வீ.பிரியதர்சன்
உலகில் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான முரண்பாடுகள் மனித நாகரிகம் தோன்றிய காலம் முதல் தொடர்கதையாகி வருகின்றன. இதில் முக்கியமாக யானை – மனித முரண்பாட்டைக் குறிப்பிடலாம். இலங்கையில் யானை – மனித முரண்பாடு வரலாற்றுக் காலம் தொடக்கம் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் யானைகளுடனான இணக்கப்பாடும் அதிகமாக காணப்படுகின்றது.
இலங்கையில் அதிகரிக்கும் சனத்தொகையினால் வன விலங்குகளின் வாழ்விடங்கள் படிப்படியாக மனிதனால் ஆக்கிரமிக்கப்படும் போது இந்த முரண்பாடு அதிகரிக்கின்றது. தாவர உண்ணி என்ற அடிப்படையில் யானைகள் நாளொன்றிற்கு 200 முதல் 250 கிலோகிராம் உணவினை உட்கொள்கின்றன.
உலகளாவிய ரீதியில் சுமார் 50 நாடுகளில் யானை – மனித முரண்பாடு காணப்படுகின்றது. 13 ஆசிய நாடுகளிலும் இந்த முரண்பாடு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆசிய நாடுகளில் 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான யானைகள் உள்ளதாக புள்ளிவிபரத் தரவுகள் குறிப்பிடுகின்றன. ஆசிய நாடுகளில் இலங்கையில் 10 – 20 வீதமான யானைகள் காணப்படுகின்றன. இலங்கையில் பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான யானை – மனித முரண்பாடுகள் காணப்படுகின்றன.
இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 5,879 காட்டு யானைகள் காணப்படுவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத் தரவுகள் தெரிவிக்கின்றன. இவை உலர் வலயத்தில் ஆற்றங்கரையோரங்களிலேயே அதிகளவில் காணப்படுகின்றன. இவை பிரதானமாக உலர் வலய வனஜீவராசிகள் பாதுகாப்பு வலயங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன. இந்த வனவிலங்குப் பாதுகாப்பு வலயங்களில் ருகுணு, உடவளவை, லகுகலை, கல் ஓயா, மாதுறு ஓயா, வஸ்கமுவ, சோமாவதி சைத்திய, மின்னேரியா, கவுடுல்ல, வில்பத்து உள்ளிட்ட மகாவலி பிரதேசங்கள் முக்கிய பிரதேசங்களாகும்.
சனத்தொகை அதிகரிப்பு, விவசாய மற்றும் நீர்ப்பாசனக் குடியிருப்புத் திட்டங்களின் விஸ்தீரணம் என்பவற்றின் விளைவினால், யானைகள் நடமாடக்கூடிய காட்டுப் பிரதேசம் சுருங்கிக்கொண்டு வருகின்றது.
மேலும், தற்போது அமுலில் உள்ள பாதுகாக்கப்பட்ட பிரதேச முறைமையானது எஞ்சியுள்ள யானைகளின் எண்ணிக்கைகளுக்கு உறைவிடங்களை வழங்கப் போதுமானதாக இல்லை.
இலங்கையில் வடக்கு – கிழக்கின் எல்லைப் பகுதியிலேயே யானை – மனித முரண்பாடு அதிகமாக உள்ளது. இந்த எல்லைப்பகுதிகளில் கடந்த 1970ஆம் ஆண்டுகளில் மகாவலித் திட்டத்தின் கீழ் மக்களை குடியேற்றினர். ஆரம்பத்தில் இந்த இடங்கள் காட்டுப்பகுதிகளாக காணப்பட்டன. அவற்றை துப்புரவு செய்து, விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடங்களாக மாற்றி அந்தப் பகுதிகளுக்கு நீரையும் வழங்கி மக்களையும் குடியேற்றினர். இவ்வாறு குடியேற்றப்பட்ட பகுதிகள் அனைத்தும் யானைகள் வாழ்ந்த பகுதிகளாகும். இன்று யானை – மனித முரண்பாடுகளால் கூடுதலாக பாதிக்கப்படும் மக்களாக காணப்படுவது இவ்வாறு குடியேறியவர்களே. காடுகளை அழித்து விவசாயம் செய்யும் போது அங்குள்ள யானைகளுக்கு சிறந்த உணவு கிடைக்கின்றது. யானைகள் காடுகளில் இருந்து வெளியே வந்து காடுகளை அழித்து விவசாயத்தை மேற்கொண்ட காணிகளில் பயிரிடப்படும் உணவுகளை உட்கொள்கின்றன.
இலங்கையில்கடந்த 2013ஆம்ஆண்டுமுதல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் யானை – மனித முரண்பாட்டால் ஏற்பட்ட உயிரிழப்பின் போக்கு
இலங்கையில் யானை – மனித முரண்பாடுகளால் அதிக யானைகள் மற்றும் அதிகமாக மனிதர்கள் உயிரிழந்த மாவட்டங்களாக அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்கள் காணப்படுகின்றன.
இதேவேளை, மனித நடவடிக்கைகளால் மாத்திரம் யானைகள் அதிகம் உயிரிழந்த மாவட்டங்களாக அநுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியன காணப்படுகின்றன.
அத்துடன் யானைகளின் தாக்குதலால் மாத்திரம் மனிதர்கள் அதிகம் உயிரிழந்த மாவட்டங்களாக அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, குருணாகல், ஹம்பாந்தோட்டை ஆகியன காணப்படுகின்றன.
இலங்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் வரையான காலப்பகுதிகளை நோக்குகையில், 2022ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே அதிக யானைகள் மனித நடவடிக்கைகளால் உயிரிழந்துள்ளன. 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 439 யானைகள் உயிரிழந்துள்ளன.
அதன்படி நோக்கும் போது மனித நடவடிக்கையால் 2013ஆம் ஆண்டில் 206 யானைகளும் 2014ஆம் ஆண்டில் 232 யானைகளும் 2015ஆம் ஆண்டில் 205 யானைகளும் 2016ஆம் ஆண்டில் 281 யானைகளும் 2017ஆம் ஆண்டில் 257 யானைகளும் 2018ஆம் ஆண்டில் 319 யானைகளும் 2019ஆம் ஆண்டில் 408 யானைகளும் 2020ஆம் ஆண்டில் 328 யானைகளும் 2021ஆம் ஆண்டில் 375 யானைகளும் 2022ஆம் ஆண்டில் 439 யானைகளும் 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் வரையான காலப்பகுதி வரை 151 யானைகளும் உயிரிழந்துள்ளன.
இதேவேளை, யானைகளின் நடவடிக்கையால் 2013ஆம் ஆண்டு 70பேரும் 2014ஆம் ஆண்டு 67 பேரும் 2015ஆம் ஆண்டு 63 பேரும் 2016ஆம் ஆண்டு 88 பேரும் 2017ஆம் ஆண்டு 87 பேரும் 2018ஆம் ஆண்டு 96 பேரும் 2019ஆம் ஆண்டில் 122 பேரும் 2020ஆம் ஆண்டில் 122 பேரும் 2021ஆம் ஆண்டில் 142 பேரும் 2022ஆம் ஆண்டில் 146 பேரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையான காலத்தில் 40 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட தகவலிலேயே இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன.
மேற்படி அட்டவணைகள் யானை – மனித முரண்பாடுகளால் இரு தரப்பிற்கும் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்களை தெளிவாக காட்டுகின்றன.
அதிகமான உயிரிழப்புக்கள் யானைகளுக்கே ஏற்பட்டுள்ளதை தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் மனித உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதுடன் யானை மற்றும் மனித உயிரிழப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும் போக்கு காணப்படுகின்றது.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தகவல்களின்படி, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் வரையான காலப்பகுதிகளில் 3,201 யானைகளும் 1,043 மனிதர்களும் யானை – மனித முரண்பாட்டால் பறிக்கப்பட்ட உயிர்கள் ஆகும்.
ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டு இலங்கையில் யானைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆண்டு எனவும் 2022 ஜனவரி முதல் டிசம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் இது ஒரு வருடத்தில் பதிவுசெய்யப்பட்ட யானைகளின் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை என்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் கூறுகிறது.
