இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த 52 வழக்குகள் ‘திரும்பப் பெறப்பட்டன’!
-ஜனக போகும்புர
ஒரு நாடு நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு, ஊழல் மற்றும் மோசடி உள்ளிட்ட அனைத்து வகையான தவறான செயற்பாடுகளிலிருந்து விடுபட்ட ஓர் ஆட்சி முறையை நிறுவுவது மிகவும் அவசியம் ஆகும்.
கடந்த தசாப்தத்தில், உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊழல் இல்லாத நாடுகளின் குறிகாட்டிகளின்படி இலங்கையின் செயல்திறன் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், நாட்டில் தற்போதுள்ள சட்டங்களில் தெளிவு இல்லாததும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களும் ஆகும்.
1994 ஆம் ஆண்டில் அரசியலமைப்பிற்கான 17 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் அல்லது ஊழல்பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இச்சட்டமானது இலஞ்சம் அல்லது ஊழல்பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான நிரந்தர ஆணைக்குழுவினை தாபித்ததுடன், இலஞ்ச சட்டம் மற்றும் 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தும் சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு வழக்கிடுதல் நடவடிக்கையினை மேற்கொள்கின்றது. இன்று இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான சட்டரீதியான நிலையான சுயாதீன அமைப்பாக விளங்குகின்றது. இது 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பது தொடர்பாகப் புகார்களைப் பெறுதல், விசாரித்தல், கைது செய்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல், அத்துடன் சட்டவிரோத சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பாக முறையீடுகளைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பணிகளை இந்த ஆணைக்குழு தன்னகத்தே கொண்டுள்ளது.
அதன்படி, 2022, 2023 மற்றும் 2024 நவம்பர் மாத இறுதிக்குள் இலஞ்சம் அல்லது ஊழல்பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்த தரவு கீழே காட்டப்பட்டுள்ளது.
ஆண்டு | இலஞ்சம் | ஊழல் | சட்டவிரோத வருவாய்/சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான முறையீடுகள் | மொத்தம் |
2021 | 60 | 02 | 00 | 62 |
2022 | 62 | 26 | 01 | 89 |
2023 | 55 | 03 | 02 | 60 |
2024 | 49 | 08 | 01 | 58 |
ஐக்கிய நாடுகள் சபை ஊழல் எதிர்ப்பு சாசனம் ஊடாக டிசம்பர் 9 ஆம் திகதியை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், அந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை திரும்ப வாபஸ் பெற்றுக்கொள்வதற்கான காரணங்கள் குறித்து பொதுமக்களை அறிவூட்ட வேண்டும் என குறிப்பிட்டார். அதன்படி, இந்த விடயங்கள் குறித்த உண்மையை வெளிக்கொணரத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவிடம் தகவல் பெற்றுக்கொள்ளப்பட்டது. அந்த தகவல்களின் படி இலஞ்சம் அல்லது ஊழல் சட்டத்தைப் பின்பற்றாதமை, போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியமை, வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பது மற்றும் உறுதியாக வழக்கு தாக்கல் செய்யாமை உள்ளிட்ட பல காரணிகளால் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கு இலக்கம் 01/2011 இன் தீர்ப்பின்படி சில வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு | திரும்பப் பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை | மீண்டும் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்ட எண்ணிக்கை |
2022 | 49 | 13 |
2023 | 02 | 00 |
2024 | 01 | 01 |
எனவே, ஜனாதிபதி கூறியது போல், இந்த வழக்குகளை வாபஸ் பெறுவது/திரும்ப பெறுவது தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவே மிகவும் வெளிப்படையான முறையில் பொதுமக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். மேலும் இது தொடர்பில் பொது மக்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கேள்விகளை எழுப்புவதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெறலாம். இதன் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து இலஞ்சம் ஊழலுக்கு எதிராக தீவிரமாக செயற்பட முடியும். ஏனெனில் இலங்கை ‘க்ளீன்’ ஆக இருக்க வேண்டுமென்றால், அது இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற, வெளிப்படை தன்மை கொண்ட நிதி மேலாண்மை விழுமியத்துடன் கூடிய சிறந்ததொரு நாடாகச் செயற்பட வேண்டியுள்ளது.
Recent Comments