News

கொவிட் காலத்துக்குப் பின்னர் பஸ் சேவையின்றி முடங்கியுள்ள 70 வழித்தடங்கள்!

By In

க.பிரசன்னா

இலங்கையில் கொவிட் தொற்று காலப்பகுதிக்குப் பின்னர் வர்த்தகம் மற்றும் சேவைத்துறைகள் என்பன கடும் பாதிப்பினை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. அத்துடன் அதன் பின்னரான பொருளாதார    நெருக்கடிகளும் பல்வேறு சேவைகளை முடக்கியிருந்தது. கொவிட் காலப்பகுதியில் போக்குவரத்து சேவைகள் பல மாதங்களாக முடங்கியிருந்தது. இதன்போது பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டமையால் மீண்டும் அவற்றை சேவைக்கு உட்படுத்த முடியாத நிலை   ஏற்பட்டதால் பஸ் உரிமையாளர்கள் நஷ்டத்தை எதிர்கொண்டதாகவும் உதிரிப் பாகங்களின் விலைகள் அதிகரித்தமையால் பஸ்களை திருத்தப்   பணிகளுக்கு உட்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் பல பஸ்கள் பொதுப் போக்குவரத்து சேவையிலிருந்து விலகியமையால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக          2020 – 2023 ஆம்      ஆண்டு    காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட மற்றும் சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட தனியார் பயணிகள் பஸ் விபரங்கள் தொடர்பில் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் 6161 தனியார் பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் தனியார் 3679 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாகவும் அதிகார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் (செயல்பாடு) டபிள்யூ.எம்.ஐ.கே.விஜேரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மேல் மாகாணத்தில் 2482 தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையால் பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ள மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனைய போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளமையால் பொதுப் போக்குவரத்து மட்டுமே மக்களுக்கு உள்ள ஒரே ஆறுதலாக இருக்கும் நிலையில் பஸ்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமை பிரச்சினையை மேலும்  அதிகரித்துள்ளது. 70 வழித்தடங்களில் போக்குவரத்துச் சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 38 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு தகுதியற்றதாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றை மேம்படுத்துவதற்காக தற்காலிகமாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள பிரதான வழித்தடங்கள்

தற்போது      கொழும்பு மாவட்டத்தில் 119 பிரதான      வழித்தடங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரதான வழித்தடங்களில் 1420 பஸ்கள் பொதுப்  போக்குவரத்து      சேவையில்       ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் 1376 சாதாரண பஸ் சேவைகளும் 44 குளிரூட்டப்பட்ட பஸ் சேவைகளும் இடம்பெற்று வருகின்றன. இதில் வெள்ளம்பிட்டிய – கொள்ளுப்பிட்டி வரையான 140 ஆவது வழித்தடத்தில் எவ்வித பஸ் சேவைகளும் ஈடுபடுவதில்லை. 29 வழித்தடங்களில் தலா ஒரு பஸ் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றன. 13 வழித்தடங்களில் தலா இரண்டு பஸ்களும் ஆறு வழித்தடங்களில் தலா 3 பஸ்களும் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன.

அதிகமாக கொழும்பு கோட்டையிலிருந்து மஹரகம, கொட்டாவ, ஹோமாகம பகுதிகளுக்கு 138 ஆவது     வழித்தடத்தில் 153 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. அவற்றில் ஒரு குளிரூட்டப்பட்ட சேவையும் உள்ளடங்கும். கொழும்பு கோட்டை – பாணந்துறை 100 ஆவது வழித்தடத்தில் 36 பஸ்களும்,  கொழும்பு கோட்டை – மொரட்டுவை 101 ஆவது வழித்தடத்தில் 52 பஸ்களும், கொழும்பு கோட்டை – நாரஹேன்பிட்ட 103 ஆவது வழித்தடத்தில் 50 பஸ்களும், கொழும்பு கோட்டை – அவிசாவளை (புதிய பாதை) 122 ஆவது வழித்தடத்தில் 57 பஸ்களும்,  தெஹிவளை – பத்தரமுல்ல 163 ஆவது வழித்தடத்தில் 41 பஸ்களும், ஹெட்டியாவத்த – கரகம்பிட்டிய 176 ஆவது வழித்தடத்தில் 29 பஸ்களும், கொழும்பு கோட்டை – கொடகம 190 ஆவது வழித்தடத்தில் 43 பஸ்களும், கொள்ளுப்பிட்டி – கடுவலை 177 ஆவது வழித்தடத்தில் 44 பஸ்களும் (அவற்றில் 7 குளிரூட்டப்பட்ட சேவைகளும் உள்ளடங்கும்), பொரளை – கொட்டாவ 174 ஆவது வழித்தடத்தில் 35 பஸ்களும், கொழும்பு கோட்டை – பிலியந்தல 120 ஆவது வழித்தடத்தில் 35 பஸ்களும் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன. ஏனைய போக்குவரத்து வழித்தடங்களில் 30 க்கும் குறைவான பஸ்களே சேவையில் ஈடுபடுகின்றன. இதில் 68 வழித்தடங்களில் 10 க்கும் குறைவான பஸ்களே சேவையில் ஈடுபடுகின்றன.




கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள்

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிரதான 279 வழித்தடங்களில் 2192 பஸ்கள் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன. இவற்றில் 39 வழித்தடங்களில் குளிரூட்டப்பட்ட 320 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. எனினும் இங்குள்ள பெரும்பாலான வழித்தடங்களில் மிகவும் குறைந்தளவிலான பஸ்களே சேவையில் ஈடுபடுகின்றன. 107 வழித்தடங்களில் தலா ஒரு பஸ் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றன. 41 வழித்தடங்களில் தலா இரண்டு பஸ்களும் 13 வழித்தடங்களில் தலா 3 பஸ்களும் 15 வழித்தடங்களில் தலா 15 பஸ்களும் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகின்றன.

அதிகமாக பாணந்துறை – கொழும்பு 100 ஆவது வழித்தடத்தில் 84 பஸ்களும், ஹொரணை – கொழும்பு கோட்டை 120 ஆவது வழித்தடத்தில் 60 பஸ்களும், கடவத்த – கொழும்பு கோட்டை 138 ஆவது வழித்தடத்தில் 50 பஸ்களும், கிரிபத்கொட – அங்குலான  154 ஆவது வழித்தடத்தில் 61 பஸ்களும், நிட்டம்புவ – கிரிந்திவல, கிரிந்திவல – ஹங்வெல 182 ஆவது வழித்தடத்தில் 32 பஸ்களும், கொழும்பு கோட்டை – விமான நிலையம், கோட்டை – ஜாஎல 187 ஆவது வழித்தடத்தில் 83 பஸ்களும், கோட்டை – கம்பஹா 200 ஆவது வழித்தடத்தில்  40 பஸ்களும், கம்பஹா – ஜாஎல – நிட்டம்புவ 201 ஆவது வழித்தடத்தில் 41 பஸ்களும், கொழும்பு – நீர்கொழும்பு 240 ஆவது வழித்தடத்தில்  63 பஸ்களும், நீர்கொழும்பு – மீரிகம – திவுலுபிட்டிய 242 ஆவது வழித்தடத்தில் 29 பஸ்களும், கொழும்பு – அளுத்கம 400 ஆவது வழித்தடத்தில் 58 பஸ்களும் மதுகம – கோட்டை 430 வழித்தடத்தில் 99 பஸ்களும் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

முற்றாக பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ள வழித்தடங்கள்

2020 – 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேல்மாகாணத்தில் 70 வழித்தடங்களில் தனியார் பஸ் போக்குவரத்து சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவற்றில் 13 குளிரூட்டப்பட்ட பஸ்சேவைகளும் உள்ளடங்கும்.

கொவிட் காலத்துக்கு முன்னர் அதிகளவில் சேவைகளை வழங்கி வந்த பல்வேறு சேவைகள் இதனால் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் கொழும்பிலிருந்து செல்லும் 21 வழித்தடங்களில் பஸ் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கான மாற்று ஏற்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. கொட்டஹேன – மஹரகம 112 வழித்தடம், கொட்டஹேன – நுகேகொட 168 வழித்தடம், மட்டக்குளி – சொய்சாபுர 155 வழித்தடம், வெல்லம்பிட்டி – கொள்ளுப்பிட்டி 140 வழித்தடம் என்பன தற்போது முற்றாக செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை

இலங்கை போக்குவரத்துச் சபையில் 7209 பஸ்கள் பதிவு செயப்பட்டுள்ளதாகவும் தற்போது 5663 பஸ்கள் நாடு முழுவதும் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் (தொழில்துறை) தெரிவித்துள்ளார். இவற்றில் 2020 – 2023 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 1989 பஸ்கள் சேவையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும் 443 பஸ்கள் திருத்தப் பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாதளவு பொருளாதார ரீதியில் தடைகள் காணப்படுவதால் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பஸ் சேவைகள் நிறுத்தப்பட்ட வழித்தடங்கள் மற்றும் சேவையில் ஈடுபட்ட பஸ்கள் தொடர்பான விபரங்களை துல்லியமாக குறிப்பிட முடியாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் அனைத்தும் தினசரி ஒரே வழித்தடங்களில் பயணிப்பதில்லை. மக்களின் தேவை கருதி அவ்வப்போது தேவையான வழித்தடங்களுக்கு பஸ்கள் இணைக்கப்படுவதால் அவை தொடர்பான விபரங்கள் இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In
News

நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்பது எப்போது?

மொஹமட் ஆஷிக் – தேவையில் 30.86 சதவீதம் மட்டுமே உள்ளூர் உற்பத்தி – 43.34 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது -2023 இல் பாலுற்பத்தி96 இலட்சம்லீற்றர் குறைவு ஐக்கிய…

By In
News

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 422 பேர் இன்னும் ஓய்வூதியம் பெறுகின்றனர்

க.பிரசன்னா புதிய அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களுடைய வாக்குகளால்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *