News

மக்களின் பணத்தை கடுகண்ணாவ நகரசபை எவ்வாறு செலவிடுகிறது?

By In

மகேந்திர ரன்தெனிய

உள்ளுராட்சி தேர்தல் முறை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 158 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 1865-1872 ஆண்டுகளில் இலங்கையின் ஆளுநராகப் பதவி வகித்த சர் ஹெர்குலிஸ் ஆர்.பி.ரொபின்சன் அவர்களின் நிர்வாகத்தின்போது, நிர்வாக வசதி கருதி ​​கொழும்பு மாநகர சபை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1866 ஆம் ஆண்டு கொழும்பு, கண்டி மற்றும் காலி மாநகரசபைகள் உருவாக்கப்பட்டன.

தற்போது நிர்வாக வசதி கருதி 38259 கிராமங்கள், 14013 கிராம உத்தியோக பிரிவுகள் மற்றும் 328 பிரதேச செயலாளர் பிரிவுகள், 25 மாவட்டங்கள் மற்றும் 160 தேர்தல் பிரிவுகள் உள்ளடங்கலாக இந்த எல்லைகளை ஆட்சி செய்வதற்கு 22 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 275 பிரதேச சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் 4486 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டின் பின்னர் தேர்தல் முறைமையில் ஏற்பட்ட திருத்தம் காரணமாக அந்த எண்ணிக்கை இன்று 8356 ஆக அதிகரித்துள்ளது.  

அத்துடன் 2022 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டு ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டதுடன்  2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் அரச செலவைக் குறைக்கும் வகையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆகக் குறைக்க வேண்டும் என அரசு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் தேர்தலுக்காக 1000 மில்லியன் ரூபாவை செலவிடுவது கடினம் என்றும் அரசாங்கம் குறிப்பிடுகின்றது.

ஏற்கனவே 3000 அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அடிப்படை சம்பளம் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இது பொதுப் பணத்தில் எந்தச் சேவையும் பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கான  ஒரு பராமரிப்பு கொடுப்பனவாகவே கருதப்படுகின்றது. 

2018 ஆம் ஆண்டை விட இன்று மக்களின் வாழ்க்கைச் செலவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதுடன், புதிய வரித் திருத்தங்களாலும், வங்கிக் கடன் வட்டி அதிகரிப்பாலும் ஏழைகளின் வருமானம் குறைந்து, செலவும் 100% அதிகரித்துள்ளது. செலவுகளைக் குறைக்க வேண்டுமாயின், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையைக் குறைக்க வேண்டியது அவசியம். ஆனால் அந்தச் செயல்பாடு, உள்ளூராட்சி நிறுவனங்களுடன் தொடர்புடையது அல்ல.

இந்தத் தேர்தலை வேண்டி கூச்சல் இடுவது பொது மக்கள் அல்ல, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும்தான்.  அவர்களின் சிந்தனை கிராமத்தையும் நகரத்தையும் எப்படி அபிவிருத்தி செய்வது என்பது பற்றி அல்ல, மாறாக எதிர்க்கும் அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் விமர்சிப்பதும் மோசடி மற்றும் ஊழல் பற்றிப் பேசுவதும் ஆகும். அரசியல் கட்சிகளின் வாக்குகளை அதிகரித்து தமது பலத்தை வெளிப்படுத்தும் கருவியாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பயன்படுத்தப்படுகின்றதே தவிர, கிராம, நகரங்களின் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான திட்டங்களை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊடகங்கள் தேர்தல் வேட்பாளர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை, மாறாக அரசியல் கட்சித் தலைவர்களின் கதைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றது.  அவர்களின் நோக்கம் கிராமத்தை அபிவிருத்தி செய்வதல்ல, நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஆகும். அரசியலையே தொழிலாகக் கொண்டு கமிஷன், மோசடிகளில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால், நகர சபைகள், பிரதேச சபைகள் மீதான மக்களின் நம்பிக்கையும் குறைவடைந்துள்ளது. 

அரசாங்கம் நீண்டகாலத் திட்டங்கள் ஏதும் மேற்கொள்ளாது உள்நாட்டு, வெளிநாட்டுக் கடனைப் பெற்று அவற்றை முறையாக முதலீடு செய்யாமல் நாட்டைப் பாதாளத்திலிருந்து அதல பாதாளத்திற்கு தள்ளி கடனைச் செலுத்த முடியாத திவாலான அரசாக மாற்றியுள்ளது. 13 ஆவது அரசியலமைப்பின் கீழ் நிறுவப்பட்ட மாகாண சபை இன்று இயங்காவிட்டாலும் அதன் ஊழியர்களின் சம்பளம் இன்னும் மக்கள் மீது சுமத்தப்பட்டு வருகின்றது. இன்று அதே நிலையை அடைந்துள்ள நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளும் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துள்ளன. அரச நிர்வாகத்தின் வசதிக்காக மாவட்ட செயலகம்,  பிரதேச செயலகம் எனப் பாரியளவிலான நிறுவனங்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பின்றி பொதுச் சேவையில் பங்களிக்கின்றன.  யட்டிநுவர பிரதேச செயலகத்தில் மாத்திரம்  கிராம சேவகர் பிரிவிற்கு ஒருவர் என  95 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். 

உதாரணமாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் யட்டிநுவர தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கடுகன்னாவ நகரசபை தொடர்பில் 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட தகவல்களை கவனத்தில்கொள்ளும்போது, கடுகன்னாவ நகரசபை 15 கிராம சேவகர் பிரிவுகளையும்  அதன் மக்கள் தொகை பதினான்காயிரத்து எழுநூற்று பதினேழு ஆகவும் காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொது பெரமுன 08, ஐக்கிய தேசியக் கட்சி 06, மக்கள் விடுதலை முன்னணி 01 என நகர சபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆகவும் காணப்படுகின்றது. 

இங்கு சபை  தலைவரின் மாதச் சம்பளம் 25,000 ரூபாய். பெப்ரவரி மாதம் சபைத் தலைவர் பயன்படுத்திய எரிபொருளின் அளவு 600 லீற்றர். அதற்காக 125,584 ரூபா செலவிடப்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களின் சம்பளத்துக்கான மாதாந்தச் செலவு இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாவாகும். நகர சபை உறுப்பினர்களுக்கான எரிபொருள் மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகளுக்கான வருடாந்த செலவு 171,600 ரூபாவாகும்.

நகர சபையில் மொத்தம் 80 பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு ரூபாய் ஐந்து கோடி  ஒரு லட்சத்து இருபத்தொன்பதாயிரத்து நானூற்று இருபத்தொன்று ஆகும். வருடாந்தம் இருபது இலட்சத்து தொண்ணூற்றெட்டாயிரத்து இருநூற்றி ஐம்பது ரூபாய் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்காகச் செலவிடப்படுகிறது.  

நகர சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 29 ஆகும். பதினொரு புதிய நியமனம் பெற்றவர்களும் இதில் அடங்குவர். தற்போது சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தேவைக்கு அதிகமாக  17 பேர் மிகையாகக் காணப்படுகின்றனர். அதேவேளை, சுகாதாரப் பணியாளர்கள், சுடுகாடு பராமரிப்பாளர், காவலர்கள் என 22 அத்தியாவசியப் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2023ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் எட்டு கோடியே அறுபத்து நான்கு இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து இருநூறு ரூபாவாகும். இதில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட தொகை அறுபத்து மூன்று இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து இருநூற்று எழுபத்து நான்கு ரூபாய் மாத்திரம் ஆகும். ஊழியர் சம்பளத்திற்கான வருடாந்த ஒதுக்கீடு ஐந்து கோடியே ஒரு இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து நானூற்று அறுபத்தொரு ரூபாய் ஆகும். குப்பை சேகரிப்புக்காக மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்து இருநூற்று நான்கு ரூபா செலவழிக்கப்படுவதுடன், குப்பையிலிருந்து வருடாந்தம் எதிர்பார்க்கப்படும் வருமானம் இருபத்தி நான்காயிரம் ரூபாவாகும்.

நகர சபைக்குச் சொந்தமான மொத்த காணிகள் 26 ஆகும். இவற்றில் மூன்று காணிகள் புகையிரத திணைக்களத்திடமிருந்து குத்தகை அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், கையகப்படுத்தப்பட்ட காணிகளின் எண்ணிக்கை 11 ஆகும். நன்கொடை உறுதியின் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்ட காணியின் எண்ணிக்கை 12 ஆகும். இதில் பொது கிணறுகள் மற்றும் இடுகாடுகள் பராமரிக்கப்படுகின்றன. சபைக்கு இரண்டு பொது இடுகாடுகள் மற்றும் ஒரு சுடுகாடு காணப்படுவதுடன் இடுகாடு  இன்னும் உரியமுறையில் கணக்கெடுக்கப்படவில்லை. விறகில் எரியும் தகன மேடையும் சேதமடைந்துள்ளதால், பழுதுபார்ப்பு மற்றும் ஆண்டு செலவுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான மாநகர சபையின் மதிப்பிடப்பட்ட வருமானம் ரூபா எட்டு கோடியே அறுபத்து நான்கு இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து இருநூறு எனக் கணிக்கப்பட்டுள்ளதுடன் 15 உறுப்பினர்கள் மற்றும் 80 பணியாளர்களுக்கு ஐந்து கோடியே அறுபது லட்சத்திற்கும் மேல் செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது. மக்களின் தேவைகளான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்பட்ட தொகை அறுபத்து நான்கு இலட்சத்திற்கும் அதிகமாகும். இந்த நிறுவனங்கள் அபிவிருத்திக்காகச் செலவிடப்படும் பணத்தை விட, நிறுவனங்களின் பராமரிப்பு மற்றும் சம்பளத்துக்கே அதிக பணம் செலவிடப்படுவதாகத் தெரிகிறது. 

மேலும், நகர சபை லயன்ஸ் கழகத்தின் ஊடாகக் கட்டப்பட்ட 8 வீடுகளுக்கு 70 இலட்சம் செலவிடப்பட்டதாகச் சபையின் கணக்குகளில் பதிவு செய்யப்படவில்லை எனவும், மேலும் 858,000 தொகை கடன்கொடுத்தோர் கணக்கில் மேலதிகமாகக் காட்டப்பட்டுள்ளதாகவும், மேலும் குறித்த வருடத்திற்கான நீதிமன்ற அபராதம் மற்றும் முத்திரை செலவுகுறித்த  கணக்கு காட்டப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை…

By In
News

2025 மார்ச் முதல்முழுமையாக அமுலுக்கு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்

ஜனக சுரங்க தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு…

By In
News

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாராளுமன்ற தரவுகள்!

தனுஷ்கசில்வா ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் ஒரு தசாப்தகால வரலாற்றை இலங்கை நாடாளுமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான…

By In
News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *