கொட்டாஞ்சேனையில் வசிப்பவர்கள், குறிப்பாக பொது போக்குவரத்தை நம்பியிருப்பவர்கள், கொட்டாஞ்சேனை கொமர்ஷல் வங்கியின் முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்தைச் சுற்றி மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டிருப்பார்கள். கடந்த பல ஆண்டுகளில், இந்த பஸ் தரிப்பிடத்தில் ‘102’, ‘112’ மற்றும் ‘168’ பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. தற்போது இவ்விடத்தில் ஒரு கொட்டாஞ்சேனை பஸ் வண்டியை காண்பதே அரிது.
கொட்டாஞ்சேனையிலிருந்து சில முக்கிய இடங்களுக்குச் செல்ல விரும்பும் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய பேருந்துகள் பற்றி அறிய, ஒரு தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு மேல் மாகாண வீதிப்பயணப் போக்குவரத்து அதிகார சபைக்கு அனுப்பப்பட்டது.
தற்போது எத்தனை 102 (மொரட்டுவ முதல் கொட்டாஞ்சேனை) பேருந்துகள், 112 (மஹரகம முதல் கொட்டாஞ்சேனை) பேருந்துகள் மற்றும் 168 (நுகேகொட முதல் கொட்டாஞ்சேனை) பேருந்துகள் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கென ஒதுக்கப்பட்டுள்ளன என தகவல் அறியும் விண்ணப்பம் கேள்வி எழுப்பியது. மேலும், பஸ் புறப்படுவதற்கும் அடுத்த பஸ்ஸின் வருகைக்கும் இடையில் நீண்ட இடைவெளிகளை பலர் அனுபவித்ததாக அறியப்படுவதால், மேல் மாகாண வீதிப்பயணப் போக்குவரத்து அதிகார சபையிடம் இப்பேருந்துகள் ஒவ்வொன்றிற்கும் திட்டமிடப்பட்ட வருகை மற்றும் புறப்படும் நேரங்கள் (காலை முதல் இரவு வரை) குறித்து கேட்கப்பட்டது.
மேல் மாகாண வீதிப்பயணப் போக்குவரத்து அதிகார சபை வழங்கிய தரவுகளின்படி, தற்போது ஒரு 112 பேருந்து மற்றும் ஒரு 168 பேருந்து உள்ளது. 102 பேருந்துகளைப் பொறுத்தவரை, தற்போது ஒன்றேனும் இயக்கப்படவில்லை.
கொட்டாஞ்சேனை பஸ் தரிப்பிடத்திலிருந்து 112 பேருந்து முதலில் காலை 7.45 மணிக்கு புறப்படுகிறது; இதனை அடுத்து மாலை 4.15 மணிக்கு புறப்படுகிறது. மஹரகம பஸ் தரிப்பிடத்திலிருந்து அதன் கடைசி திரும்பு நேரம் (turn time) காலை 9.15 மணி ஆகும்.
கொட்டாஞ்சேனையிலிருந்து 168 பஸ் புறப்படும் நேரம் காலை 7.30 மணி என அறிவிக்கப்பட்டதுடன், நுகேகொட தரிப்பிடத்திலிருந்து அதன் கடைசி திரும்பு நேரம் மாலை 5 மணி ஆகும்.
மேல் மாகாண வீதிப்பயணப் போக்குவரத்து அதிகார சபையிடமிருந்து இந்த தகவல் கோரப்பட்ட காலம் 2019 செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.
Recent Comments