‘சிலி சிலி’ பொலித்தீன் பைகளைப் பயன்படுத்த தடை விதித்து 2017 இல் உண்டாக்கப்பட்ட சட்டம் இலங்கையர்களின் நினைவில் இருக்கும். இப்போது, அந்தச் சட்டம் உண்டாக்கப்பட்டு 2 வருடங்கள் கடந்தும், பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் இன்னும் பயன்பாட்டில் இருப்பதைக் காண ஒருவர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் தெருக்களில் பயணித்தால் போதும். வேறு பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளிலும் தெரு வியாபாரிகளாலும் ஏராளமாக விற்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாடு தொடர்பாக இன்றும் நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் அவை எந்த அளவிற்கு பின்பற்றப்படுகின்றன என்பதைக் கண்டறிய, ஒரு தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு தகவல் பெறப்பட்டது.
பொலித்தீன் தயாரிப்புகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் அனுமதிக்கப்பட்ட தடிமனை (thickness) மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் படி,
செப்டம்பர் 01, 2017 திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு எண் 2034/33 இன் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகள் தடைசெய்தவை:
- உள்நாட்டு பயன்பாட்டிற்காக பொலித்தீன் அல்லது இருபது (20) மைக்ரொன் (micron) அல்லது அதற்குக் குறைவான தடிமன் கொண்ட எந்தவொரு பொலித்தீன் தயாரிப்பையும் உற்பத்தி செய்தல்; அல்லது
- நாட்டிற்குள் இருபது (20) மைக்ரொன் அல்லது அதற்குக் குறைவான தடிமன் கொண்ட எந்தவொரு பொலித்தீன் அல்லது பொலித்தீன் தயாரிப்பையும் விற்பனை செய்ய, விற்பனை சலுகை வழங்க, இலவசமாக வழங்குவதற்கான சலுகை வழங்க, கண்காட்சிக்கு பயன்படுத்தல்:
(iii) பொலித்தீன் அல்லது இருபது (20) மைக்ரொன் அல்லது அதற்குக் குறைவான தடிமன் கொண்ட எந்தவொரு பொலித்தீன் உற்பத்தியும் அட்டவணை வர்த்தமானியில் (schedule gazette) குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக அதிகாரசபையினால் முன் எழுதப்பட்ட ஒப்புதலுடன் (prior written approval) பயன்படுத்த அனுமதிக்கப்படலாம்.
பொலித்தீன் பைகளின் அடர்த்தியும் சட்டத்தினால் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது,
2017.09 / 01 திகதியிட்ட வர்த்தமானி எண் 2034/35, அதிக அடர்த்தி கொண்ட பொலித்தீன் (மளிகைப் பை) எந்தப் பையும் தயாரிப்பதைத் தடைசெய்ய உத்தரவு.
மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால் திடீர் விஐய (Raid) திட்டங்கள் மூலம் இந்தச் சட்டங்கள் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இத்திட்டங்கள் விதிமுறைகளுக்கு இணக்கம் உண்டென்பதை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டவை. இச்சட்டங்களை மீறுபவர்கள் மீது தேசிய சுற்றாடல் சட்டத்தின் (NEA) விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகார சபை கூறுகிறது.
ஷாப்பிங் பைகள் தவிர, பிற பிளாஸ்டிக் பொருட்களைக் குறித்தும் சட்டங்கள் உள்ளன. அவையாவன:
2017.09.01 திகதியிட்ட வர்த்தமானி எண் 2034/34, பொலித்தீனை மூலப்பொருளாக கொண்ட உணவை சுற்றிக்கட்ட பயன்படுத்தப்படும் தாள் (Lunch Sheet) தயாரிப்பதை தடைசெய்ய உத்தரவு.
வர்த்தமானி எண் 2034/38 விரிவாக்கப்பட்ட (expanded) பொலிஸ்டைரீனில் (Polystyrene) இருந்து உணவுக் கொள்கலன்கள், உணவு உண்ணும் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் தயாரிப்பதைத் தடை செய்ய உத்தரவு.
இதுவரை, சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் பதில் குறிப்பிடத்தக்க வகையில் எதிர்மறையானது. இருப்பினும் இம்முயற்சிகளைப் பாராட்டியவர்களும் உள்ளனர். சிலி சிலி பை (sili sili bag) இன்றி கடையில் பொருட்கள் வாங்குதல் இலகுவாக இல்லாமல் இருக்கும் என பலர் அஞ்சினர். குறிப்பாக அவை மக்களுக்கு ஏதேனும் சிரமத்தை ஏற்படுத்தினால், இதுபோன்ற சட்டங்களை மக்கள் அடிக்கடி புறக்கணிப்பதும் உண்டு.
எவ்வாறாயினும், சுற்றுச்சூழல் மற்றும் பிளாஸ்டிக் மாசு என்பன அவசரநிலை கொண்ட மற்றும் அதிக அக்கறை வேண்டிய தலைப்புகளாகவே இருக்கின்றன. அரசாங்கங்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் பிற வல்லுநர்களின் தரப்பிலிருந்து முறையே, உறுதியாக செயல்படுத்தப்பட்ட சட்டங்கள், கல்வி மற்றும் திருப்திகரமான மாற்று தயாரிப்புகள் (substitute products), பொருள்வகை (material) மற்றும் தீர்வுகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை தேவைப்படுகின்றன என்பது தெளிவாகிறது. வணிக நிறுவனங்களின் தரப்பிலிருந்து, சூழல் மீது அதிக சுமையை ஏற்றாத தயாரிப்புகளின் உற்பத்தி, நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட வேண்டும்.
இறுதியாக, பொது மக்கள் கல்வி, விழிப்புணர்வு மற்றும் இயலுமான சந்தர்ப்பங்களில் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யும் அளவிற்கு அக்கறை முதலியவற்றை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
(*மேற்கண்ட சட்டங்கள் மற்றும் மேலும் தொடர்புடைய தகவல்களை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.cea.lk இல் காணலாம்.)
Recent Comments