- 20 அலுவலர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது
- எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
- 13 மாவட்டங்களில் 04 மாவட்டங்கள் மட்டுமே தகவல்களை வழங்கியுள்ளன
- தேர்தல் ஆணைக்குழு தகவல் கொடுப்பதை தவிர்க்கின்றது
ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி
இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரசாங்க அலுவலர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. பக்கச்சார்பற்ற தன்மை இந்த மக்கள் அனைவருக்கும் இன்றியமையாத விடயமாகும். எவ்வாறாயினும், தேர்தல் காலங்களில் சில அரசாங்க அலுவலர்கள் தேர்தல் சட்டங்களை மீறி, தமது பதவிக்கு பொருந்தாத அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அந்த அலுவலர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் தேர்தல் செயற்பாட்டில் நம்பிக்கை இழக்கின்றனர்.
தேர்தல் சட்டங்களின் வகிபங்கு
இலங்கையில் தேர்தல் சட்டங்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான களத்தை உறுதிப்படுத்தவும், வாக்காளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், தேர்தல் செயன்முறையைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழு இயற்றியுள்ள ஒழுங்குவிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான நிர்வாக நடத்தை கோவைகளின்படி, அரசு அலுவலர்கள் அரச வளங்கள், பதவி நிலைகள், அதிகாரம் ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்தி பக்கச்சார்பான செயல்களில் ஈடுபடுவதற்கு இடமில்லை.
தகவல் அறியும் உரிமையின் கீழ் சில மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆக்கம், கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது (2024) பல விதிமுறைகளும் ஒழுங்கு விதிகளும் இருக்கும் போது, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரத்தையும், சமூக தளங்களையும் சமூக ஊடகங்களையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்திய அரசாங்க அலுவலர்கள் தொடர்பில் வெளிப்படுத்துகிறது.
தகவலை வழங்க தயக்கம்
கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது தேர்தல் சட்டங்களை மதிக்காமல் அரசாங்க அலுவலர்கள் செயற்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்பான தகவல்களை 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்குமாறு தெரிவு செய்யப்பட்ட பதின்மூன்று மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் இதுவரை ஆறு மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மட்டுமே அந்தச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளின்படி தகவல்களை வழங்கியுள்ளன. அவை அம்பாந்தோட்டை, அனுராதபுரம், அம்பாறை, மாத்தறை, திருகோணமலை, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்ட அலுவலகங்களாகும். இந்த முறையீடுகள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து எதுவித பதிலும் வராததால், தகவல் சட்டத்தில் உள்ள விதிமுறைகளின்படி தகவல் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது. மற்றைய மாவட்ட அலுவலகங்கள் தகவல் தராமல் காலம் தாழ்த்துவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்களாக தேர்தல் சட்டங்களையும், அவர்கள் செல்லும் இடங்களுக்கு சட்டக் கட்டுப்பாடுகளையும் மீறி செயற்படும் அரச அதிகாரிகள் குறித்த தகவல்களை வழங்க ஏன் தேர்தல்கள் ஆணைக்குழுவும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் தாமதிக்கின்றன அல்லது தவிர்க்கின்றன என்பது ஒரு பிரச்சினையாகும்.
இருபது குற்றவாளிகள்
எவ்வாறாயினும், மேற்குறிப்பிட்ட ஆறு தேர்தல் அலுவலகங்கள் வழங்கிய தகவல்களின்படி, அனுராதபுரம், மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கம் தமது பதவி நிலைக்கு பொருத்தமற்ற அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டதாக எதுவிதமான அறிக்கையும் இல்லை. அம்பாந்தோட்டை, திருகோணமலை, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 50 இற்கும் மேற்பட்ட அரச அலுவலர்கள் தமது பதவி நிலைக்கு பொருத்தமற்ற பல்வேறு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல் அறியும் உரிமையின் கீழ் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பெறப்பட்ட தகவல்களின் மூலமாக, தேர்தல் முறைப்பாட்டு தீர்வு நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் நடாத்திய விசாரணையின்படி குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 20 அலுவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை ஆய்வு செய்யும் போது, அவ்வாறு தெரிவிக்கப்பட்ட அரச அலுவலர்களில் பெரும்பாலானவர்கள் பாடசாலை அதிபர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதின்மூன்று பாடசாலை அதிபர்கள் உள்ளனர். அதில் ஒன்பது பாடசாலை அதிபர்களும் இரண்டு பிரதி அதிபர்களும் அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இரண்டு அதிபர்கள் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறும் அரச அதிகாரிகள் – 2024
மேலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை மற்றும் தங்காலை வைத்தியசாலையைச் சேர்ந்த இரண்டு வைத்தியர்கள், கொன்சல் ஜெனரல் மற்றும் திருகோணமலை மாவட்ட இலங்கை மத்திய போக்குவரத்து சபையின் தலைவர், கொழும்பு மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் உள்ளடங்குவர். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் விசாரணைகளை மேற்கொண்டதுடன், தேர்தல் சட்டங்களை மீறியமையையும் தமது பதவிகளுக்கு பொருத்தமற்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமையையும் கண்டறிந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் பணிகளுக்காக கடமையாற்றிய அலுவலர்களில் ஐந்து அதிபர்களை தேர்தல் கடமைகளில் இருந்து நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவலின் மூலமாக தெரியவந்துள்ளது.
தகுதியான தண்டனை
பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், Transparency International – இலங்கை மற்றும் ஏனைய தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களினால் அரசியல் விவகாரங்களில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் ஆதாரங்களையும் கையளித்துள்ளனர். தேர்தல் ஆணைக்குழு மற்றும் தொடர்புடைய மாவட்டங்களில் உள்ள தேர்தல் முறைப்பாட்டு தீர்வு நிலையங்கள் விசாரணை நடாத்தி, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளன.
07.12.2017 ஆம் திகதி 32/2017 ம் இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் அரச ஊழியர்கள் பதவிநிலை அலுவலர்கள் மற்றும் பதவிநிலை அல்லாத அலுவலர்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் சிரேஷ்ட நிலை மற்றும் மூன்றாம் நிலை அரச அலுவலர்கள் யார் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வைத்தியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் பதவிநிலை அலுவலர்கள் பிரிவில் உள்ளனர். மேலும் நிறுவன கோவையில் XXXII அத்தியாயம் ஒன்றில் அரசியல் உரிமைகளை அனுபவிக்கத் தகுதியற்ற ஒரு அலுவலருக்கான விடயங்களைத் தடைசெய்துள்ளது. அதன் 1.2 இன் பிரகாரம், தேர்தலின் போது அந்த அலுவலர்கள் வாக்களிப்பதைத் தவிர வேறு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்பதுடன், அப்படி ஈடுபட்டால் அதற்கு தண்டனையாக சேவையில் இருந்து நீக்கப்படுவதற்கு உட்பட்ட குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், நிறுவனக் கோவை XXXII அத்தியாயம் 1:2:2 இன் பிரகாரம், தேர்தலின் போது ஒரு வேட்பாளருக்கு எந்த வகையிலும் உதவுவது மேற்கூறிய தண்டனைக்கு உரியதாகும். மேலும், தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட 26.07.2024 ஆம் திகதிய 2394/56 இன் அதிவிசேட வர்த்தமானி, அரசியல் உரிமைகள் ஒரு பதவிநிலை அலுவலருக்கு இல்லை என்பதைக் குறிக்கிறது.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட 26.07.2024 ஆம் திகதி விசேட வர்த்தமானி இல.2394/56 மற்றும் சுற்றறிக்கை EC/EDR/PRE/2024/6-04 B மற்றும் 26.07.2024 ஆம் திகதிய 5ம் இலக்க சுற்றறிக்கையின் பிரிவு 08(II) அரசியல் உரிமைகள் பெறாத அரச அலுவலர் ஒருவர் அரசியல் கட்சிகளுடன் அல்லது சுயேச்சைக் குழுக்களுடன் பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது அவர்களை ஊக்குவிப்பது குற்றமாகும் என குறிப்பிடுகிறது.
முறையற்ற பாதுகாப்பு கிடைத்ததா?
மேற்படி அரச உத்தியோகத்தர்களில் இரு பாடசாலை அதிபர்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகளின் தலைவர் ஆகியோர் அன்றைய ஜனாதிபதியான சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்தனர். இதேவேளை, அதிபர் ஒருவர் ஜன அரகல இயக்கத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களை தவிர, ஒன்பது பாடசாலை அதிபர்கள், இரண்டு பிரதி அதிபர்கள், வைத்தியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உட்பட பதினைந்து அலுவலர்கள், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு ஆதரவளித்தனர்.
இவ்வாறானதொரு அரசியல் பின்னணியில் சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்கு தகவல் அறியும் உரிமையின் கீழ் உரிய அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. உரிய தகவல்கள் வழங்கப்படாததால், நியமன அதிகாரியிடம் முறையீடு செய்யப்பட்டும், தொடர்புடைய அரச நிறுவனங்கள் இன்று வரை தகவல் வழங்கவில்லை. இரண்டு அரச நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட செயலர்களையோ அல்லது பொறுப்பான அலுவலரையோ தொடர்பு கொள்ள பல நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் இந்த அரசாங்க அலுவலர்கள் பொதுமக்களுக்கான தமது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் தட்டிக்கழித்து மக்கள் தகவல்களைப் பெறுவதற்கான உரிமையைத் தடுக்கின்றனர் என்பது தெளிவாகிறது.
பல மூலங்களிலிருந்து எமக்குக் கிடைத்த விசேட இரகசியத் தகவல்களின்படி, அரசாங்கத்துடன் தொடர்புடைய அரச அலுவலரை பாதுகாக்கும் நோக்கில் அவர்களது தொழிற்சங்கங்களும் மாவட்ட அமைப்பாளர்களும் செயற்பட்டு வருகின்றன. தேர்தல் கடமைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அதிபர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வினவியபோது எந்தவொரு பொறுப்பான அலுவலரும் பதிலளிக்க முன்வரவில்லை.
தேர்தல் பிரசாரத்தின் போதும், எதிர்க்கட்சியில் இருந்த போதும் சட்டங்கள் சமமாக அமுல்படுத்தப்படும் என்ற கோஷத்தை அரசாங்கம் முன்வைத்தது. அந்த முழக்கத்தின் மீது குடிமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த பின்னணியில், தேர்தல் சட்டத்தை மீறிய, தமக்கு விசுவாசமான அரச அலுவலர்களை பாதுகாக்க எந்த தரப்பினரும் முனைந்தால், அது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய தூய்மைக்கான வாக்குறுதிக்கு களங்கம் விளைவிக்கும்.
Recent Comments