாளர்கள் பற்றாக்குறை பன்னிரண்டு பேர் ஆகும். தொழில்நுட்ப அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், பணி ஆய்வாளர், மருந்துக் கலவை மற்றும் நூலக உதவியாளர் ஆகிய பிரிவுகளுக்குத் தலா ஒரு பணியாளர்கள் மற்றும்  வேலைப் பிரிவுத் தொழிலாளர் மற்றும் ஒட்டுநர்கள் என மூன்று பணியாளர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு வழங்கும் சேவையின் ஒரு பகுதியைப் பிரதேச சபை செய்து வருகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு, குப்பை சேகரிப்பு, வரிப்பணம், நில வரி, உரிம கட்டணம், சுடுகாடு பராமரிப்பு, சேவை கட்டணம் வசூல் போன்றவற்றை குறிப்பிடலாம். மேலும், இந்த நிறுவனம் மக்களுக்குத் தேவையான வீடு மற்றும் கட்டிட திட்ட அனுமதி, உட்பிரிவு நில விற்பனை வரி மற்றும் மேம்பாட்டு அனுமதிக் கட்டணம் போன்ற பல சேவைகளை வழங்குகிறது. 

அதேபோல மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நேரடியாக மக்களுக்குச் சேவை செய்து வரும் அமைப்பாகவும் இந்த நிறுவனம் காணப்படுகின்றது. மத்திய அரசின் ஒதுக்கீட்டின் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பிரதேச செயலகம் பல சேவைகளைப் பிரதேச செயலாளர் தலைமையில் மேற்கொண்டு வருகின்றது. அந்தச் சேவைக்காக யட்டிநுவர பிரதேச செயலகத்தில் 350 பணியாளர்கள் காணப்படுகின்றனர். இந்த நிறுவனத்தில், ஒரு கிராமத்துக்கு ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தர் வீதம் 95 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர்.

இவ்வாறு 95 கிராம சேவை பிரிவுகளைக் கொண்ட யட்டிநுவர தொகுதிக்குப் பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் அடிப்படையில் 140 அபிவிருத்தி உத்தியோகத்தர்களே உள்ளனர். இவர்களில் ஒருவரின் சம்பளம் 54,250 எனில், அவர்களின் சம்பளத்திற்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட 80 லட்சம் செலவாகும் மற்றும் ஆண்டுக்கு 09 கோடிக்கு மேல் செலவிடப்படும் (நிறுவனத்தின் இருபத்தி ஆறு தேவையற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  இலவச சம்பளம் பெறுகின்றனர்.) இந்த நிறுவனம் 105 பணியாளர்களுக்கும் 45 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் கொடுப்பனவுகளை  வழங்குகிறது. ஆனால் இக்கிராமத்தில் இதுவரை பொது சாலைகள்  அமைத்து முடிக்கவில்லை. சபைக்குச் சொந்தமான வீதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு கையகப்படுத்தப்படவில்லை. அனுமதியற்ற கட்டுமானங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும், மயானம் சமூக மண்டபம் சொந்தமான நிலங்கள் அளந்து வரையறுக்கப்படவில்லை.

எனக்குக் கிடைத்த தகவலின்படி, யட்டிநுவர பிரதேச  சபைக்கு 45 மயானங்களும் ஒரு சுடுகாடும் காணப்படுகின்றது. ஆனால் அவைகளின் சிலவற்றிற்கு உட்பிரவேசிக்க சாலைகள் இல்லை.  

1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரதேச சபை மற்றும் நகர சபைக்கு மயானங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை அளந்து  அபிவிருத்தி செய்ய மற்றும்  தமது அதிகார எல்லைக்குட்பட்ட வீதிகளை வர்த்தமானியில் பிரசுரித்துச் சபைக்குப் பெற்றுக்கொள்ள 35 ஆண்டுகள் கடந்தபோதிலும் அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது. இருப்பினும், பிரதேச சபை இரண்டு நவீன அடுக்குமாடி கட்டிடங்களை நிர்மாணித்துள்ளது. சுமார் 22 கோடிகள் நிலையான வைப்புத்தொகையாக வைப்பிலிட்டு ஆண்டுக்கு நான்கு கோடி வட்டியைப் பெறுகின்றன. இன்று, பிரதிநிதிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. பௌதீக வளங்கள் அதிகம் காணப்படுகின்ற போதிலும், இந்த நிறுவனங்கள் தங்கள் பணிகளைச் செய்யத் தவறியுள்ளன.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைப்படி அவர் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கட்சியின் விருப்பத்தின் பேரில் சபை உறுப்பினராக  நியமிக்கப்படலாம். பெண் பிரதிநிதித்துவம் 25%. இதனால் கணவனோ, மகனோ போட்டியிட்டு தோற்றாலும், பெண் பிரதிநிதித்துவத்தின்படி பட்டியல்மூலம் மகளோ, மனைவியோ உறுப்பினர் பதவியை வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பிரதேச சபையில் உண்மையான மக்கள் கருத்து வெளிப்படாமையும் ஒரு பிரச்சினையாகும். அதிக உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளும் கட்சியைவிடக் குறைந்த உறுப்பினர்கள் தொகையைப் பெற்றுக்கொள்ளும் கட்சிகளுக்குப் போனஸ் உறுப்பினர் வாய்ப்புகள் பெற்றுக்கொள்ளப்படுவதால் வெற்றி பெறும் கட்சிக்குச் சபை அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக, கடந்த யட்டிநுவர பிரதேச சபையில் 22 பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வெற்றிபெற்றனர் மற்றும் எதிர்க்கட்சிக்குப் போனஸ் உறுப்பினர்களுடன் 23 உறுப்பினர்கள் கிடைப்பதால் , அவர்கள் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது. இங்கு உறுப்பினர்கள் பணத்துக்கு விலைபோகும் நிலை காணப்படுகின்றது.

வரவுச் செலவு திட்ட முன்மொழிவுகள் மூலம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நான்கு இலட்சம் தொகை ஒதுக்கப்பட்டாலும், அந்தத் தொகை திட்டம் அல்லது கட்சியைப் பொறுத்து மாறுபடுவதாகக் கூறப்படுகிறது. 

பிரதேச சபையில் ஊழல், மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், சில உறுப்பினர்கள் திட்டங்களுக்குச் செலவிடப்படும் பணத்தில் 5% கமிஷனாகப் பெறுவதாகவும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், அரசின் உத்தரவின்படி  5% விவசாய அமைப்புகள் அல்லது கிராம அபிவிருத்தி சங்கங்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன் காரணமாக, திட்டத்திற்காகச் செலவிடப்படும் பணத்தில் 10% குறித்த திட்டத்திற்கு செலவழிக்கப்படுவதில்லை. மேலும், தொழில்நுட்ப அலுவலர்களுக்கான ஒப்பந்தங்களை ஏற்கும் குறிப்பிட்ட சங்கங்களுக்கு சுமார் பத்து பதினைந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஒப்பந்ததாரரின் இலாபம் 25% என்றால், ஐந்து லட்சம் மதிப்பிலான திட்டத்தில், வளர்ச்சிப் பணிகளுக்கு மூன்று இலட்சம் நிதி மாத்திரமே பயன்படுத்தப்படும். சில உறுப்பினர்கள் தாங்கள் பெறும் ஒதுக்கீட்டை மக்களின் கோரிக்கைகளைவிட அவர்களின் தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில் ஒதுக்குகிறார்கள்.

உதாரணமாக எம்பில்மீகம வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 30 குடும்பங்கள் பயணிக்கும் பாதை மண்சரிவு காரணமாகச் சேதமடைந்து காணப்படுவதால் அதனைச் சீர்செய்து தருமாறு கிராமவாசிகள் கோரிக்கை விடுத்த போதிலும் குறித்த கோரிக்கையைப் பிரதேச சபை உறுப்பினர் நிறைவேற்றாது அந்தப் பிரதான வீதியியை ஒட்டிக் காணப்படுகின்ற உள் வீதியோன்றை ரூபா எட்டு இலட்சம் செலவிட்டு அபிவிருத்தி செய்துள்ளார். அதற்கு முக்கிய காரணம், அந்த உறுப்பினர் கிராமத்திலிருந்து மக்கள் வாக்குமூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அல்ல, ஒரு உறுப்பினர் இறந்ததால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. மேலும், மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு 20 முதல் 30 லட்சம்வரை வழங்க நிதி ஏற்பாடுகள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் குறித்த வீதி மண்சரிவால் பாதிக்கப்பட்டமை தொடர்பில் பிரதேச சபைக்குத் தெரியுமா என நான் வினவிய கேள்விக்குப் பிரதேச சபை அளித்த பதில் ஆம் தெரியும்  என்பதாகும்.  

