க.பிரசன்னா
உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய சர்ச்சைகள் இன்னும் நிறைவடையவில்லை. குறிப்பாக போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக 2022 மே 9 ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற கலவரங்களில் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டன. இந்த சொத்து இழப்புகளுக்கு பல கோடி ரூபாக்கள் சட்டவிரோதமாக இழப்பீடாக பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் பாராளுமன்றத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டன.
எனினும் இழப்பீடுகளை பெற்றுக்கொண்டவர்களின் தகவல்கள் வெளியிடப்பட்டாலும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வெளியிட்ட தகவலுக்கும் அரச நிறுவனம் வழங்கிய தகவலுக்குமிடையில் முரண்பட்ட தன்மையை அவதானிக்க முடிகின்றது. அந்த முரண்பட்ட தகவல்களினால், மேலதிகமாக ஐந்து கோடி ரூபாவுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2022 மே 9 ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற கலவரங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்களை கோரி, 21.09.2024 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் 13.12.2024 ஆம் திகதி தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டுக்கு அமைவாக விசாரணைகள் 03.04.2025 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் ஆணைக்குழு வழங்கிய உத்தரவுகளுக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் பாராளுமன்ற அலுவல்கள் பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.
பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் பாராளுமன்ற அலுவல்கள் பிரிவு 13.12.2024 மற்றும் 16.05.2025 ஆம் திகதி ஆகிய இரண்டு திகதிகளில் இரு கட்டங்களில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு நிதியில் பாரிய வித்தியாசம் காணப்படுவது அவதானிக்கப்பட்டது.
அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் அரசாங்க மதிப்பீட்டு திணைக்களம் மேற்கொண்ட மதிப்பீடுகளுக்கு அமைவாக இழப்பீடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
முதற்கட்ட தகவல்: பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் பாராளுமன்ற அலுவல்கள் பிரிவு முதற்கட்டமாக வழங்கிய தகவலில், 44 பாராளுமன்ற உறுப்பினர்களின் அசையா சொத்துக்கள் சேதமடைந்தமைக்காக 106.61 கோடி ரூபாவும் அசையும் சொத்துக்கள் சேதமடைந்தமைக்காக 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 19.19 கோடி ரூபாவும் வாகனங்கள் சேதமடைந்தமைக்காக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 1.79 கோடி ரூபாவும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் கட்டத் தகவல்: பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் பாராளுமன்ற அலுவல்கள் பிரிவு இரண்டாம் கட்டமாக வழங்கிய தகவலில், 43 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அசையும், அசையா சொத்துக்களுக்கும் வாகனங்களுக்குமாக 127.61 கோடி ரூபா பெறுமதியான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஒரே அரச நிறுவனம் இருவேறுபட்ட தகவல்களை வழங்கியமையின் மூலம் மேலதிகமாக 5 கோடி ரூபா அரச நிதியை யார் தவறாக பயன்படுத்தியதென்ற கேள்வி எழுந்துள்ளது. அவற்றை பின்வருமாறு இனங்காணலாம்.
முதற்கட்ட தகவலில் 44 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீடு 127.61 கோடி ரூபாவாகும். இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட தகவலில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீடு 122.41 கோடி ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டத் தகவலில் அசையும் சொத்து சேதங்களுக்காக 41 பாராளுமன்ற உறுப்பினர்களும் அசையா சொத்துகளுக்கு 44 பாராளுமன்ற உறுப்பினர்களும் இழப்பீடு பெற்றுள்ளதாக கூறப்பட்டாலும், இரண்டாம் கட்டத் தகவலில் அசையும் சொத்து சேதத்துக்காக 31 பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் அசையா சொத்துகளுக்காக 41 பாராளுமன்ற உறுப்பினர்களுமே இழப்பீடு பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டத் தகவலில் வாகனங்களுக்காக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இழப்பீடு பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், இரண்டாம் கட்டத் தகவலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பொல மாத்திரம் வாகனத்துக்கான இழப்பீட்டை பெற்றுக்கொண்டுள்ளார்.
முதற்கட்டத் தகவலில் அசையா சொத்துக்களுக்காக 106.61 கோடி ரூபாவும் அசையும் சொத்துக்கு 19.19 கோடியும் வாகனத்துக்கு 1.79 கோடியும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத் தகவலில் அசையா சொத்துக்களுக்காக 106.07 கோடி ரூபாவும் அசையும் சொத்துக்கு 14.96 கோடியும் வாகனத்துக்கு 1.31 கோடியும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அசையா சொத்துக்களுக்காக 54.61 இலட்சம் ரூபாவும் அசையும் சொத்துகளுக்காக 4.23 கோடி ரூபாவும் வாகனத்துக்காக 41.87 இலட்சம் ரூபாவும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்குறிப்பிட்ட வகையில் 1.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை பாராளுமன்ற உறுப்பினர்கள் இழப்பீடாக பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இயற்கை அனர்த்தங்களின் போது முழுமையான சொத்து இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டாலும் கூட, அதற்கான அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 2.5 மில்லியன் ரூபாவே வழங்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக அதிகபட்ச இழப்பீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பொது நிதி இவ்வாறு அரசியல்வாதிகளின் உதவியுடன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதையே இவ்விடயங்கள் எடுத்துக் காட்டுகின்றன. தற்போதைய அரசாங்கத்தில் இவ்விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்.
Recent Comments