ந.லோகதயாளன்
கடந்த 10 ஆண்டுகளில் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலிலேயே இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
2024.12.31 இல் விண்ணப்பித்த தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பத்திற்கு பொலிஸ் தலைமையகத்தால் 2025.05.04 இல் பதில் வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட பதிலில் இலங்கை முழுவதும் 2025.01.01 இல் 76 ஆயிரத்து 381 பொலிசார் சம்பளம் பெறுகின்றனர். இதில் மாகாண ரீதியில் வடக்கில் 4 ஆயிரத்து 676 பொலிஸார் பணியாற்றுகின்றனர். இது மொத்த எண்ணிக்கையில் 6.5 வீதமாகும். இதேபோன்று கிழக்கில் 5 ஆயிரத்து 90 பொலிஸார் சம்பளம் பெறுகின்றனர் என்ற வகையில் இது மொத்த எண்ணிக்கையின் 8 வீத எண்ணிக்கையாகவே காணப்படுகின்றது.
பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆரம்பம் வரையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக 2 ஆயிரத்து 847 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட பொலிஸாரில் 657 பொலிஸார் மீள பணி வழங்கப்பட முடியாத வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
இதேநேரம் கடந்த 10 ஆண்டுகளாக பொலிஸ் திணைக்களத்தினால் சகல தரத்திலும் 19 ஆயிரத்து 963 பேர் புதிதாக பணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதே 10 வருடத்தில் ஓய்வில் சென்றவர்கள் தவிர 454 பொலிஸார் சுயவிருப்பில் பணியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பத்திற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் மொழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு சிங்கள மொழியிலேயே பதில் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Recent Comments