News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

By In

க.பிரசன்னா

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கும் மறுசீரமைப்பதற்கும் அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக வருமானம் ஈட்டும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அரச நிறுவனங்கள் அதிக நட்டத்தை எதிர்கொள்வதால் பொது நிதியினை பயன்படுத்தி அதன் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அவ்வாறு வருமானம் ஈட்டும் வகையில் உருவாக்கப்பட்ட 20 அரச நிறுவனங்கள் தற்போது இழப்புகளை சந்தித்து வருவதால் பொது நிதியின் மூலம் அவற்றை தொடர்ந்து செயற்படுத்த வேண்டியுள்ளதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 52 அரச தொழில் முயற்சி நிறுவனங்களில் 20 அரச தொழில் முயற்சி நிறுவனங்கள் 2018 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 85,178.6 கோடி ரூபா (851.79 பில்லியன்) நட்டத்தை சந்தித்துள்ளன. 2023 ஆம் ஆண்டுக்கான தரவுகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமையால் அது தொடர்பான தகவல்களை வழங்க முடியவில்லையென அரச தொழில் முயற்சிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனம், தேசிய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் அமைப்பு, அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமான கூட்டுத்தாபனம், லக்திவ பொறியியல் கம்பனி, அரச அச்சக கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, நோர்த் சீ லிமிட்டெட், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை, பனை அபிவிருத்தி சபை, அரச மரமுந்திரிகை கூட்டுத்தாபனம், மில்கோ பிரைவட் லிமிட்டெட், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம், இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், கல்லோயா பெருந்தோட்ட கம்பனி, ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை, தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை, லங்கா சதொச, நெல் சந்தைப்படுத்தல் சபை போன்ற 20 அரச நிறுவனங்களே இவ்வாறு அதிக நட்டத்தை எதிர்கொண்டுள்ளன.

இந்த 20 அரச நிறுவனங்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தவிர ஏனைய 19 அரச நிறுவனங்களும் 2018 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 17,860 கோடி ரூபா வருமானம் பெற்றுள்ளதுடன் 20,384 கோடி ரூபா செலவை எதிர்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த 19 அரச நிறுவனங்களும் 3452.7 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளதாக அரச தொழில் முயற்சிகள் திணைக்களம் வழங்கியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 20 நிறுவனங்களிலும் 36,468 ஊழியர்கள் கடமையாற்றும் நிலையில் அதிகபட்சமாக இலங்கை மின்சார சபையில் 23,205 ஊழியர்கள் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறைந்தளவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்கள் பெரும்பாலும் தொடர்ச்சியாக நட்டத்தை எதிர்கொண்டு வருகின்றன. இவற்றில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 2064 ஊழியர்கள் கடமையாற்றுவதுடன் தொடர்ச்சியாக அதிகளவு நட்டத்தை எதிர்கொண்டு வரும் நிறுவனமாக இருந்து வருகின்றது. 2018 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 361,754 கோடி ரூபா (3617.54 பில்லியன் ரூபா) வருமானத்தை பெற்றுள்ளதுடன் 443,006.3 கோடி ரூபா (4430.06 பில்லியன் ரூபா) செலவை எதிர்கொண்டுள்ளது. இதன் மூலம் 81,725 கோடி ரூபா (817.26 பில்லியன் ரூபா) நட்டத்தை சந்தித்துள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக நட்டத்தை எதிர்கொண்டுவரும் நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக திறைசேரி அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இலங்கை தற்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும் நாடாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் இவ்வாறான அரச நிறுவனங்களினால் ஏற்படும் நட்டம் மக்களை மீண்டும் பின்னோக்கி கொண்டு செல்லக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது.

இதேவேளை பெரும்பாலான அரச நிறுவனங்கள் தாம் பெற்றுக்கொள்ளும் வருமானத்தில் பெரும்பகுதியை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்கு செலவு செய்துள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது. வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 23,205 ஊழியர்களைக் கொண்ட இலங்கை மின்சார சபை 2022 ஆம் ஆண்டு 125 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்துள்ள அதேவேளை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்காக 17,083 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளது. 

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டை மீட்டெடுப்பதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதில் ஒரு பகுதியாக நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும் அல்லது தனியார் ஒத்துழைப்பில் இலாபமீட்டுவதற்குமான நடவடிக்கையை ஆரம்பித்தது. எனினும் 2023 ஆம் ஆண்டு வரை நட்டத்தில் இயங்கும் எந்தவொரு அரச நிறுவனமும் தனியார்மயப்படுத்தப்படவில்லை என அரச தொழில் முயற்சிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இலங்கை 100,184 மில்லியன் அ.டொலர் கடனை கொண்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அவற்றில் 57,283 மில்லியன் அ.டொலர் உள்நாட்டு கடனாகவும் 37,041 மில்லியன் அ.டொலர் வெளிநாட்டு கடனாகவும் 5860 மில்லியன் அ.டொலர் உத்தரவாத கடனாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இலங்கை தற்போது பெற்றுக்கொள்ளும் வருமானத்தை விடவும் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது. இவற்றில் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களால் இந்நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பெரும்பாலான அரச நிறுவனங்கள் இலங்கையிலுள்ள வங்கிகளிடம் பெற்றுக்கொண்டுள்ள கடன்கள் அந்நிறுவனங்களின் வருடாந்த வருமானத்தை விடவும் அதிகமாகும். அரச நிறுவனங்களை இலாபத்துடன் இயக்குவதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை. மறுபுறும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையின் தேசிய கடனில் தாக்கத்தை செலுத்தும் இவ்வாறான நட்டத்தை இல்லாமல் செய்வதற்கு அரச நிறுவனங்களை இலாப மீட்டும் நிறுவனங்களாக மாற்றுவது அத்தியாவசியமாகின்றது.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவன ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் – 2022
அரச நிறுவனங்கள்31.12.2023 வரையான நட்டம் (மி.ரூ.)ஊழியர்களின் எண்ணிக்கைஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்கான செலவு (மி.ரூ.)
இலங்கை மின்சார சபை12523,20517,083
இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனம்9405721,681
லக்திவ பொறியியல் கம்பனி208013
அரச அச்சக கூட்டுத்தாபனம்228482100
விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை13205183
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்615,0532,064
ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை519891
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம்150676390
மில்கோ நிறுவனம்3921,228355
பனை அபிவிருத்தி சபை25224
News

அரச வைத்தியசாலையில் சேரிக்கப்படும் குருதி  தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுகிறது

ந.லோகதயாளன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்படுவது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  யாழ். குடாநாட்டில்…

By In
News

2025 மார்ச் முதல்முழுமையாக அமுலுக்கு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்

ஜனக சுரங்க தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு…

By In
News

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாராளுமன்ற தரவுகள்!

தனுஷ்கசில்வா ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் ஒரு தசாப்தகால வரலாற்றை இலங்கை நாடாளுமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான…

By In
News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *