67 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தண்ணீரில்!!
சஜீவ விஜேவீர
கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அப்போது குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் காணப்படாத போதிலும், தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த முறை தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதனை மக்களுக்கு செலுத்துவதே என உலக சுகாதார நிறுவனம் தொற்றுநோயின் தொடக்கத்தில் அறிவியல்பூர்வமாக ஒப்புக்கொண்டது.
அதன்படி, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் அப்போதைக்கு ஆராய்ச்சி கட்டத்தில் இருந்த பல தடுப்பூசிகள் விரைவாக மேம்படுத்தப்பட்டு உலகளாவிய அளவில் பயன்படுத்தப்பட்டன.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பணக்கார நாடுகள் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மில்லியன் கணக்கான டோஸ்களை முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், எமது அண்மைய நாடான இந்தியா கூடத் தனது குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பிறகு மீதமிருந்தால் மட்டுமே தனது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக, இலங்கைக்கு நன்கொடையாகத் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை COVID-19 கட்டுப்பாட்டு திட்டத்தைச் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் மாத்திரமே கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசியேற்றும் திட்டங்கள் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலானதன் பின்னரே இலங்கையில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதாவது, 2021 பெப்ரவரி முதல் வாரத்தில் இது தொடங்கப்பட்டாலும், தடுப்பூசி திட்டம் சரியாக முகாமை செய்யப்பட்டதாக தெரியவில்லை. இதேபோல், ஒழுங்கற்ற திட்டமிடல் காரணமாக, தடுப்பூசிகளின் கொள்வனவு, விநியோகம் மற்றும் தடுப்பூசி யேற்றிக்கொள்வது குழப்பமான ஒரு செயலாகவே காணப்பட்டது.
முறைசாரா திட்டங்கள் மற்றும் மாறுபட்ட கருத்துக்கள்
2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சிடம் விடுக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைய, இலங்கைக்கு கிடைத்த முதல் தொகுதி தடுப்பூசிகள் இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட 500,000 டோஸ்கள் கொண்ட Oxford-AstraZeneca தடுப்பூசி என்று தெரியவந்தது. குறித்த தடுப்பூசி தொகுதியானது ஜனவரி 28, 2021 அன்று நாட்டை வந்தடைந்தது.
நாட்டின் மிகவும் நோயுறத்தகு குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டாலும், அத்தகைய குழுக்களுக்குத் தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பே பெப்ரவரி 16 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி திட்டம் தொடர்பாகப் பல்வேறு நிபுணர்களின் கருத்துக்கள் குறித்து சுகாதார அமைச்சு நடத்திய கருத்துக் கணிப்பில், 18 வயதுக்கு மேற்பட்ட 450,000 பேருக்குத் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்ற கருத்து நிலவுவதாக கண்டறியப்பட்டது. அந்தக் கருத்தை அப்போதைய கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி வெளியிட்டிருந்தார். அப்போதைய அரச மருந்தாக்கல், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 2.3 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அரசு மருத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சனத்தொகையின் 60% ஆன மக்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இருப்பினும், தடுப்பூசி குறித்து சுகாதாரத் துறைக்குத் தெளிவான நிலைப்பாடு காணப்படவில்லை என்பது இங்கு தெளிவாகின்றது.
சுகாதார அமைச்சு மற்றும் இராணுவம் போன்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் நடைமுறைப்படுத்திய கோவிட்-19 கட்டுப்பாட்டு திட்டம் குறித்த பல்வேறு விவாதங்களில் முன்வைக்கப்பட்ட இந்த மாறுபட்ட கருத்துக்கள், இலங்கையில் சுகாதாரத் துறைக்குத் தடுப்பூசிமூலம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான சரியான புரிதலோ அல்லது முறையான திட்டமோ இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.
78 இலட்சம் இலவச தடுப்பூசி டோஸ்கள்
இலங்கையில் தடுப்பூசி தொடர்பாக சுகாதார அமைச்சிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்மேற்கொண்ட தகவல் கோரிக்கையின்போது, COVAX திட்டத்தின் கீழ் இலங்கை 4,308,360 தடுப்பூசிகளை நன்கொடையாகப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதேபோல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாகச் சுகாதார அமைச்சின் தகவல் அதிகாரி வழங்கிய ஆவணங்களின்படி, 3,505,000 தடுப்பூசி டோஸ்கள் நேரடி நன்கொடைகளாகப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இலங்கைக்கு 7,813,360 தடுப்பூசி டோஸ்கள் நன்கொடைகளாக மட்டும் கிடைத்துள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குக் கிடைத்த பதில்களின்படி, சுகாதார அமைச்சு பின்வரும் முறையில் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்துள்ளது.

இந்தத் தரவுகளின்படி, நன்கொடைகள் மற்றும் கொள்முதல்கள் மூலம் இலங்கை 50,147,990 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது.
இலங்கையில் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியாகவும், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு டோஸாகவும் வழங்கப்பட்டது.
