பகல் நேரத்தில் தெரு விளக்குகளை ஒளிர விடுதல் பல்வேறு இடங்களில் தோன்றும் ஒரு சம்பவமாக மாறியுள்ளதுடன், எரிசக்தி சேமிப்பு தேவையுள்ள இந்த காலங்களில் இதைப்பற்றிய கேள்வி எழுப்பல் கட்டாயம் தேவைப்படுகிறது. இது போன்ற விளக்குகள், சூரிய ஒளியால் மங்கிய வடிவிலுள்ள வெளிச்சத்துடன், கொட்டாஞ்சேனை, நாரஹேன்பிட்ட மற்றும் கொழும்பின் பிற இடங்களில் வெவ்வேறு தெருக்களில் காணப்பட்டுள்ளன.
இத்தகைய விளக்குகள் கொழும்பு 5 இல் உள்ள கிருல வீதி, அத்துடன் கொட்டாஞ்சேனை வீதி மற்றும் கொழும்பு 13 இல் உள்ள குணானந்த மாவத்தை மற்றும் கொழும்பு 10 பகுதியின் சாலைகளில் காலை, பிற்பகல் மற்றும் மாலையின் ஆரம்ப நேரங்களில் ஒளிரும் நிலையில் காணப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக பொது வசதிகளை இவ்வாறான தேவையற்ற முறையில் பயன்படுத்துவது அவதானிக்கப்பட்டது. எனவே இந்த விடயம் தொடர்பாக நகரத்தில், குறிப்பாக கொட்டாஞ்சேனையில், தெரு விளக்குகளின் பயன்பாடு தினசரி அடிப்படையில் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியும் பொருட்டு கொழும்பு மாநகர சபைக்கு தகவல் அறியும் உரிமை (RTI) விண்ணப்பம் அனுப்பப்பட்டது.
ஒவ்வொரு மாலையிலும் காலையிலும் கொட்டாஞ்சேனையில் உள்ள தெரு விளக்குகளை ஏற்றி அணைக்கும் பொறுப்புடைய ஒரு நபர் இருப்பதாக கொழும்பு மாநகர சபை தகவல் வழங்கியது. இந்த விளக்குகளை ஏற்றும் தினசரி நேரம் மாலை 5.30 தொடக்கம் இரவு 7 மணி ஆகும். அதைத் தொடர்ந்து, மறுநாள் காலை அவற்றை அணைக்கும் பணி அதிகாலை 5.30 மணி முதல் காலை 7 மணி வரை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
கொழும்பு மாநகர சபையின்படி, இந்த தெரு விளக்குகள் சில தானாகவே ஏற்றப்பட்டு அணைக்கப்படும் தானியங்கி விளக்குகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஜூலை 2012 தொழில்நுட்ப உதவி ஆலோசகரின் அறிக்கையின்படி, இலங்கையில் பெரும்பாலான தெரு விளக்குகள் டேலைட் சென்சர்கள் (daylight sensors) அல்லது கைமுறையாக கட்டுப்படுத்தப்பட்ட சுவிட்சுகள் வழியாக தனித்தனியாக கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு முறைகளும் வெவ்வேறு காரணங்களுக்காக நம்பகமானவை இல்லை என்றும் பின்வருமாறு இவ்வறிக்கை குறிப்பிடுகிறது:
“புகைப்பட சென்சர்கள் (photo sensors) சரியாக இயங்குவதற்கு இடையிடையே சுத்தம் செய்தல் மற்றும் சரிப்படுத்தல் (tuning) தேவைப்படுகிறது. இருப்பினும், அவற்றின் பராமரிப்பின் பற்றாக்குறை மற்றும் அவற்றின் கால முடிவின் (end of life) காரணமாக அதிக எண்ணிக்கையிலான தெரு விளக்குகள் தேவையானதை விட நீண்ட நேரம் எரிய வைக்கப்படுகின்றன அல்லது தொடர்ச்சியாக எரிய அல்லது அணைத்து வைக்கப்படுகின்றன. உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் அல்லது தன்னார்வலர்களால் இயக்கப்படும் கைமுறையாக கட்டுப்படுத்தப்படும் விளக்குகள் பொதுவாக தேவையான நேரத்திற்கு முன்னர் ஏற்றப்பட்டு தேவையான நேரத்திற்கு பின்னர் தாமதித்து அணைக்கப்படுகின்றன.”
[மூலம்: https://www.adb.org/sites/default/files/project-document/75419/39419-013-sri-tacr.pdf]
கடந்த சில ஆண்டுகளில் பொது வெளிப்புற ஒளியூட்டு அமைப்பில் (public outdoor lighting system) மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், சமீபத்திய மாதங்களில் தான் நகரின் வீதிகளில் சில விளக்குகள் ஒவ்வொரு நாளும் நாள் முழுவதும் ஒளிருகின்றது.
இயற்கை வளங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் விளைவாக ஏற்படும் சூழல் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதில் தேவையற்ற மின்சார பயன்பாட்டை நிறுத்துவது இன்றியமையாதது என்பதால் இது நிச்சயமாக ஒரு கவனிக்கத்தக்க விடயமாகும்.
Recent Comments