News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

By In

க.பிரசன்னா

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொண்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும கொடுப்பனவு பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நலன்புரி நன்மைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக போலியான தகவல்களை வழங்கியவர்கள் தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் நியாயமான காரணங்கள் இன்றி அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாத நபர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை வழங்கும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு 10 பேர் கொண்ட குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனைக்கு அமைய மேலதிக செயலாளர் சனலி பியசேனவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டதாக சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் நலன்களை வழங்குவதில் காணப்படும் அசௌகரியங்கள், நியாயமற்ற செயல்முறை மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த குழுவினால், அஸ்வெசும கொடுப்பனவுகள் யாருக்கு கிடைத்துள்ளது, உரிய நபர்களுக்கோ அல்லது குடும்பங்களுக்கோ அந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பிரதேச செயலகங்களிலிருந்து தகவல் பெற்றுக்கொள்ளப்படும்.

நியாயமான காரணங்களின்றி அந்த குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாத நிதி அமைச்சின் தகவல்களின் அடிப்படையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கூறப்பட்ட போதும் இதுவரை உரிய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவோ அல்லது பணத்தை மீள அறவிடவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை நலன்புரி நன்மைகள் சபையின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

அஸ்வெசும முதல்கட்டத்துக்காக விண்ணப்பித்த 3,742,846 விண்ணப்பதாரர்களில் 1,854,678 பயனாளிகள் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கு தெரிவு செய்யப்பட்டனர். அஸ்வெசும முதல்கட்டத்துக்காக விண்ணப்பித்த நபர்களுக்கு மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதனடிப்படையில் கிடைக்கப்பெற்ற 1,017,645 மேன்முறையீடுகள் மற்றும் 161,075 ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் சுமார் 10,630 பேர் அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியற்றவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட பலரும் குறைந்தது மூன்று மாதங்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது. அஸ்வெசும கொடுப்பனவுகளுக்காக 2023 ஆம் ஆண்டு 78 பில்லியன் ரூபாவும் 2024 ஆம் ஆண்டு 183.3 பில்லியன் ரூபாவும் அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அரசாங்கம் அக்கொடுப்பனவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் நலன்புரி நன்மைகள் சபையிடம் இல்லையெனவும் அவற்றை பிரதேச செயலகங்களிடமிருந்து தற்போது திரட்டி வருவதாகவும் தெரிவித்து தகவல் கோரிக்கைக்கு முழுமையான தகவலை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை தவறியுள்ளது.

தமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளாது அவை தொடர்பான தரவுகளை வழங்க முடியாதெனவும் அவ்வாறு போலியான தகவல்களை வழங்கி கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டவர்களிடமிருந்து அவற்றை மீளப்பெறுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அத்தகைய கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கும் அதன் பின்னர் அவை தொடர்பில் விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

நலன்புரி நன்மைகள் சபையின் இவ்வாறான தகவலின் மூலம் போலியான தகவலை வழங்கி அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொண்டவர்கள் மீதும் அவற்றை மீள பெற்றுக்கொள்வதற்கும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. நலன்புரி நன்மைகள் சபையின் இவ்வாறான தாமதத்தினால் தகைமையுடைய பல விண்ணப்பதாரிகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு தகுதிபெறவில்லை. இதன்மூலம் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு முறைமை முறையாக செயற்படுத்தப்படவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

தற்போது அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்காக 465,179 விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதும், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் பயனாளிகளை தெரிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் கணக்கெடுப்பை முன்னெடுக்க முடியாமையால் பயனாளிகள் தெரிவு தொடர்பான உறுதியான தகவலை வழங்க முடியாதெனவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

வறுமையிலுள்ள மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தகுதியான பலரை உள்வாங்கவில்லை என்பது வெளிப்படையானது. தற்போது அவை தொடர்பில் ஆராய்வதற்காக 10 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது. விரைவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In
News

நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்பது எப்போது?

மொஹமட் ஆஷிக் – தேவையில் 30.86 சதவீதம் மட்டுமே உள்ளூர் உற்பத்தி – 43.34 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது -2023 இல் பாலுற்பத்தி96 இலட்சம்லீற்றர் குறைவு ஐக்கிய…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *