சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, கொழும்பு 13 இல் ஒரு குறிப்பிட்ட தெருவில் சிறப்பான ஒரு மாற்றம் காணப்பட்டது.
இது, குறிப்பாக கொழும்பு நகரத்தின் சில பகுதிகளில், எந்நேரங்களிலும் தெரு விளக்குகள் ஏற்றப்பட்டிருப்பதை குறித்து சமர்ப்பிக்கப்பட்ட ஆர்.டி.ஐ. விண்ணப்பம் ஆகும். எரிசக்தி மற்றும் பொது வளங்களை தேவையற்ற முறையில் வீணடிப்பது குறித்த கவலை காரணமாக இந்த தகவல் கோரல் செய்யப்பட்டது.
தகவல் கோரிக்கைக்கு பதிலளித்த கொழும்பு மாநகர சபை, இந்த விளக்குகளை ஏற்றும் தினசரி நேரம் மாலை 5.30 தொடக்கம் இரவு 7 மணி வரை என குறிப்பிட்டது. அதைத் தொடர்ந்து மறுநாள் காலை, அவற்றை அணைக்கும் பணி அதிகாலை 5.30 மணி முதல் காலை 7 மணி வரை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்த தெரு விளக்குகளில் சில தானாகவே ஏற்றப்படும் மற்றும் அணைக்கப்படும் தானியங்கி விளக்குகள்.
மேலே குறிப்பிட்ட தெருவில் அமைந்துள்ள ஒரு தெரு விளக்கு, மாதக்கணக்காக அதன் ‘on’ நிலையில் எந்நேரமும் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், தகவல் கோரிக்கைக்கு பதில் அளிக்கப்பட்டு இந்த விடயத்தில் ஒரு அறிக்கை எழுதப்பட்ட சிறிது நேரத்திற்குப் பின், இந்த தெரு விளக்கு பகலில் எரிவதில்லை என்பது கண்டறியப்பட்டது. மாறாக, இது பொருத்தமான நேரங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது!
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் நடைமுறையில் உள்ள தகவல் உரிமைச் சட்டத்தை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய விளைவுகளைப் பெற முடியும். பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகள் குறித்து பொது அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் இது போன்ற மாற்றங்களை சிறப்பாகக் கொண்டுவருவதற்காக ஆர்.டி.ஐ. போன்ற சட்டங்கள் பெரும்பாலும் உதவக்கூடும் என்பது தெளிவாகிறது.
Recent Comments