- பதவியில் இருந்த 11 வருடங்களில் 177,180 கி.மீ. தூரம் பயணம்
- தகவல்களை வழங்க 2 வருடங்கள் மற்றும் 3 மாதங்களை வீணாக்கிய விமானப்படை
- இந்த தகவல்களை வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்!
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி
விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான 11 வருட பதவிக்காலத்தில், 95,670 வான் மைல்கள் இலங்கைக்குள் விமானத்தில் பயணித்துள்ளார். அந்த விமான பயணத்தின் தூரம் 177,180.84 கிலோமீற்றர்கள் ஆகும். இது பூமியின் சுற்றளவான 40,075.017 கிலோமீற்றர்களை விட (24,901.461 மைல்கள்), நான்கு மடங்கு அதிகமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது பூமியைச் சுற்றிவர எடுக்கும் தூரத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
இந்த தகவலை கோரி 05.12.2022 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவல் விண்ணப்பத்திற்கு பதிலளிப்பதற்கு, இலங்கை விமானப்படை தலைமையகம் தவறியமை குறித்து தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டது. RTIC/Appeal/398/2023 என்ற இலக்கம் கொண்ட இந்த மேன்முறையீடானது, 2024 ஜனவரி 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் தகவல்களை வழங்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பின்னரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான பதவிக்காலத்தில், விமானப்படையின் விமானங்கள் மூலம் வருடாந்தம் பயணித்த தூரத்தை வழங்கவில்லை. அதனையடுத்து, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு 2025 ஜனவரி 10ஆம் திகதி தகவல் ஆணைக்குழு தீர்மானித்த பின்னர், குறித்த தகவல்களை வழங்குவதற்கு இலங்கை விமானப்படைத் தலைமையகம் நடவடிக்கை எடுத்தது.
குறிப்பாக, 05.12.2022 அன்று இலங்கை விமானப்படைத் தலைமையகத்திடம் இருந்து கோரப்பட்ட தகவல்களில், “2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உள்நாட்டு பயணங்களுக்காக, எத்தனை தடவைகள் ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்கள் வழங்கப்பட்டது?” என்பதாகும். அத்துடன் அந்த காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட விமான பயணங்களின் தூரம் மற்றும் அந்த விமானங்களுக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்றும் கோரப்பட்டது.
தகவல்களை வழங்காமல் இழுத்தடிப்பு
எவ்வாறாயினும், இது தொடர்பில் இலங்கை விமானப்படை தலைமையகம் 06.04.2023 அன்று, உரிய தகவல்களை வழங்குவதற்கு மேலதிகமாக 14 நாட்கள் அவகாசம் தேவை என கடிதம் மூலம் அறிவித்தது. எனினும், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி அதிகபட்சம் 21 வேலை நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய தகவலை வழங்க, விமானப்படைத் தலைமையகம் மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலத்தை எடுத்துக் கொண்டது.
எவ்வாறாயினும், விமானப்படைத் தலைமையகம் சரியான தகவலை வழங்கத் தவறியதால் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் 20.04.2023 அன்று மேன்முறையீடு செய்யப்பட்டது. RTIC/Appeal/398/2023 என்ற இலக்கம் கொண்ட குறித்த மேன்முறையீடு, 2023 ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சம்பந்தப்பட்ட பொது அதிகாரசபை சார்பாக ஆஜராகியிருந்த விமானப்படைத் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், இதற்கு பதிலளிக்க மேலதிக அவகாசம் கோரினர். இதன் பிரகாரம், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவானது, இதற்கு பதில் வழங்க 2 மாத கால அவகாசத்தை வழங்கியது. 2023 ஒக்டோபர் 5 மற்றும் 2023 நவம்பர் 23 ஆகிய இரண்டு திகதிகளில் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னரும், விமானப்படைத் தலைமையகமானது தகவல் வழங்குவதற்கு மேலும் கால அவகாசம் கோரி, தகவலை வழங்கத் தவறியது. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளை கடுமையாக மீறும் செயற்பாடாகும்.
