ஹேரத் துலானி என்பவர் மாத்தளை சந்தி அனுராதபுரத்தில் வாழ்கின்றார். 2016 ஆம் ஆண்டு துலானி அவரது காணிக்கான உரிமையை வழங்கும் காணி அளவீடு பற்றிய நிகழ்வில் பங்குபற்றினார். மிஹிந்தலை பிரதேச செயலகத்திற்கு அது தொடர்பாக அவர் பல முறை விஜயம் செய்துள்ளார்.
நகரத்தில் வசித்து வந்த அவர் 2017 ஆம் ஆண்டு தமது சொந்த கிராமத்தில் வசிப்பதற்காக வந்துள்ளார். காணி அளவீட்டின்படி அவரது காணிக்கான உரிமை கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைத்து கிராமத்திற்கு வந்த நாள் முதல் செயற்பட்டு வருகின்றார். இரண்டு வருடங்களாக இந்த தேவையின் நிமித்தம் பிரதேச செயலகத்திற்கும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கும் பலமுறை சென்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு ஒருபோதும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரிகள் கூறிய விடயம் குறித்த காணி அளவீடு தொடர்பாக அவர்களிடம் எந்தவிதமான தகவலும் இல்லை என்றும் அத்தகைய ஒரு காணி அளவீட்டை செய்யவில்லை என்பதையுமாகும்.
துலானி இந்த பதிலில் திருப்தி அடையவில்லை. இந்த விடயம் தொடர்பாக அதிகாரிகள் புறக்கணிப்பு செய்வதாகவே அவர் குற்றம்சாட்டி வந்தார். தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் பற்றி அறிந்துகொண்ட இளைஞர்கள் குழுவொன்று அவரை அணுகி அதுபற்றிய தகவல்களை எவ்வாறு அதிகாரிகளிடம் இருந்து கோருவது என்பது தொடர்பாக அறிவூட்டினர். அதனைத் தொடர்ந்து துலானி என்பவர் மிஹிந்தலை பிரதேசத்தில் தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் உரிய தகவல்களை கோரி விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தார்.
அந்த விண்ணப்பப் படிவத்தைத் தொடர்ந்து ஏற்கனவே இல்லை என்று மறுக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய விபரங்களை வழங்க முடியும் என்ற பதில் கடிதம் ஒன்று ஹேரத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க கட்டணத்தை செலுத்தி உரிய தகவல்களை பெற்றுச் செல்லுமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பப் படிவத்திற்கு வழங்கப்பட்டிருந்த பதிலில் அவருடைய காணி உரிமையை வழங்க முடியும் என்ற தகவலும் உள்ளடங்கி இருந்தது. அத்துடன் அவரால் எதிர்பாராத சில நற்செய்தியும் அந்த தகவலில் இருந்தது. அவரது காணியின் அளவும் எதிர்பார்த்திருந்ததை விட கூடுதலானது என்ற செய்தியையும் அவரால் அறிய முடிந்தது. திருமதி ஹேரத்தின் காணிக்கு மாகாண காணி ஆணையாளர் அங்கீகாரம் வழங்கி உள்ளார் என்ற தகவலும் வழங்கப்பட்ட தகவல்களில் இருந்தமை ஆச்சரியமாக இருந்தது.
அத்துடன் அவரது காணி அரச காணியாக குறிக்கப்பட்டு தவறான பதிவு இடம்பெற்றிருந்நதும் சுட்டிக் காட்டப்பட்டது.
தகவல் அறிவதற்கான விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கப்பட்டதால் திருமதி ஹேரத் துலானிக்கு இந்த தகவல்கள் வழங்கப்பட்டன. அவரது காணி உரிமை பற்றி நீண்ட காலமாக இருந்து வந்த சந்தேகம் நீங்கியது. அவருக்கு வழிகாட்டிய இளைஞர்களுக்கு அவர் நன்றி தெரிவிக்கின்றார்.
அந்த இளைஞர்களும் இதனை அவருக்கு கிடைத்த ஒரு வெற்றியாக கருதுகின்றனர். ஏனைய மக்களுக்கும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள இதனை ஒரு பலமான ஆயுதமாக கருதுகின்றனர். திருமதி ஹேரத்தின் விவகாரத்தை மையமாக வைத்து அப்பிரதேச மக்களையும் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் தொடர்பாக அறிவூட்டல் செய்வதற்கு இந்த குழு தயாராகி இருக்கின்றது.
இந்த தகவல் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல் (SDGAP) தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய சிலரால் முன்வைக்கப்பட்டதாகும்.
Recent Comments