ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி
உலகெங்கிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவது மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். 22 மில்லியன் குடிமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையின் சுகாதார சேவைக்குள் மருத்துவ கழிவுகளை அகற்றுவது ஒரு சிக்கலான சவாலாக உருவாகியுள்ளது. மருத்துவக் கழிவுகளை முறையற்ற வகையில் அகற்றுவது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சேவையில் உள்ள நிறுவனங்களின் செயற்பாட்டு வினைத்திறனுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
வளங்கள் வரையறுக்கப்பட்ட நிலையில் உள்ள இலங்கையில் மருத்துவ கழிவுகளை முகாமை செய்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் குறைந்த மட்டத்தில் உள்ளதாக தகவல் அறியும் உரிமையின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள 50 முன்னணி வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆக்கமானது பிரச்சினையான சூழ்நிலையில், கேள்விப்பத்திரம்கோராமல் மருத்துவ கழிவுகளை அகற்றும் நிறுவனத்தை மாத்தறை வைத்தியசாலை ஈடுபடுத்தியதன் விளைவாக 2019ஆம் ஆண்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சட்டவிரோத சேதத்தை ஆராய்கிறது.
அம்பாந்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொன்னொருவ கேதன்வெவ கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மகாவலி இடஒதுக்கீடு பகுதியில் மருத்துவ கழிவுகளை சிலர் புதைத்துள்ளதாக பிரதேசவாசி ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் அம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகம், மகாவலி அலுவலர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அலுவலர்கள் இணைந்து 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணையில் கூறப்பட்ட மருத்துவக் கழிவுகள் 2019 பெப்ரவரி 20 அன்று தோண்டி எடுக்கப்பட்டதுடன், இது மருத்துவமனைகளில் இருந்த மருத்துவ கழிவுகள் வேறு சில இடங்களில் எரிக்கப்பட்டதற்கான ஆதாரமாகியது.
மருத்துவ கழிவு என்றால் என்ன?
சுகாதாரப் பாதுகாப்பு தொகுதிகளில் உருவாக்கப்படும் பரந்த அளவிலான பொருட்கள் மருத்துவக் கழிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவக் கழிவுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
1. இரத்தம், உடல் திரவங்கள், இழையங்கள் போன்றவற்றால் மாசுபடுத்தப்பட்ட தொற்றக்கூடிய கழிவுகள்.
2. மனித உடல் பாகங்கள் உட்பட கூறுகள் மற்றும் இழையங்கள்.
3. காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகள் மற்றும் மருத்துவ பக்கவிளைபொருட்கள்.
4. காயங்களை ஏற்படுத்தக்கூடிய ஊசிகள், ஊசி மருந்து ஏற்றும் குழாய்கள் மற்றும் பிற கூர்மையான கழிவுகள்.
5. நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் கரைப்பான்கள் மற்றும் உபகரணங்கள் போன்ற பொருட்கள்.
மருத்துவக் கழிவுகளை முறையற்ற வகையில் அகற்றுவது மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக நோய் பரவல். முறையற்ற வகையில் முகாமை செய்யப்படும் தொற்றுக் கழிவுகள் எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் மற்றும் காசநோய் போன்ற நோய்களைப் பரப்பலாம். இந்த பொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தாவிட்டால் அவை சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், மருத்துவக் கழிவுகளை பொறுப்பற்ற வகையில் அகற்றுவது நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் போன்ற நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும். இது நோய்களை பரப்பலாம் என்பதுடன் நீர்வாழ் சூழற்தொகுதிகளை சேதப்படுத்தலாம். குறிப்பாக குப்பைக் கிடங்கு மற்றும் இரசாயன கழிவுகளை முறையாக அகற்றாமல் விடுவது பூமியை மாசுபடுத்துவதுடன் சூழலை விவசாயம் மற்றும் பிற பயன்பாட்டிற்கு பொருத்தமற்றதாக உருவாக்கும். பிரதானமான ஆபத்து என்னவென்றால், தொற்று ஏற்பட்டால் அல்லது தோலுடன் தொடர்புற்றால் அது மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
மூவர் அடங்கிய விசாரணைக் குழு
