மொஹமட் ஆஷிக்
– தேவையில் 30.86 சதவீதம் மட்டுமே உள்ளூர் உற்பத்தி
– 43.34 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது
-2023 இல் பாலுற்பத்தி96 இலட்சம்லீற்றர் குறைவு
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு மற்றும் விவசாயத் திட்டத்தின் தகவல்களின் பிரகாரம், உலகளவில் 150 மில்லியன் (15 கோடி) குடும்பங்கள் திரவ பால் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டுள்ளன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில், திரவ பால் உற்பத்தியானது பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களால் கையாளப்படுகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் உலகளாவிய திரவ பால் உற்பத்தி 77 சதவீதம் உயர்ந்துள்ளது. 1992 இல் 524 மில்லியன் டொன்களாக இருந்த பாலுற்பத்தி, 2022 இல் 930 மில்லியன் டொன்களாக அதிகரித்துள்ளதாகவும் இந்த அமைப்பு குறிப்பிடுகிறது.
உலகளாவிய பால் சந்தையை மையமாகக் கொண்டு, சர்வதேச நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டில் உலக பால் சந்தை சுமார் 893 பில்லியன் டொலர்களாக இருந்ததாகவும், அது 2028ஆம் ஆண்டில் 1243 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
சர்வதேச தரவுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் திரவ பால் உற்பத்தியின் நிலைவரம் யாது? சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட பால் பற்றாக்குறையைப் புரிந்துகொள்வதற்கு, 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், 2023 இல் இலங்கைக்கு 1200 மில்லியன் லீற்றர் (120 கோடி லீற்றர்) பால் தேவைப்பட்டுள்ளது. எனினும், 370.32 மில்லியன் லீற்றர்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது தேவைப்பட்ட மொத்த பால் அளவில் 30.86 சதவீதமாகும். அந்தத் தகவலின்படி, 2023ஆம் ஆண்டு இலங்கைக்குத் தேவையான 43.34 வீதம் அதாவது 520.08 மில்லியன் லீற்றர் பால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட திரவப் பாலின் மொத்த அளவு 380,002,467 லீற்றர்கள் (சுமார் 380 மில்லியன்) ஆகும். 2023 இல், மொத்த உற்பத்தி 370,323,992 லீற்றர்களாகும் (சுமார் 370 மில்லியன்). 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் திரவ பால் உற்பத்தி 9,678,475 லீற்றர் குறைந்துள்ளதாக தரவு கூறுகிறது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் (கால்நடை திட்டமிடல் மற்றும் பொருளாதாரம்) பணிப்பாளரான வைத்தியர் கே.எம்.எச்.ஜி சரத் பிரியந்த வழங்கிய தகவல்களின் பிரகாரம், 2023இல் இலங்கையில் மாவட்ட மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பாலின் அளவு பின்வருமாறு:
மாவட்டம்/ மாகாணம் | உற்பத்தி(லீற்றர்) |
கொழும்பு | 6,325,833 |
கம்பஹா | 17,106,742 |
களுத்துறை | 10,891,098 |
மேல் மாகாணம் | 34,323,673 |
கண்டி | 10,638,940 |
மாத்தளை | 10,571,598 |
நுவரெலியா | 53,828,234 |
மத்திய மாகாணம் | 75,039,067 |
காலி | 8,424,978 |
மாத்தறை | 5,031,282 |
ஹம்பாந்தோட்டை | 15,190,860 |
தென் மாகாணம் | 28,647,120 |
யாழ்ப்பாணம் | 17,044,922 |
கிளிநொச்சி | 5,852,921 |
மன்னார் | 1,974,909 |
வவுனியா | 13,321,132 |
முல்லைத்தீவு | 6,927,892 |
வட மாகாணம் | 45,121,776 |
மட்டக்களப்பு | 5,176,627 |
திருகோணமலை | 9,027,214 |
அம்பாறை | 12,862,342 |
கிழக்கு மாகாணம் | 27,062,183 |
குருநாகல் | 43,565,746 |
புத்தளம் | 13,518,207 |
வடமேல் மாகாணம் | 57,083,953 |
அனுராதபுரம் | 51,128,081 |
பொலன்னறுவை | 14,365,485 |
வடமத்திய மாகாணம் | 65,493,566 |
பதுளை | 19,605,339 |
மொனறாகலை | 11,699,543 |
ஊவா மாகாணம் | 31,304,882 |
இரத்தினபுரி | 37,71,625 |
கேகாலை | 2,476,037 |
சப்ரகமுவ மாகாணம் | 6,247,662 |
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில், மத்திய மாகாணம் 75,039,967 லீற்றர் அளவான திரவப் பாலை உற்பத்தி செய்தது. வடமத்திய மாகாணம் 65,493,566 லீற்றர்களுடன் பால் உற்பத்தியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. வடமேல் மாகாணம் 57,083,953 லீற்றர் திரவப் பாலை உற்பத்தி செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
2023ஆம் ஆண்டில், இலங்கை மொத்தமாக 370,323,882 லீற்றர் (சுமார் 370 மில்லியன்) திரவப் பாலை உற்பத்தி செய்தது, இது நாட்டின் மொத்த உள்நாட்டுத் தேவையில் 30.86 சதவீதத்தைப் பூர்த்தி செய்தது. வழங்கப்பட்ட தகவல்களின்படி, 2023ஆம் ஆண்டில் கூடுதலாக 43.34 சதவீத திரவப் பால் இறக்குமதி செய்யப்பட்டது.
2022ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் பால் உற்பத்தி குறைந்துள்ளது. இருப்பினும், மாகாண வாரியாக ஆய்வு செய்யும் போது, மூன்று மாகாணங்களில் மட்டுமே உற்பத்தி குறைந்துள்ளது. இந்தத் தரவுகளின் பகுப்பாய்வு ஆறு மாகாணங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
மாகாண வாரியாக திரவப் பால் உற்பத்தி (லீற்றர்) 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில்
மாகாணம் | 2022 | 2023 | வித்தியாசம் |
மேல் | 33,911,855 | 34,323,673 | +789,182 |
மத்திய | 79,897,828 | 75,039,067 | -4,858,761 |
தென் | 33,725,570 | 28,647,120 | -5,078,450 |
வடக்கு | 44,075,136 | 45,121,776 | +1,046,640 |
கிழக்கு | 30,148,947 | 27,062,183 | -3,086,764 |
வடமேற்கு | 57,025,578 | 57,083,953 | +58,375 |
வடமத்திய | 61,845,346 | 65,493,566 | +3,648,220 |
ஊவா | 33,156,405 | 31,304,882 | +1,851,523 |
சப்ரகமுவ | 6,215,802 | 6,247,662 | +31,860 |
மொத்தம் | 380,002,467 | 370,323,992 | -9,678,575 |
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்களின்படி, 2022ஆம் ஆண்டு நாட்டில் 782,470 கறவை பசுக்களும் 224,312 எருமை பால்மாடுகளும் இருந்துள்ளன. 2023 தரவுகளின்படி 758,971 பசுக்களும் 213,832 எருமைப் பால்மாடுகளும் இருந்துள்ளன. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் 23,499 கறவைப் பசுக்களும் 10,480 எருமை பால்மாடுகளும் குறைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் பால் உற்பத்தி குறைவதற்கு கறவை மாடுகள் இல்லாததே முக்கிய காரணம் என்று கருதலாம்.
இந்தத் தரவுகளின்படி, உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்ய திரவ பால் பொருட்களுக்கு இன்னும் குறிப்பிடத்தக்க இடங்கள் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், திரவப் பால் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும், இது கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் பலப்படுத்தும்.
Recent Comments