தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி தமது ஊரில் மின் கம்பங்களில் எரியாமல் இருந்த மின் விளக்குகளை எரியச் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கிய தகவலை அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் உள்ள மதுனாகல கிரமத்தில் இருந்து அறிய முடிந்தது.
தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்தி கிராம மட்டங்களில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது எவ்வாறு என்பது தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அறிவூட்டல்களை செய்து வருகின்ற நிலையில் தமது ஊரில் இருந்து வருகின்ற பொதுப் பிரச்சினையாக கருதப்படுகின்ற ஒரு தேவையை அடையாளம் கண்டு கடந்த ஜூலை 20 ஆம் திகதி சூரியவெவ பிரதேச சபைக்கு தகவல் அறிவதற்கான ஒரு விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தனர்.
காட்டு யானைகள் பரவலாக நடமாடுகின்ற மதுனாகலை கிராமத்தில் வீதிகளில் இரவு நேரங்களில் எரிந்துகொண்டிருந்த மின்விளக்குகள் எரியாமல் இருந்து வந்தமையால் பிரதேச வாசிகள் இரவு நேர நடமாட்டத்தின்போது கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்கினர். இப்பிரதேச மின்கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்கள் எரியாததற்கான காரணத்தை வினவி மதுனாகலை கிராமத்தைச் சேர்ந்த சுமனானந்த என்பவரும் இன்னும் சிலரும் இணைந்து சூரியவெவ பிரதேச சபைக்கு தகவல் அறிவதற்கான ஒரு விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்தனர். அந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு சரியாக 05 நாட்களுக்குள் சூரியவெவ பிரதேச சபை மின் கம்பங்களில் இருந்த மின்குமிழ்களை பொருத்த நடவடிக்கை எடுத்ததாக பிரதேசவாசிகள் கூறினர்
.
அதுபற்றி கருத்து தொpவித்த சுமனானந்த கூறியதாவது : –
மதுனாகலை சந்தியானது அதிகமாக சன நடமாட்டம் உள்ள ஒரு இடமாகும். கடந்த சில மாதங்களாக இப்பிரதேசத்தில் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியவில்லை. இப்பகுதி இருளில் மூழ்கி இருந்ததால் மக்கள் சிரமங்களை அனுபவித்தனர். இதுபற்றி சூரியவெவ பிரதேச சபைக்கு பல முறை அறிவித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதனால் தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் நாங்கள் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தோம். அதன் பின்னர், ஒருசில தினங்களில் மின் கம்பங்களில் மின் குமிழ்கள் பொருத்தப்பட்டன. அவை எரிய ஆரம்பித்தன. தகவல் அறிவதற்கான சட்டம் கிராம மக்களான எமக்கு ஒரு பலமாகும். இது தொடர்பாக நாட்டில் மக்கள் அனைவரும் விழிப்புணர்வு
பெற்றால் நன்மையடையலாம்.
தகவல் அறிவதற்கான சட்டம் இந்நாட்டு மக்களின் சட்டமாகும். மக்களுக்கு அதன் மூலம் நன்மையடைய முடியூம். சூரியவெவ மதுனாகலை மக்கள் அதனை பயன்படுத்தி இலங்கை முழுவதற்கும் முன்மாதிரியாகியுள்ளனர்.
Recent Comments