க.பிரசன்னா
புதிய அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களுடைய வாக்குகளால் நியமிக்கப்படும் இவர்களுக்கு சம்பளம், கொடுப்பனவு, ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லம், வாகனங்கள், பணியாட்குழாம், அலுவலக உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போன்ற பல்வேறு உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
மக்களுடைய வரிப்பணத்தின் மூலம் இதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிலையில் மேற்படி செலவுகளை குறைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளமையால் அவை தொடர்பில் ஆராய்ந்து திறைசேரிக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான குழுவை அமைச்சரவை நியமித்துள்ளது.
மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும், கொவிட் தொற்று காலப்பகுதியில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த போதும் அரசியல்வாதிகளுக்கான கொடுப்பனவுகள் தங்குதடையின்றி வழங்கப்பட்டன. மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்படுபவர்கள் தாங்கள் பதவிவகிக்கும் காலத்துக்கான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் போதும், அவர்கள் பதவியை விட்டு நீங்கிய பின்னரும் தங்களுடைய வாழ்நாளில் அனுபவிக்கும் சலுகைகளுக்காக பொது நிதி பயன்படுத்துவது தொடர்பில் நீண்டகாலமாக கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும் முன்னைய அரசாங்கங்கள் சலுகைகளை அதிகரித்தனவே தவிர அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இலங்கை பாராளுமன்றமும் அவ்வாறான சொகுசு நிலையமாக மாறிவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவிக் காலத்திலும் அதற்கு பின்னரும் பல்வேறு சலுகைகளை அனுபவித்துள்ளமையை வரலாறுகளின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவிக் காலத்திலும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் அனுபவிக்கும் சலுகைகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டு எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் தற்போது வரை 254 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் 168 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவி அல்லது பிள்ளைகளும் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற வேண்டுமாயின் அவர்கள் 5 ஆண்டுகள் பாராளுமன்ற பதவிக் காலத்தை நிறைவு செய்ய வேண்டும். 1977 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஓய்வூதியம் வழங்கப்படும் 5 ஆண்டுகள் பதவிக் காலத்தை பூரணப்படுத்தியிருந்தால் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியும், 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றியிருந்தால் மூன்றில் இரண்டு பகுதியும் ஓய்வூதியமாக கிடைக்கப் பெறும். ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு குறைவாக பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய எவரும் சபாநாயகர் ஒப்புதலுடன் தயாரிக்கும் கட்டண அட்டவணையின்படி நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர விகிதாசார ஓய்வூதியத்தைப் பெற வேண்டும் என சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 08.08.2025 ஆம் திகதி நிறைவடையவிருந்தது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 24.09.2024 பாராளுமன்றத்தை கலைத்தார். பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் கடந்த காலங்களில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய 85 உறுப்பினர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எனினும் இதற்கு முன்னர் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பதவி காலங்களில் 5 வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் இன்னும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் பாராளுமன்ற அமர்வுகளில் 5 வருடங்களை பூர்த்தி செய்த 254 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மாதாந்தம் ஓய்வூதியம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 254 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மாத்திரம் மாதாந்தம் 6.78 மில்லியன் ரூபாவும் ஏனைய கொடுப்பனவுகளாக 9.92 மில்லியன் ரூபாவும் பகிரப்படுகின்றது.
மேலும் 1931 ஜூலை 7 ஆம் திகதிக்குப் பின்னர் (முதலாவது அரசு பேரவை) இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றிய இலங்கையர்கள் மரணித்த பின்னரும் அவர்களது மனைவி அல்லது பிள்ளைகளுக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன. (1990 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திருத்தச் சட்டம்) இவ்வாறு 168 முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன. இவர்களின் ஓய்வூதியத்துக்காக 4.85 மில்லியன் ரூபாவும் கொடுப்பனவுகளுக்காக 4.77 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்படுகின்றது.
இதன்மூலம் 422 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 26.33 மில்லியன் ரூபா (2.63 கோடி ரூபா) செலவு செய்யப்படுகின்றது.
1978 செப்டெம்பர் 07 ஆம் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதோடு, முதலாவது பாராளுமன்றமானது முன்னைய தேசிய அரசுப் பேரவைக்கு நிகராக மாற்றப்பட்டது. அத்துடன் பாராளுமன்ற பதவிக்காலம் ஆறு வருடங்களாக காணப்பட்டது. ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினராக 5 வருடங்கள் கடமையாற்றினால் அவருக்கான ஓய்வூதியம் கிடைக்கப்பெறும். 2015 ஆம் ஆண்டு 19 ஆவது திருத்தத்தின் பின்னர் பாராளுமன்ற பதவிக்காலம் 5 வருடங்களாக மாற்றப்பட்டது.