இதேவேளை, யானைகள் உயிரிழக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறத்தல், மின்சார தாக்கத்திற்குள்ளாகி இறத்தல், யானை வெடி தாக்குதலில் இறத்தல், நஞ்சூட்டப்பட்டு இறத்தல், ரயில் விபத்தில் இறத்தல், வீதி விபத்தில் இறத்தல், நீரில் மூழ்கி இறத்தல், கிணற்றுக்குள் வீழ்ந்து இறத்தல், ஏனைய விபத்துக்களில் இறத்தல், இயற்கையாக இறத்தல், புழு வைத்து இறத்தல், பிளாஸ்டிக்கை உட்கொண்டு இறத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.
யானைகள் அதிகமாக மனித நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் பயிர்ச் செய்கை நிலங்களிலும் உட்புகுந்து அடாவடித்தனத்தில் ஈடுபடுகின்றன. இதனால் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் பாதிப்புக்களும் இன்னல்களும் இருதரப்பிலும் ஏற்படுகின்றன. யானை – மனித முரண்பாடுகள் இடம்பெறும் பகுதிகளில் பொருளாதாரப் பாதிப்புக்கள் என்று பார்க்கையில் யானைகள் அதிகம் நாசம் செய்யும் பொருளாதாரப் பயிர்களாக நெல், வாழை, தென்னை, மரவள்ளி, சோளம், பழ வகைகள், நிலக்கடலை, மரக்கறிச் செய்கை, கரும்புச் செய்கை போன்றவை முக்கியமாக காணப்படுகின்றன. இவ்வாறான செய்கைப் பகுதிகளுக்கு யானைகள் விருப்பத்துடன் செல்வதனால் குறிப்பிட்ட செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்களுக்கும் நட்டங்களுக்கும் உள்ளாகின்றனர்.
இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபா மதிப்புடைய பயிர்கள் சேதமடைவதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் தொடர்பான விசேட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காட்டு யானைகள், குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள், மர அணில்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் ஆகிய விலங்குகள் பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளாக கண்டறியப்பட்டுள்ளதுடன் இவற்றில் காட்டு யானைகள் தவிர மேலும் 6 விலங்குகள் பயிர்களை சேதம் விளைவிக்கும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக குறித்த விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை – மனித முரண்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காகவும் யானைகள் காணப்படும் சுற்றுப்புறச் சூழலின் நிலைத்திருக்கும் தன்மையினை பேணவும் முறையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகின்றது.
“யானைகளின் குடிப்பரம்பலையோ அல்லது அவற்றின் நடமாடும் பகுதிகள் தொடர்பிலோ எவ்வித சிந்தனைகளுமின்றி மின்சார வேலிகள் அமைக்கப்படுகின்றன. மின்சார வேலிகளை அமைப்பதற்கு தனிக்கொள்கையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். யானை எந்தெந்த பகுதிகளில் வாழவேண்டுமென்ற கொள்கை வரவேண்டும். எந்தெந்த பகுதிகளில் மனிதன் வசிக்க முடியாதென்ற கொள்கை வரவேண்டும். இந்த கொள்கை வந்த பின்னர் யானைகள் இயற்கையாக வாழக்கூடிய இடங்களை மறித்து மின்சாரவேலிகளை அமைக்க வேண்டும்” என்கிறார் வவுனியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை, பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ச. விஜயமோகன்.
குறிப்பாக மின்சாரவேலி அமைத்தல், உயிரியல் ரீதியிலான வேலிகளை அமைத்தல், மனிதர்களுக்கும் யானைக்கும் இடையில் பரஸ்பர பிணைப்பை ஏற்படுத்துவதன் தேவை குறித்து மக்களுக்கு விழிப்பூட்டுதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். யானை மற்றும் மனித உயிர்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒரு சமநிலையைப் பேணுதல் மிகவும் இன்றியமையாதது. நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற வேளையில் யானைகள் தாம் வாழ்கின்ற வசிப்பிடங்களிலிருந்து வேறொரு பிரதேசத்திற்கு விரட்டியடிக்கப்படுவது ஒரு நிலையான நீண்டகாலத் தீர்வாக அமைய முடியாது. குறிப்பிட்டளவு யானைகள் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியில் காணப்படுவதால் அவற்றை பாதுகாப்பதற்கான முறையான புதிய உபாய முறைகள் தேவையாக உள்ளன.
“ யானை – மனித முரண்பாட்டை தடுக்க புதிய முறைகள் உருவாக்கப்படுகின்றன. தொங்கும் மின்சார வேலிகள் அமைப்பதே இலங்கைக்கு பொருத்தமான தீர்வாக அமையும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் மின்சார வேலிகள் மிகவும் நடைமுறைச் சாத்தியம் மற்றும் பயனுள்ள முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆசிய யானைகள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனமாக உள்ளன என்பதால் இப்போது சாதாரண மின்சார வேலிகளை உடைக்கும் வழிகளைக் கண்டறிந்துள்ளன. இதன் விளைவாக தற்போது தொங்கும் மின்சார வேலிகள் ஒரு சிறந்த நீண்டகாலத் தீர்வாக இருக்கும்” என்றார் கலாநிதி ச. விஜயமோகன்.
“வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் தகவலின் படி இதுவரை 5,024.63 கிலோமீற்றர் நீளம் கொண்ட மின்சாரவேலி அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக தொடரும் யானை – மனித முரண்பாடுகளைக் கட்டுப்படுத்த இதுவரை 202 கிலோ மீற்றர் நீளமான 9 மின்சாரவேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக” மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் கே. சுரேஷ்குமார் கூறுகிறார்.
யானை – மனித முரண்பாடுகளை தடுப்பது தொடர்பில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் பேச்சளவிலேயே செயற்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்காக ஒரு குழுவை அமைத்தார் அந்தக் குழுவில் 4 விஞ்ஞானிகளை உள்ளடக்கியிருந்தார். பின்னர் தற்போதைய ஜனாதிபதி மீண்டும் குழுவொன்றை அமைத்துள்ளார். சரத் பொன்சேகா அமைச்சராக பதவி வகித்தபோது, வெளியில் நடமாடும் யானைகளை காடுகளுக்குள் கொண்டு செல்வோமென்றார். வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்களாக வருவோர் மாறிமாறி ஒவ்வொரு திட்டங்களையும் தீர்மானங்களையும் செயற்படுத்தப்போவதாக பேச்சளவில் தெரிவிப்பார்கள். ஆனால், அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறுகள் கிடையாது.
“யானைகளின் குடித்தொகை பாதிக்காத வகையில் அவற்றைப் பேணுவதன் மூலம் யானை – மனித முரண்பாட்டை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இந்த முரண்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்தலாம் என்பது இயலாத விடயம். யானை – மனித முரண்பாட்டை நாம் விஞ்ஞான ரீதியாகவேஅணுக வேண்டும். மனிதாபிமான ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ அதனை அணுக முற்பட்டால் இறுதி வரைக்கும் அதற்கான தீர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பமே இல்லை” என்கிறார் கலாநிதி ச. விஜயமோகன்.
யானை – மனித முரண்பாட்டில் அரசியல் காணப்படுகின்றமையும் யானைகளின் உயிரியல் தன்மை விளங்காமையுமே இந்த விடயம் பாரதூரமானதாக காணப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு துறைசார்ந்தோர் எடுக்கும் முயற்சிகளை அரசாங்கமும் அரசியலும் மக்களும் மதங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டில் நாளுக்கு நாள் யானை – மனித முரண்பாடுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. எதிர்காலத்தில் இந்த நிலைமை இன்னும் மோசமடையலாம். இந்தப் பிரச்சினை முற்றாக தீர்க்கப்பட முடியும் அல்லது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது சாத்தியமற்றதொன்று. இருப்பினும், இந்த முரண்பாடுகளை குறைக்கவும் இரு தரப்பு உயிரிழப்புகளை தடுக்கவும் எடுக்கப்படுகின்ற ஒவ்வொரு முயற்சியும் திறன்மிக்க வகையிலும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.
Recent Comments