கொழும்பு மாநகரத்தில் குப்பைகள் சரியான நேரத்தில் அகற்றப்படுவதில்லை என்ற முறைப்பாடுகள் அண்மைக்காலங்களில் பொதுமக்களால் முன்வைக்கப்படுவதொன்று. ஓரிரு வருடங்களிற்கு முன்பு கொழும்பில் குப்பைகள் அகற்றப்படாமல் பல இடங்களில் மலை போல் தேங்கிக் கிடந்தன. இதனால் வீதிகளில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தன. மக்கள் இதனால் பெரும் அசௌகரியங்களிற்கு ஆளாகினர். இதற்கு சேகரித்த குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடம் இல்லை என்று குறிப்பிடப்பட்டது. பின்னர் கொட்டுவதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டு குப்பைகள் அங்கே கொட்டப்பட்டன.
தெமட்டகொட பகுதியில் நடுத்தர மக்களிற்கு “மிஹிந்துசெந்புர” தொடர்மாடி அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதனால் பல மக்களும் நன்மையடைந்தனர். 2020 ஜுன் காலப்பகுதியில் தமது பகுதியில் மாநகர சபையினரால் குப்பைகள் அகற்றப்படவில்லை என்று மக்கள் ஊடகவியலாளர்களிற்கு பயிற்சியினை வழங்கும் நிறுவனமொன்றின் கள ஆய்வின் போது தெரிவித்திருந்தனர். தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும் குழந்தைப் பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் இதனால் அச்ச உணர்வுடனே இருப்பதாகவும் கவலை தெரிவித்திருந்தனர்.
இக் குப்பை அகற்றப்பட்டதா என்பதனை அறிவதற்காக 12, நவம்பர் 2020 அளவில் கொழும்பு மாநகர சபை திடக்கழிவு மேலாண்மை பிரிவிற்கு தகவலறியும் விண்ணப்பமொன்று தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் குப்பை அகற்றப்படாவிடின் யாரிற்கு முறைப்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த விண்ணப்பத்தில் வினவப்பட்டிருந்தது.
இவ் விண்ணப்பத்திற்கு பதிலளித்த கொழும்பு மாநகர சபையின் திடக்கழிவு மேலாண்மை பிரிவின் பொறியியல் பணிப்பாளர் இக் குப்பை அகற்றப்பட்டுள்ளதாக அவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் குப்பை அகற்றப்படாமை தொடர்பில் முறைப்பாடுகளை “மிஹிந்துசெந்புர” தொடர்மாடி மக்கள் மாவட்ட இலக்கம் 03, திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவினை சேர்ந்த மாவட்ட பொறியிலாளர் திரு. எரந்த விக்ரமராச்சி இனை 0112-674349 அல்லது 0773-465468 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் உக்கலடையும் கழிவுகள் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிலும், மீள் சுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் திங்கட்கிழமைகளிலும், மீள் சுழற்சி செய்ய முடியாத கழிவுகள் புதன்கிழமைகளிலும் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். குப்பை சேகரிப்பு தினங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் உங்கள் பார்வைக்காக இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குப்பை அகற்றப்பட்டதா என்பதனை ஆராய்வதற்காக நாம் தெமட்டகொட, மிஹிந்துசெந்புர தொடர்மாடிக்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தோம். கொழும்பு மாநகர சபையினர் கூறியது போன்று குப்பைகள் அகற்றப்பட்டிருந்தன. இருப்பினும் ஆங்காங்கே மக்கள் தமது வீடுகளிற்கு அருகேயுள்ள இடங்களில் குப்பைகளை வீசியிருந்ததை அவதானிக்க முடிந்தது. அத்துடன் சில குப்பைகளிற்கு மக்கள் தீ மூட்டி இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
நாட்டின் பொறுப்பான பிரஜை என்ற வகையில், நம்முடைய நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் நாமும் நமது அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கொழும்பு மாநகர சபையின் திடகழிவு மேலாண்மை பிரிவினர் கூறியபடி அந்தந்த தினங்களில் குறிப்பிட்ட இடத்தில் கழிவுகளை முகாமை செய்து அகற்றினால் குப்பைகள் தேங்கி கிடப்பதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படாது இருப்பதுடன் மாநகர சபையினர் குப்பைகளை அகற்ற இலகுவாகவும் இருக்கும்.
கழிவுகள் சரியான நேரத்தில் சேகரிக்கப்படாமல் பல நாட்களாக தேங்கிக் கிடப்பதனை அவதானித்தால் உடனடியாக உரிய அதிகாரிக்கு தெரியப்படுத்தி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்போம். குப்பைகள் தேங்கிக் கிடப்பதனை தடுப்போம்.
Recent Comments