ஜனக சுரங்க
தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமானது, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் காலம் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வினவப்பட்டது. அதற்கு பதில் வழங்கியுள்ள அமைச்சின் தகவல் அதிகாரி கே.டி.கொடிகமுவ, எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் இந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டமூலங்களில், தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம், தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவென வடிவமைக்கப்பட்டது. இது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் கவனம் செலுத்துகிறது.
இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் நவீனமயமாக்குவது குறித்து சட்டம் கவனம் செலுத்துகிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய போக்குகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட தரவு உரிமைகளைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தனிப்பட்ட தரவு பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் அமுலாக்க அதிகாரிகளுக்கு இடையே இயங்கும் தன்மையை மேம்படுத்தவும் இது முயற்சிக்கின்றது. இந்தச் சட்டம் எல்லை தாண்டிய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சட்டத்தின் முன்னுரை கூறுகிறது. மேலும், தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் என்றும் சட்டம் கூறுகிறது. உள்ளூர் சட்டங்கள் மற்றும் சர்வதேச தரங்களுக்கு மதிப்பளித்து இது மேற்கொள்ளப்படும். தரவுப் பங்களிப்பாளர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் தனியுரிமையைப் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கத்தின் தேவையை பூர்த்தி செய்வதே இந்த கட்டமைப்பின் நோக்கமாகும்.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சபாநாயகர் கையொப்பமிட்டபோது இந்தச் சட்டம் இலங்கையில் சட்டமாக மாறிய போதிலும், சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான தரவுப் பாதுகாப்பு அதிகாரம் எப்போது முழுமையாக நடைமுறைக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்கு தொழில்நுட்ப அமைச்சு வழங்கிய பதில்கள், பல சந்தேகங்களைத் தீர்த்துள்ளது.
அந்த பதிலின் படி, தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்துவது கட்டம் கட்டமாக ஆரம்பமாகியுள்ளது. விசேட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 2341/59 இன் படி, சட்டத்தின் V பகுதி 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி முதல் செயற்படுத்தப்பட்டது.
2024 ஜனவரி 08 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 2366/08 என்ற விசேட வர்த்தமானி அறிவிப்பில், சட்டத்தின் VI, VIII, IX மற்றும் X ஆகியவை 2023 டிசம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும், பிரிவுகள் I, II, III மற்றும் VII ஆகியன 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதிமுதல் அமுலாகும் என்றும் ஜனாதிபதியும் தொழில்நுட்ப அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதிமுதல், இலங்கை பிரஜைகளுக்கு இந்த புதிய சட்ட செயலாக்கம் நடைமுறைக்கு வரும்.
தரவு பாதுகாப்பு அதிகாரசபை
இந்தச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட முக்கிய நிறுவனமாக தரவு பாதுகாப்பு அதிகாரசபை உள்ளது. இதன் உத்தியோகபூர்வ அலுவலகம் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தின் முதலாம் மாடியில், கட்டிட இலக்கம் 05 இல் அமைந்துள்ளது. தரவு பாதுகாப்பு அதிகார சபையின் அனைத்து அதிகாரபூர்வ பதவிகளும் 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதியன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டன. அதன்படி, அதிகாரசபையில் உள்ளடங்குவோர் விபரம் பின்வருமாறு:
பணிப்பாளர் சபை உறுப்பினர்கள்
1 . சிரேஷ்ட பட்டயக் கணக்காளர் திரு. அர்ஜுன ஹேரத் – பணிப்பாளர் மற்றும் தலைவர்
2 . கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன – பணிப்பாளர்
3. திரு. பிம்சர செனவிரத்ன – பணிப்பாளர்
4. சட்டத்தரணி திரு. நிசித் அபேசூரிய – பணிப்பாளர்
5. ஜனாதிபதி சட்டத்தரணி சௌமியா அமரசேகர – பணிப்பாளர்
6. திரு. ஷெஹான் விஜேதிலக – பணிப்பாளர்
7. திரு. ஜயந்த பெர்னாண்டோ – பணிப்பாளர்
பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை தலைவர் / பணிப்பாளர் நாயகம், தரவு பாதுகாப்பு அதிகார சபை, முதலாம் மாடி, கட்டிட இலக்கம் 5, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது அதிகாரசபைக்கு நேரடியாக சென்று கையளிக்க முடியும்.
Recent Comments