2023 இல் மக்கள் உயிரைப் பணயம் வைக்காமல் நடந்து செல்லும் வகையில் சாலை அமைக்கப்படுமா என்ற கேள்விக்குப் பிரதேச சபை அளித்த பதில், 

2023 இல் குறித்த சாலையைச் சீரமைக்க முன்மொழியவில்லை என்பதாகும். (இதன் மூலம் குறித்த பிரதேச மக்களின் கோரிக்கை பிரதேச சபை உறுப்பினர்களால் பிரதிநிதிப்படுத்தபடுவதில்லை என்பதாகும்.) ஆனால் இந்தச் சாலையின் உடைந்து காணப்படும் 285 அடி பகுதியைக் அபிவிருத்தி செய்ய 5 இலட்சம் நிதி பெற்றுக்கொடுக்க முடியும் எனப் பிரதேச சபை தலைவர் வாய்மொழியாகக் குறிப்பிட்டார். 

மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தான் விடுத்த கோரிக்கையின் படி, புறநகர்ப் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஆறு கோடியே ஐம்பது இலட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சாலையின் உடைந்த பகுதியை மேம்படுத்த ஐந்து இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வளவு பாரிய தொகை ஒதுக்கப்பட்டிருக்கும்போது, நிலச்சரிவு மூலம் பாதிக்கப்பட்ட வடிகால் புனரமைப்புக்கு    20, 25 இலட்சம் ஒதுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது. 

இது தொடர்பில் மத்திய மாகாண ஆளுநருக்கு அறிவித்து ஒரு வாரத்திற்கு பின்னர், பிரதேச  சபை நிதியில் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்றால் மாகாண சபை நிதியிலிருந்து பணம் ஒதுக்க அதற்கான மதிப்பீட்டை அனுப்பி வைக்குமாறு பிரதேச சபை தலைவருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

பிரதேச சபையிடமிருந்து மக்கள் முன்வைக்கும்  எழுத்து மூலமான கோரிக்கைக்குப் பிரதேச சபை தரப்பிலிருந்து எழுத்து மூலமான பதில்கள் கிடைக்கப்பெறுவதில்லை. 20, 25 லட்சம் செலவு செய்வது கடினம் என்றும், 2023ம் ஆண்டுச் சாலை மேம்பாட்டுக்கு 5 லட்சம் தரலாம் என்றும் வாய்மொழியாகப் பதில் கிடைக்கப்பெற்றிருந்தது.  

தகவல் அறியும் சட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு கிராமத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான கோரிக்கைக்கு  அதே பதிலை எழுத்துப்பூர்வமாக என்னால் பெற முடிந்தது. 

மக்களின் வாக்குகளால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், இந்த நிறுவனங்களுக்குப் பிரதிநிதிகளை நியமிப்பது பண விரயமே. நீண்ட கால தேசியக் கொள்கையோ, வளர்ச்சித் திட்டமோ, நோக்கமோ இல்லாத கட்சிகளுக்கு அதிகாரத்தை மாற்றுவது நாட்டைப் பொருளாதார ரீதியாகத் திவாலாக்கும். எனவே, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களால் ஒன்றிணைந்து  திட்டமிடப்பட்ட 20 வருட செயல்திட்டம் பிரதேச சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு, திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாத்திரம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யாவிட்டால், அந்த நிறுவனங்களின் பராமரிப்புக்காகச் செலவிடப்படும் பணம் குறித்து கேள்வி எழுப்புவது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பு ஆகும்.

News

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 422 பேர் இன்னும் ஓய்வூதியம் பெறுகின்றனர்

க.பிரசன்னா புதிய அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களுடைய வாக்குகளால்…

By In
News

இளைஞர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்காத துறைசார் மேற்பார்வைக்குழுக்கள்

க. பிரசன்னா பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்…

By In
News

யாழ். வைத்தியசாலையின் கழிவகற்றலுக்கு 2023 இல் 7 கோடி ரூபா செலவு!

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவகற்றல் செயல்பாட்டிற்கு கடந்த வருடம் 7 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள…

By In
News

முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சலுகைகள் என்ன?

க.பிரசன்னா முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் சர்ச்சைகள் நீண்டு செல்லும் நிலையில் தொடர்ச்சியாக அவர்களுக்கான சலுகைகளுக்கு அதிக நிதியொதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *