தகவல்களை வெளியிடுமாறு தகவல் ஆணைக்குழு உத்தரவு
ஜனக்க சுரங்க
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் ஒரு முக்கிய துறையாக, இலங்கை காப்புறுதித் துறை காணப்படுகின்றது. இலங்கையில் கொவிட் தொற்றுநோய் பரவியிருந்த காலப்பகுதியில், அரசாங்கம் இதனை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதை அறிவோம். காப்பீட்டு நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை பொது காப்பீட்டு நிறுவனங்களாகவும் நீண்ட கால காப்பீட்டு நிறுவனங்களாகவும் செயற்படுகின்றன. நாட்டில் சுமார் 28 காப்புறுதி நிறுவனங்கள் காப்பீட்டு சேவைகளை வழங்குகின்றன. இந்த சேவைகள் வாகனம், சொத்து, பொருட்கள், பணம், உடல்நலம் மற்றும் உயிர் பாதுகாப்பு போன்ற நுகர்வோரின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
எமது நாட்டில், 45,000 இற்கும் அதிகமாக காப்புறுதி உத்தியோகத்தர்கள், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானோருக்கு சேவைகளை வழங்குகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த தொழில்துறையை ஒழுங்குறுத்துவதற்காக, நிதியமைச்சின் கீழ் இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. எனினும், ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தக் காப்புறுதி துறையுடன் இணைக்கப்பட்ட சந்தையானது, பொதுமக்கள் நலன்சார்ந்து அல்லது வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. வர்த்தகக் காப்புறுதித் துறையில் சுமார் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமாக, 28 இற்கும் மேற்பட்ட போட்டித்தன்மை வாய்ந்த காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய தரகர் நிறுவனங்களைக் கொண்டிருந்தாலும், மொத்த மக்கள் தொகையில் அரைவாசிப் பேருக்குக்கூட சேவைகளை வழங்க முடியவில்லை என்பது தெளிவாகிறது. நுகர்வோர் கோரிக்கைகள், இழப்பீடுகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் சேவைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளிலும் அநீதி இழைக்கப்படும் சந்தர்ப்பங்களிலும் காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலையிட்டாலும், இந்த தலையீட்டை பொதுமக்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. வெளிப்படைத்தன்மையற்ற நிலையே இதற்குக் காரணமாகும். ஆகவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக, இது குறித்து தகவல் கோர தீர்மானித்தோம்.
ஒவ்வொரு ஆயுள் காப்புறுதி நிறுவனத்திற்கும் எதிராக பொதுமக்கள் முன்வைத்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அந்த தகவல்களை கோரியிருந்தோம். எனினும், அந்த தகவலை வழங்க காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மறுத்துவிட்டது என்பதை விசேடமாக குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு காப்புறுதி நிறுவனமும் தனித்தனியாக பெற்றுக்கொண்ட அத்தகைய முறைப்பாடுகளின் விவரங்களை வழங்குவதற்கான கோரிக்கை பொது அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. இந்தத் தகவலைப் பகிர்வது, போட்டிச் சூழலில் செயற்படும் காப்புறுதி நிறுவனங்களுக்குத் தமது தொழிலை மேற்கொள்வதற்கு பாரிய பிரச்சினையாகக் காணப்படும் என அவர்கள் தெரிவித்தனர். விசாரணையின் போது காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதிகாரிகள் இது தொடர்பான வேறு சில உண்மைகளையும் குறிப்பிட்டுள்ளனர். எனினும், காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தகவல்களைத் தடுத்து நிறுத்தியதற்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏற்க முடியாது என, சமீபத்தில் வெளியிடப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் இறுதித் தீர்ப்பில் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு குறிப்பிட்டது.
ஆரம்பத்திலிருந்தே, காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்பாமல் தயக்கம் காட்டியது. பொதுமக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமை இருந்தபோதிலும், தகவல் வெளியிடுவது தொடர்பாக காப்புறுதி நிறுவனங்களின் கருத்து குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேன்முறையீட்டை ஆய்வு செய்த ஆரம்ப கட்டங்களில், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டிய வருடாந்த மற்றும் இரண்டாண்டு அறிக்கைகளை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சமர்ப்பிக்கவில்லை என்பதை ஆணைக்குழு கண்டறிந்தது. மேன்முறையீட்டு விசாரணையின் போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க, எதிர்காலத்தில் அறிக்கைகளை முறையாகச் சமர்ப்பிக்க பொது அதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதனால், தகவல்களை கோரிய காலம் முதல், தகவல்களை வெளியிடுவதற்கான தீர்ப்பு வெளியாகும் காலம் வரை, ஒரு வருடத்திற்கும் மேலான காலம் வீணாக்கப்பட்டது. அதிகாரிகள் தகவல்களை வெளியிடும் போது, மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மேன்முறையீட்டின் போது தெளிவுபடுத்தப்பட்டது. மாறாக, தனிப்பட்ட காரணங்களையோ, தனியார் நிறுவனங்களின் இலாப இலக்குகளையோ, ஏனைய தரப்பினரின் நல்லெண்ணத்தையோ அல்ல என குறிப்பிடப்பட்டது. இந்த தீர்மானம், மக்களுக்கு கிடைத்த உண்மையான வெற்றியாகும். இதன்மூலம், காப்புறுதி நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தெளிவாகவும், வெளிப்படையாகவும் பார்க்கும் வாய்ப்பு, முதன்முறையாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Recent Comments