2020 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர தரவுகளின்படி, அப்போதைக்கு இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 17,269,000 ஆகும். அந்த எண்ணிக்கையில், 12-18 வயதுக்குட்பட்ட 1,769,500 பேர் தடுப்பூசியின் ஒரு டோஸ் மட்டுமே பெற வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற வேண்டியவர்களின் எண்ணிக்கை 15,499,500 ஆகும். அதன்படி, இலங்கைக்குத் தேவையான மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 32,768,500 ஆகும். அரசாங்கத்தால் நன்கொடையாகப் பெறப்பட்ட மற்றும் கொள்வனவு செய்யப்பட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 50,147,990 என்பதால், இலங்கை சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தின்படி தேவையான தடுப்பூசிகளுக்குக் கூடுதலாக அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் (17,379,490) கொண்டுவரப்பட்டுள்ளன.
அப்போது உலக சுகாதார நிறுவனம் 03 டோஸ் தடுப்பூசியைப் பெற பரிந்துரைத்தது. அதன்படி, நாட்டில் சுகாதார அமைச்சிடம் போதுமான அளவு தடுப்பூசிகள் இருந்ததால், பொது மக்களுக்கு மூன்று தடுப்பூசி டோஸ்களை வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
எந்தவொரு திட்டமும் இல்லாவிட்டாலும், நாட்டில் தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக அரசாங்கத்தின் தவறான பிரச்சாரத்தாலும், பிற தயாரிப்புகள் மற்றும் அறிவியல்பூர்வமற்ற முறைகளுக்கு மக்கள் தூண்டப்படுவதாலும், மூன்றாவது டோஸ்களைப் பெறாத பலர் இன்னும் சமூகத்தில் உள்ளனர்.
இந்தத் தடுப்பூசிகள் தொடர்பான போதிய தகவல்களைச் சுகாதார அமைச்சின் வலைத்தளம் கொண்டிருக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும். 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அவை முற்போக்கான தகவல்களாகும்.
இந்தத் தகவல் சுகாதார அமைச்சின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
92 இலட்சம் டோஸ்கள் காலாவதி
அதன்படி, இலங்கையர்களுக்கு 40,116,590 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 10,031,400 டோஸ்கள் மீதம் இருந்துள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் 327,156,003 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் வலைத்தளம் கூறுகிறது.
தகவல் கோரிக்கைக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சு, ஜூலை 2023 க்குள், 7.5 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதியானதால் பயன்படுத்த முடியாததாகிவிட்டதாகக் கூறுகிறது.
ஃபைசர் ஒரு தடுப்பூசி டோஸுக்கு இலங்கை அரசாங்கம் 6.75 அமெரிக்க டாலர்கள் செலவிட்டுள்ளதுடன் 75 இலட்ச தடுப்பூசிகள் காலாவதியானதால் ஏற்பட்ட இழப்பு 50,625,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
மேலும், இலங்கையால் கொள்வனவு செய்யப்பட 17 இலட்ச சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்னும் இருப்பில் காணப்படுகின்றன.
இலங்கை அரசாங்கம் சினோபார்ம் தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு 8.391 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. அதன்படி, பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளாத காலாவதியான சினோபார்ம் தடுப்பூசிகளான 17 இலட்ச டோஸ்களின் மதிப்பு 14,264,700 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யும்போது, இலங்கை அரசாங்கம் அஸ்ட்ராசெனெகா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய இயலுமை காணப்பட்ட போதிலும், சீனாவிலிருந்து சினோபார்ம் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஃபைசர் தடுப்பூசிகள் களஞ்சிய அறைகளில் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன, அதே நேரத்தில் சீனாவிலிருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படாமலேயே காலாவதியாகிவிட்டன.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் செயல்திட்டத்தில் எந்தவிதமான திட்டமிடலோ முகாமைத்துவமோ காணப்படவில்லை என்பதற்கான சிறந்ததொரு உதாரணமாகும்.
சரியான திட்டமிடல் இல்லாமல் தடுப்பூசி திட்டத்தைத் தேவை இல்லாமல் தாமதப்படுத்திய அரசாங்கம், இந்த நாட்டு மக்களுக்கு இல்லாத தடுப்பூசி பற்றாக்குறையை இருப்பது போன்று உருவகப்படுத்தி, கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவதை மிகவும் கடினமான பணியாக மாற்றியது.
தடுப்பூசி போடுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்ற அதே வேளையில், அரசாங்க பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தி, எந்தப் பொறுப்பும் இல்லாமல், நாட்டிற்குத் தேவையானதை விட அதிகமான தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்துள்ளது. இந்தப் பணத்தை வீணடித்த ஆட்சியாளர்கள் இன்று அதிகாரத்தில் இல்லை. ஆனால் அந்தத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்திய அதிகாரிகள் இன்றும் அதிகாரத்தில் உள்ளார்கள்.
2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் உண்மையில் காணப்படாத தடுப்பூசி பற்றாக்குறையை காணப்படுவதாகக் கூறி தேவைக்கு அதிகமான தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்து அவை தற்போது காலாவதியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
Recent Comments