எவ்வாறாயினும், அம்பாந்தோட்டை பிரதேச சபையிலிருந்து தகவல் அறியும் உரிமையின் கீழ் பெறப்பட்ட தகவலின் மூலம், 2019 ஆகஸ்ட் 26 ஆம் திகதி MH/SF/AD/B இலக்க சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம் II) அவர்களின் பொது அதிகார கடிதத்தின் பிரகாரம் மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்க மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. இதற்கமைய, மாத்தறை பொது வைத்தியசாலைக்கு சொந்தமான மருத்துவ கழிவுகள் இவ்வாறு அகற்றப்பட்டமை விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அம்பாந்தோட்டை பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் அம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையகம் உதாஹி கந்த லேகம்லகே சிவகுமார் எனும் நபருக்கு எதிராக அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றில் வழக்கு (இல: BR 1073/19) தாக்கல் செய்திருந்ததுடன், மருத்துவ கழிவை அகற்றுமாறும் அபராதமாக ரூ. 1.5 மில்லியன் செலுத்துமாறும் எதிராளிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தகவல் அறியும் உரிமையின் கீழ் இந்த விடயம் தொடர்பாக மாத்தறை பொது வைத்தியசாலையிடம் நாங்கள் தகவல்களைக் கோரியபோது அவர்கள் தகவல் கொடுப்பதைத் தவிர்த்துவிட்டு பின்னர் நாம் தகவல் ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்த பின்னர் அவர்கள் மேன்முறையீடு இல: RTI மேன்முறையீடு/2028/2020 இன் கீழாக உத்தரவு பிறப்பித்தனர். அதன் பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலை இது தொடர்பான தகவல்களை வழங்கியது.
கோரப்பட்ட தகவல்களில் ஜனவரி 2019 முதல் டிசம்பர் 2019வரையிலான காலப்பகுதியில் மாத்தறை பொது வைத்தியசாலையில் இருந்து மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களும், அந்த நிறுவனங்களை தெரிவு செய்வதற்கான கேள்விப்பத்திர அழைப்பு ஆவணங்களும் அடங்கும்.
குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திடமிருந்தான பதில்
PU/DGH/M/RTI/30 இலக்க கடிதம் மூலம் மாத்தறை பொதுவைத்தியசாலை வழங்கிய தகவலின்படி, ஜனவரி 2019 முதல் டிசம்பர் 2019 வரையான காலப்பகுதியில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு சிசிலி ஹனாரோ என்கேர் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு (PV 91546) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட கேள்விப்பத்திரம் வழங்கும் கொள்வனவு குழுவால் வழங்கப்பட்ட கொள்வனவு குழு அறிக்கை இல: Pa/03/pra/tha/2012 இனை ஆய்வு செய்தபோது, கொள்வனவுக் குழு 19.11.2019 அன்று உரிய அனுமதி வழங்கியமை தெரியவந்தது. இது மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பற்ற முறையில் அகற்றப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னராகும்.
இது குறித்து சிசிலி ஹனாரோ என்கேர் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் உதவி முகாமையாளரான திரு. குமார பாலசூரியவிடம் கேட்டபோது, மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெற்ற தமது நிறுவனத்திற்கு மாத்தறை பொது வைத்தியசாலையில் இருந்து மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான அனுமதி குறித்த சம்பவத்திற்கு பின்னரே வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மாத்தறை பொது வைத்தியசாலை வழங்கிய முரண்பாடான தகவல் காரணமாக, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை (MH/FS/ADB/பொது முதன்மை விசாரணை இல) அம்பாந்தோட்டை பிரதேச சபையிடமிருந்து (கடித இல: HPS/EST/01/08) தகவல் அறியும் உரிமை சட்டத்தின கீழ் பெறப்பட்டது. குறித்த அறிக்கையை ஆய்வு செய்ததில், 2019 யூன் மாதத்திற்குள் மாத்தறை பொது வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் GFCC கழிவு முகாமைத்துவம் என்ற நிறுவனத்தால் அகற்றப்பட்டதும், அவர்கள் அதனை முறையாக மேற்கொள்ளாமையால், Dilani Cleaning என்ற மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2019 யூன் மற்றும் யூலை மாதங்களில் Dilani Cleaning நிறுவனம், LG-7249 என்ற லொறி மூலமாக மாத்தறை பொது வைத்தியசாலையிலிருந்து மருத்துவ கழிவுகளை அகற்றியுள்ளது. அவர்கள் 27.06.2019 அன்று 11350 கிலோவையும், 13.07.2019 அன்று 11227 கிலோவையும், 26.07.2019 அன்று 11452 கிலோவையும் அகற்றியுள்ளனர். குறித்த மருத்துவக் கழிவுகள் கொன்னொருவ பிரதேசத்திலும், கேதன்வெவ பிரதேசத்திலும் கொட்டப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
தகவல் ஏன் மறைக்கப்பட்டது?
