சாமர சம்பத்
“பாடசாலையொன்று திறக்கப்பட்டால் சிறைச்சாலை ஒன்று மூடப்படும்” என்பது பிரான்ஸ் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான விக்டர் ஹியுகோவின் பிரபலமான கூற்றாகும். இந்தக் கூற்று உணர்த்துவது ஒரு நாட்டிற்கு பாடசாலைக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையே. கல்வியை உலகளாவிய மனித உரிமையாக உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதுடன் 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பிள்ளைக்கும் அந்த உரிமை காணப்படுகின்றது. பிள்ளைகளின் பள்ளிக் கல்வியை உறுதி செய்வதற்காகப் பல்வேறு கல்விச் சீர்திருத்தங்கள் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்டாலும்> நாட்டின் உண்மை நிலை அதற்கு மாறாக இருப்பதாகவே தெரிகிறது. இலங்கையில் பாடசாலை முறையை மேலும் வலுப்படுத்துவதற்கு மாறாகப் பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
மூடப்படும் பாடசாலைகள்
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் பெறப்பட்ட தகவல்களின்படி> 2015 ஆம் ஆண்டு முதல் 2022 வரை இலங்கையில் கிட்டத்தட்ட 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அதன்படி 2015 முதல் 2018 வரை 114 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன்> 2018-2019 காலப் பகுதியில் 09 பாடசாலைகளும் 2019-2020 காலப் பகுதியில் 15 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும்> 2020-2021 காலப்பகுதியில் 08 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பாடசாலைகள் மூடப்படுவதற்கான காரணங்கள்
போதியளவு மாணவர்கள் இல்லாத காரணத்தினாலேயே பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மூடப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மிகவும் தொலைதூர கிராமங்களைப் போலவே> பெரும்பாலான தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களிலும் சரியான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இப் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சிறிது காலத்தில் வேகமாகக் குறைவடைந்து வருகின்றன.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டு பள்ளிகளை நடத்துவது செலவு மிகுந்த விடயமாகும். எனவே அந்த நிலைகுறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக> ஒரு பாடசாலையில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால்> சட்டத்தை மீறாத வகையில்> இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு பாடசாலையில் மாணவர்களை இணைக்கமுடியுமாக இருந்தால் மட்டுமே பள்ளியை மூட முடியும்.
மேலும்> ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் கொவிட் தொற்றுநோயின் தாக்கம் காரணமாகப் பாடசாலைகளை உரிய முறையில் நடாத்துவதில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன் சில பாடசாலைகள் இந்தக் காரணங்களால் மூடப்பட்டும் உள்ளன.
மேல் மாகாணத்தின் நிலைமை
நாட்டிலேயே மிகவும் அபிவிருத்தியடைந்த மாகாணமாகக் கருதப்படும் மேல்மாகாணத்தில்> பாடசாலைகள் மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளமை நம்பமுடியாத விடயமாக இருந்தபோதிலும் அதுவே உண்மை நிலையாகும். அவற்றில் 100க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட 10 பாடசாலைகள் கொழும்பு பிராந்தியத்தில் காணப்படுகின்றன. மேல் மாகாணத்தைப் பொறுத்தமட்டில் 100க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட 208 பாடசாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை (100 பாடசாலைகள்) களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 51 பாடசாலைகளும் கம்பஹா மாவட்டத்தில் 57 பாடசாலைகளும் இவற்றில் உள்ளடங்குகின்றன. இவற்றிலும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதுடன்> பாடசாலைகளை நடத்துவதற்கான வளங்களும் குறைந்த அளவில் காணப்படுகின்றன. முறையான வழிமுறைகளைப் பின்பற்றினால் இன்றும் இப் பாடசாலைகளை வெற்றிகரமாக நடத்தும் திறன் அரசுக்கு காணப்படுகின்றது.
கல்விகற்க பாடசாலைகள் இல்லாத பிள்ளைகள்
மேலும்> பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை முழுமையடைவதால் பாடசாலைகளில் அனுமதி கிடைக்காத பிள்ளைகளும் ஏராளம் உள்ளனர். அரசுப் பள்ளிகளைத் தேடி மனச் சோர்வடைந்ததன் பின்னர்> சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கட்டாயம் கல்வி வழங்க வேண்டும் என்ற காரணத்தால்> தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எவ்வாறாயினும்> மேல் மாகாணத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலும்> அந்த மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்பட்டால்> பிள்ளைகளின் பாடசாலைப் பிரச்சினைக்கு முறையான நிரந்தரத் தீர்வைக் காண்பது கடினமாக இருக்காது.
கல்வி சம்பந்தமாகச் சில நம்பிக்கையூட்டும் முடிவுகளை அரசு எடுத்துள்ளதுடன்> அவை பாராட்டப்பட வேண்டியவை. அதேபோல> நாடு தழுவிய அளவில் பாடசாலைக்கல்வி முறையை செயற்திறனாகச் செயல்படுத்துவதற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இலங்கையில் உள்ள மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 10>146 ஆக காணப்படும் அதேவேளை தற்போது 4>048>937 மாணவர்கள் இப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர். பிரிவென் பள்ளிகள்> தனியார் பள்ளிகள் மற்றும் சர்வதேச பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைச் சேர்க்கும்போது> இந்தத் தொகை இன்னும் பன்மடங்காகும். இது இப்படியிருக்க> இன்னும் பல பிள்ளைகள் பாடசாலை வசதி இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். மேலும்> சிலர் பாடசாலை செல்ல வசதிகள் இல்லாத காரணத்தால் திணறி வருகின்றனர். நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இலவசக் கல்வியை வலுப்படுத்தினால் அனைத்து பிள்ளைகளின் கல்வி உரிமையும் உறுதி செய்யப்படும்.
Recent Comments