கமனி ஹெட்டியாராச்சி
சமீபத்தில், இலங்கை தனது வரலாற்றில் இதுவரை கண்டிராத சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது. தேசிய மற்றும் சர்வதேச மதிப்பீடுகள் இலங்கையை ஒரு திவாலான நாடாக அறிவித்தன. இலங்கை இந்த நிலைக்கு வீழ்ச்சியடைவதற்கு அரசியல் அதிகாரத்தின் விளைவும் செயற்பாடும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டது. இருப்பினும், அவர் அவமானகரமான முறையில் ராஜினாமா செய்த பின்னர், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை அவர் அனுபவித்தது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ஷ என்ற காரணத்திற்காக மாத்திரமன்றி, ஓய்வுபெற்ற அரசியல்வாதிகளின் பராமரிப்புக்காக இலங்கை ஓர் நாடு என்ற வகையில் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாரிய செலவை சுமப்பதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவரின் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி இலங்கை அரசியலமைப்பின் 36வது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 36 வது உறுப்புரையின் பிரகாரம்,
- அரசியலமைப்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள், ஜனாதிபதி பதவியை வைத்திருப்பவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய உரிமையை பாராளுமன்றம் தீர்மானம் மூலமாக தீர்மானிக்க வேண்டும். அத்தகைய ஓய்வூதியமானது, எந்தவொரு முன் சேவையின் காரணமாக அத்தகைய நபருக்கு உரித்தான வேறு எந்த ஓய்வூதியத்திற்கும் மேலதிகமானதாக இருக்கும்.
- ஜனாதிபதியின் பதவியை ஏற்றுக்கொண்டவுடன், அத்தகைய பதவியை வைத்திருப்பவர், அத்தகைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கும், அதன்பின், பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கும் தகுதியுடையவராவார். இந்த உறுப்புரையின் அடுத்தடுத்த திருத்தம், ரத்து அல்லது மாற்றுதல், மற்றும் இந்தச் சட்டத்திற்கு முரணான எந்தவொரு சட்டமும் அல்லது அதன் ஏற்பாடுகளும் பின்னோக்கிச் செயற்படாது.
- ஜனாதிபதியின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை திரட்டு நிதியில் வசூலிக்கப்படும்.
- பாராளுமன்றம் தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவியில் இருப்பவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் அல்லது ஓய்வூதிய உரிமையை அதிகரிக்கலாம், ஆனால் குறைக்கக்கூடாது.
இலங்கையின் அரசியலமைப்பு எவ்வாறு ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது என்பதை மேற்கூறியவை காட்டுகின்றன. எனினும், கோத்தபாய ராஜபக்சவை ஓய்வு பெற்ற ஜனாதிபதியாகக் கருத முடியாது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் கோரிக்கையை அடுத்து பின்வரும் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.
ஜனாதிபதி செயலகத்திடம் பின்வரும் வினாக்களைக் கேட்டோம்.
- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எத்தனை வாகனங்களை பயன்படுத்துகின்றார்? அவற்றின் தயாரிப்புகள் மற்றும் மாதிரிகள் என்ன? கடந்த ஆறு மாதங்களில் அந்த வாகனங்களின் ஓட்டுநர் பதிவுகள்.
- அவர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாதந்தோறும் எவ்வளவு செலவாகிறது? அவரது சம்பளம், உணவு, தொலைபேசி கட்டணம், மருத்துவக் கட்டணம் போன்றவற்றுக்கு அரசு எவ்வளவு செலவு செய்தது?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளித்து, தகவல் அதிகாரியான ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. எஸ்.கே. சேனாதீர வாகனங்கள் தொடர்பான தகவல்களை போக்குவரத்துப் பிரிவினர் தமக்கு வழங்கியவுடன் அதனைத் தெரிவிப்பதாக எமக்குத் தெரிவித்தார். மீதமுள்ள தகவல்களை அவர் எங்களுக்கு அனுப்பியுள்ளார். அதன்படி, டிசெம்பர் 2022க்கான ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலர் கொடுப்பனவு ரூ.99,000.00 ஆகும். தொலைபேசி, மின்சாரம், நீர் மற்றும் இதர செலவுகளுக்கு டிசம்பர் 2022க்கு ரூ. 338,387.60 செலவிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை அனுபவிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியின் சட்டரீதியான உரிமை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்ற போதிலும், அதிகாரிகள் அது தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. நாடு திவாலான நிலையில் இருக்கும் நேரத்தில் கூட, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக ரூ. 84.46 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மதிப்பீட்டின்படி, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ரூ.15.67 மில்லியன், மகிந்த ராஜபக்சவுக்கு ரூ. 23.17 மில்லியன், மைத்திரிபால சிறிசேனவுக்கு ரூ.23.17 மில்லியன், மற்றும் மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு ரூ. 14.17 மில்லியன் மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 8.28 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்த முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஜனாதிபதி குடியிருப்பு மற்றும் வாகனங்களின் பராமரிப்பு செலவு ரூ. 42 மில்லியன் ஆகும். அதில் ரூ. 37 மில்லியன் வாகன பராமரிப்பு செலவாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது 2022 ஆம் ஆண்டிற்கு ரூ.6.8 மில்லியன் மட்டுமேயாகும். அதன்படி, மேலதிகமாக 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு வாகனப் பராமரிப்புக்காக ரூ. 30.2 மில்லியன் செலவிடப்படுகிறது. இந்த முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டிற்கு 37 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் செலவினம் 2022 ஆம் ஆண்டில் ரூ. 24.3 மில்லியனாகும். அதன்படி, அந்தத் தொகை 2023 ஆம் ஆண்டிற்கு ரூ. 12.7 மில்லியனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி திணைக்கள புள்ளிவிபரங்களின்படி, மஹிந்த ராஜபக்ஷவின் ஓய்வூதிய கொடுப்பனவு ரூ. 1.17 மில்லியனாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் ஓய்வூதிய கொடுப்பனவும் இதே போன்றதாகும். ஹேமா பிரேமதாசவின் ஓய்வூதிய கொடுப்பனவு ரூ. 0.78 மில்லியனாகும். இதனால், முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்கான பொதுமக்களின் பணம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகத் தெரிகின்றது.
Recent Comments