2019 ஜனவரி முதல் யூன் வரையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகளை அகற்றிய Dilani Cleaning நிறுவனம் முறையற்ற வகையில் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதிக ஆபத்தை விளைவிக்கும் வகையில் அப்புறப்படுத்தியமை தொடர்பான தகவல்கள் மருத்துவமனையால் மூடி மறைக்கப்பட்டு, சிசிலி ஹனாரோ என்கேர் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் தொடர்புடைய மருத்துவக் கழிவுகளை அகற்றியதாக பிழையான தகவலை வழங்கியமை கொள்வனவு செயற்பாட்டில் முறைகேடு நடைபெற்றிருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் மாத்தறை பொது வைத்தியசாலையின் தற்போதைய பணிப்பாளரிடம் வினவிய போது, அது தொடர்பில் தனக்குத் தெரியாது என மறுத்த அவர், ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் சுகாதார அமைச்சு அதனை விசாரிக்க ஏற்பாடு செய்யும் எனவும் தெரிவித்தார்.
Dilani Cleaning நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உண்மைகளைப் பெறுவதற்கும் அவர்களுக்குப் பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் நாங்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது, ஏனெனில் அவர்கள் முன்பு பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் எதுவும் செயற்படவில்லை.
எவ்வாறாயினும், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையில் எங்களது விசாரணைக்கு பதிலளிக்கும் விதமாக, கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பொது முகாமையாளரானதிரு. எம்.எம்.சி.எஸ்.கே.மால்வா மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை விடுவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், மருத்துவக் கழிவுகளை அகற்றவோ, எரிக்கவோ, Dilani Cleaning நிறுவனத்துக்கு எதுவிதமான ஒப்புதலும் வழங்கப்படவில்லை என்றார். கழிவுகளை எடுத்துச் செல்லவும் அழிக்கவும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விவரங்கள் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், அதில் Dilani Cleaning நிறுவனம் என்ற நிறுவனம் பட்டியலிடப்படவில்லை.
முறையாக அகற்றும் வழிமுறைகள்
மருத்துவ கழிவுகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க முறையான அகற்றல் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். போதுமான வசதிகள் மற்றும் நிபுணத்துவம் கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை ஏற்கனவே தேவையான சோதனைகளை நடாத்தி அனுமதி வழங்கியுள்ளது.
அந்தந்த நிறுவனங்கள் முதன்மையாக மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்து கழிவு வகைக்கு ஏற்ப பொதி செய்ய வேண்டும். கசிவு ஏற்படாத வகையில் பொதியிடல் செய்யப்பட வேண்டும் என்பதுடன், கழிவுகளை கொண்டு செல்லும் போது கசிவு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மருத்துவ கழிவுகளை கொண்டு செல்வதற்கு பொருத்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட வேண்டியதுடன் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் அவற்றை கொண்டு செல்ல வேண்டும். அகற்றும் வழிமுறைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளூர் ஒழுங்குவிதிகளுக்கு இணங்கவும் இருக்க வேண்டும். இந்த வழிமுறைகளில் எரித்தல், நிலநிரப்புகை அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட முறைமைகள் இருக்கலாம். எரியும் போது அதனை அதிக வெப்பநிலை எரியூட்டியில் மேற்கொள்ள வேண்டும். ஆனால் முன்னர் குறிப்பிடப்பட்ட மாத்தறை பொது வைத்தியசாலை மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் முறையான வழிமுறைகளை பின்பற்றாமை பாரதூரமான நிலைமையாகும்.
எனவே, மாத்தறை பொது வைத்தியசாலையானது மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு அனுமதி பெறாத நிறுவனமொன்றுக்கு சட்டவிரோதமான முறையில் மருத்துவக் கழிவுகளை விடுவித்துள்ளமை தெளிவாகிறது. இந்தப் பின்னணியில் பொருத்தமான முறையை பின்பற்றாமல் மருத்துவக் கழிவுகளை அகற்றிய நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட போதும், அரச நிதியைப் பயன்படுத்தி மேற்படி மருத்துவக் கழிவுகளை அகற்ற அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் பொறுப்பதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு வினா எழுப்பும் எங்களின் முயற்சி பயனற்றதாகியது. எனினும், அந்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.










Recent Comments