முடியாத கட்டத்தில் நிலைப்பாட்டில் மாற்றம்
இந்நிலையில், இந்த தகவலை வழங்கும் நடவடிக்கை ஏறத்தாழ ஒரு வருடம் கடந்த நிலையில், 23.11.2023 அன்று தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு விமானப்படை தலைமையகம் எழுதிய கடிதத்தில், அரசியலமைப்பின் 30ஆவது பிரிவின்படி ஜனாதிபதி என்பவர் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி என்பதால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5(1)(b)(i) இன் கீழ் இந்த தகவல்களை வழங்க முடியாதென குறிப்பிட்டது. அரச பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு அல்லது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், தொடர்புடைய தகவல்களை வழங்காமல் இருக்கலாம் என்றே சட்டத்தின் குறித்த பிரிவு குறிப்பிடுகின்றது. எனினும், 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விமானப்படை வழங்கிய உள்நாட்டு விமானங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் மற்றும் தூரங்கள் தொடர்பான தகவல்களே கோரப்பட்டன. இத்தகைய தகவல்கள் தேசிய பாதுகாப்புக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக அமைகின்றன என்பதை விமானப்படை தலைமையகத்திற்கு, தகவல் ஆணைக்குழுவின் முன் நிரூபிக்க முடியவில்லை. இலங்கை விமானப்படைத் தலைமையகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி, உரிய தகவல்களை மக்களிடம் இருந்து மறைத்ததை இது தெளிவாகக் காட்டுகின்றது. இந்நிலையில், தகவலை மறுக்கும் பொது அதிகாரசபையின் தீர்மானமானது, அவர்களின் உண்மையான நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானது என்று தகவல் ஆணைக்குழு தீர்மானித்தது.
தகவல்களை வழங்குவதற்கு 2 வருடங்களும் 3 மாதங்களும்!
குடிமகன் ஒருவரின் கோரிக்கைக்கு சுமார் ஒரு வருட காலமாக தகவல் வழங்காமல் இருந்த விமானப்படை தலைமையகம், 04.01.2024 அன்று தகவல் ஆணையம் மீண்டும் இந்த மேன்முறையீட்டுக்கு அழைப்பு விடுத்தபோது, இந்த விடயத்தை பரிசீலிக்க கூடுதல் அவகாசம் கோரியது. எனினும், இந்த தகவல் கோரிக்கைக்கு ஏற்கனவே ஓராண்டுக்கு மேலாக பெறப்பட்டுள்ளதால், கூடுதல் அவகாசம் வழங்குவது தகவல் கோருபவர்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் என தகவல் ஆணைக்குழு தீர்மானித்தது. கோரப்பட்ட தகவல்கள் யாவும், விமானப்படைத் தலைமையகத்திடம் உள்ளது என்பதை, மேன்முறையீட்டு விசாரணையின் போது விமானப்படை தலைமையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜரான அதிகாரி உறுதிப்படுத்தினார். அதன் பிரகாரம், உரிய தகவல்களை சேகரித்து, 2024 மார்ச் 27ஆம் திகதிக்கு முன்னர் தகவல் ஆணைக்குழுவிற்கு பிரதியிட்டு தகவல் கோரிக்கையாளருக்கு அவற்றை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு உத்தரவிட்டது. எனினும், விமானப்படைத் தலைமையகம் அந்த உத்தரவைப் புறக்கணித்த நிலையில், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆராய்ந்து வருவதாக 2025 ஜனவரி 10ஆம் திகதி தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தீர்மானித்தது. அதன் பின்னர், 2025 பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியே தகவல்களை வழங்கியது. அதுவரை இந்த தகவல்களை வழங்குவதற்கு விமானப்படை தலைமையகம் எடுத்துக்கொண்ட காலம், 2 வருடங்கள் மற்றும் 3 மாதங்கள் ஆகும்.
ஊழலை ஊக்குவித்தல்
இந்த நாட்டிலுள்ள பல அரசியல்வாதிகள் பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து, பணத்தை விரயம் செய்ததன் விளைவாக இன்று நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரச தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் செய்யும் செலவுகள் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் திறன், அல்லது தகவல் அறியும் உரிமையின் மூலம் தடையின்றி அணுகக்கூடிய நிலை மக்களுக்கு இருக்க வேண்டும். எவ்வாறாயினும், அரச அதிகாரிகளின் அதிகாரம் அல்லது பல்வேறு சட்ட ஒழுங்குமுறைகள் என்ற போர்வையில் இதுபோன்ற தகவல்களை பொதுமக்களிடம் இருந்து மறைப்பதானது, ஊழலை நேரடியாக ஊக்குவிக்கும் செயலாகும். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெளிப்படைத் தன்மையை வளர்க்க வேண்டும் என்ற பொதுமக்களின் விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அரசாங்கம், இந்த தவறான செயலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Recent Comments