அதனடிப்படையில் இலங்கையின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது, ஏழாவது, பாராளுமன்றங்கள் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த காலப்பகுதியில் கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். நான்காவது, ஐந்தாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது பாராளுமன்றங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பதாகவே கலைக்கப்பட்டமையால் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஓய்வூதியங்களை இழக்கும் நிலை உருவானது.
எனினும் 2015 ஜூன் 26 ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்ச்சியாக 2024 அக்டோபர் மாதம் வரை 422 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் மனைவி அல்லது பிள்ளைகள் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை பெற்று வருகின்றனர். அவ்வாறெனின் குறிப்பிட்ட காலப்பகுதியில் 102 மாதங்களுக்காக 268.26 கோடி ரூபா இவர்களின் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றது.
மேலும் ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக பல்வேறு காலப்பகுதியில் விசேட சுற்றறிக்கைகள் மற்றும் அமைச்சரவை அனுமதியின் மூலம் இவர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
- 01.01.2014 ஆம் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 37/2013 இன் அடிப்படையில் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மனைவி அல்லது பிள்ளைகளுக்கு 3675 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு.
- 01.04.2024 ஆம் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2024 இன் அடிப்படையில் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மனைவி அல்லது பிள்ளைகளுக்கு 2500 ரூபா கொடுப்பனவு.
- 01.11.2014 ஆம் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 24/2014 இன் அடிப்படையில் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மனைவி அல்லது பிள்ளைகளுக்கு 1000 ரூபா இடைக்கால கொடுப்பனவு.
- 01.04.2015 ஆம் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 05/2015 இன் அடிப்படையில் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மனைவி அல்லது பிள்ளைகளுக்கு 1000 ரூபா கொடுப்பனவு.
- 26.09.2017 ஆம் திகதிய அமைச்சரவை பத்திர எண். 17/2069/702/055 இன் அடிப்படையில் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மனைவி அல்லது பிள்ளைகளுக்கு 10 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு (1).
- 01.06.2019, 30.04.2019 ஆம் திகதிய அமைச்சரவை பத்திர எண். 19/1057/121/009 இன் அடிப்படையில் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மனைவி அல்லது பிள்ளைகளுக்கு 15 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு (2).
- 01.01.2022 ஆம் திகதிய சுற்றறிக்கை இலக்கம் 03/2022 இன் அடிப்படையில் ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மனைவி அல்லது பிள்ளைகளுக்கு 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு – 2022.
இவற்றுக்கும் மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றும் காலப்பகுதியில், ஒவ்வொரு கூட்டத்துக்கும் சமூகமளிப்பதற்கு 2500 ரூபாவும் குழுக்கூட்டங்களுக்கு சமூகமளிப்பதற்கு 2500 ரூபாவும் அலுவலகப்படியாக ஒரு இலட்சம் ரூபாவும் வழங்கப்படுகின்றது.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் படியாக 54,285 ரூபாவும் கேளிக்கைப் படியாக 1000 ரூபாவும் ஓட்டுநர் வழங்கப்படாவிட்டால் ஓட்டுநர் படியாக 3500 ரூபாவும் வழங்கப்படுகின்றது. தொலைபேசி கட்டணமாக 50 ஆயிரம் ரூபாவும் அலுவலக பணியாட் தொகுதியினருக்கு 10 ஆயிரம் ரூபாவும் இலவச தபால் வசதிக்காக வருடாந்தம் 350,000 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
அத்துடன் தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு மற்றும் பாராளுமன்ற உணவுசாலையில் உணவு சலுகை என பல கோடி ரூபா பொது நிதி பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளுக்காக செலவு செய்யப்படுகின்றது.
மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் இவர்கள் தங்களுடைய பதவிக் காலத்திலும் அதற்கு பின்னரும் பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொண்டாலும் மக்கள் அவர்களால் பெற்றுக் கொண்ட பயன்கள் என்ன என கேள்வி எழுகின்றது. இதனால் புதிய அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யும் நடவடிக்கை விரைவில் முடிக்கப்பட்டு, பொது நிதிக்கு ஏற்படும் இழப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Recent Comments