க. பிரசன்னா
கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களில் மிக நீண்டகால அபிவிருத்தி திட்டமாக இது அமைந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 2021 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 18 ஆண்டுகளாக இலங்கையில் அமைக்கப்படும் வீதியாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திலிருந்து தெஹிவளை ரயில் நிலையம் வரையில் வீதி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு அதன் பின்னர் குறித்த வீதியை தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துறை வரையிலான கரையோர பாதையை நீடிக்கும் திட்டத்துக்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வு கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
இதற்காக 38 பில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டை மேற்கொள்ளவும் வீதி அபிவிருத்தியின் போது காணிகள் மற்றும் சொத்துக்களை இழக்கும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு 21 பில்லியன் ரூபாவை ஒதுக்கவும் நெடுஞ்சாலை அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் மிக நீண்டகாலம் அமைக்கப்பட்ட மெரைன் டிரைவ் (கொழும்பு திட்ட வீதி) வீதியின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துறை வரையிலான கரையோர பாதையை நீடிக்கும் திட்டம் 2023 மே மாதம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆறு கட்டங்களாக நிறைவு செய்யப்பட்டுள்ள மெரைன் டிரைவ் வீதியின் 2.3 கிலோ மீற்றர் நீளமான முதலாவது கட்டம் (இராமகிருஸ்ணா வீதி தொடக்கம் மெல்போர்ன் அவனியூ வரையான வீதி) 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 1.2 கிலோமீற்றர் நீளமான மெல்போர்ன் அவனியூ தொடக்கம் கிலென் ஆபர் இடம் வரையான வீதி 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக 2.2 கிலோமீற்றர் நீளமான கிலென் ஆபர் இடம் தொடக்கம் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் வரையான வீதி 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
நான்காம் கட்டமாக 05 கிலோ மீற்றர் நீளமான இராமகிருஸ்ணா வீதி தொடக்கம் பிரசெர் அவனியூ வரையான வீதி 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஐந்தாம் கட்டமாக 0.5 கிலோமீற்றர் நீளமான கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் தொடக்கம் ஸ்டூவர்ட்ஸ் இடம் வரையான வீதி 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆறாம் கட்டமாக 1.2 கிலோமீற்றர் நீளமான பிரசெர் அவனியூ தொடக்கம் தெஹிவளை ரயில் நிலையம் வரையான வீதி 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு சுமார் 18 வருடங்களாக கரையோர வீதியின் (மெரைன் ட்ரைவ்) அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக ஏழாவது கட்டமாக தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துறை வரையிலான கரையோர பாதையை நீடிக்கும் திட்டம் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் திட்டத்தின் நிதி செலவு விடயங்கள் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை எனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சிறப்பு திட்டங்கள் பிரிவு அறிவித்துள்ளது.
தற்போது ஆறு கட்டங்களாக நிறைவு செய்யப்பட்டுள்ள கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திலிருந்து தெஹிவளை ரயில் நிலையம் வரையிலான 7.9 கிலோ மீற்றர் வீதி கட்டுமான நடவடிக்கைகளுக்காக 1881 மில்லியன் ரூபா செலவு ஏற்படுமென மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அதற்கு செலவு செய்யப்பட்ட நிதி தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. இந்த கட்டுமான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேல் மாகாண (திட்டம்) பிரிவு நேரடி தொழிலாளர்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரைன் டிரைவ் வீதியின் முதல் கட்டத்துக்காக 450 மில்லியன் ரூபாவும் இரண்டாம் கட்டத்துக்காக 132 மில்லியன் ரூபாவும் (வீதி அகலப்படுத்தல் மற்றும் நடைபாதை உள்ளடங்களாக) மூன்றாம் கட்டத்துக்காக 264 மில்லியன் ரூபாவும் நான்காம் கட்டத்துக்காக 306 மில்லியன் ரூபாவும் (மீதி நிர்மாண வேலைகள் மற்றும் வீதி விளக்குகள் நிர்மாணம் உள்ளடங்களாக) ஐந்தாம் கட்டத்துக்காக 252 மில்லியன் ரூபாவும் ஆறாம் கட்டமாக 477 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 18 வருடங்களாக 7.9 கிலோமீற்றர் தூரம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மெரைன் டிரைவ் வீதியின் அடுத்த கட்டம் தொடர்பான வேலைத்திட்டங்கள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இத்திட்டத்தை நீடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறு நீடிக்கப்பட்டால் காலி வீதியில் ஏற்படும் வாகன நெரிசலை குறைப்பதற்கும் நேரத்தை சேமிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
Recent Comments