தனுஷ்க சில்வா
டிசம்பர் 14, 2023 அன்று, இலங்கையின் உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமைகள் விண்ணப்ப இல. 107/2011 இல் அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் உட்பட ஐந்து உயர் பொலிஸ் அதிகாரிகள் ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக பொறுப்புக்கூற வேண்டும் என்ற ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. மனுதாரருக்கு ஒவ்வொரு அதிகாரியிடமிருந்தும் 500,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை உள்ளடக்கிய இந்தத் தீர்ப்பு, இலங்கை பொலிஸ்துறைக்குள் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை சுட்டிக் காட்டுகிறது.
இந்த வழக்கானது 2011 ஆம் ஆண்டு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தனது அடிப்படை உரிமைகள் கடுமையாக மீறப்பட்டதாகக் கூறி ரஞ்சித் சுமங்கலவினால் தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது சுமங்கலாவை சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை, தடுத்து வைத்தல் மற்றும் சித்திரவதை செய்தமைக்கு தென்னகோன் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முடிவு இலங்கையில் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் கைகளில் மனித உரிமை மீறல்களின் பரந்த பிரச்சினை மற்றும் வினைத்திறனான மேற்பார்வை மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு (NPC) உத்தரவிடப்பட்டது. எவ்வாறாயினும், சமீபத்திய முன்னேற்றங்கள் NPCயிடமிருந்து பதிலளிப்பிலுள்ள பற்றாக்குறையை வெளிப்படுத்துகின்றன.
மார்ச் 2024 இல், இந்த ஆசிரியரால் NPC க்கு RTI (தகவல் அறியும் உரிமை) கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன், குறிப்பாக மூன்று வினாக்களுக்கான விளக்கம் கோரப்பட்டது:
- மீறல் பற்றிய விழிப்புணர்வு: அடிப்படை உரிமைகள் தொடர்பான விண்ணப்பத்தில் 5வது பிரதிவாதியான தற்போதைய பொலிஸ் மா அதிபர், சித்திரவதையில் இருந்து விடுபடுவதற்கான சுதந்திரம் தொடர்பான இலங்கை அரசியலமைப்பின் 11வது உறுப்புரையை மீறியதாகக் கண்டறியப்பட்டதை NPC அறிந்திருந்ததா.
- ஒழுக்காற்று நடவடிக்கைகள்: IGP மற்றும் சம்பந்தப்பட்ட மற்றைய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து NPC அறிந்திருந்ததா.
- எடுக்கப்பட்ட நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து IGPக்கு எதிராக NPC ஏதேனும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்ததா, அவ்வாறாயின், அத்தகைய நடவடிக்கைகளின் தன்மை, நேரம் மற்றும் சட்ட அடிப்படைகள் பற்றிய விவரங்கள்.
RTI கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, NPC இன் தகவல் அலுவலர் பற்றுச்சீட்டை ஏற்றுக்கொண்டதுடன் கோரிக்கையை 14 நாட்களுக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவை மீறி, பொலிஸ்மா அதிபர் அல்லது சம்பந்தப்பட்ட மற்றைய அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அடுத்தடுத்த விசாரணைகளில் தெரியவந்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி NPC செயற்படத் தவறியமை பல முக்கியமான பிரச்சினைகளை எழுப்புகிறது. முதலாவதாக, ஒழுக்காற்று நடவடிக்கை இல்லாமை சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் மற்றும் நிவர்த்தி செய்வதற்கான பொறுப்புக்கூறல் வழிமுறைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. IGP போன்ற உயர்மட்ட அதிகாரிகள் தீவிரமான தவறான நடத்தையில் சிக்கியிருக்கும் போது, NPC போன்ற நிறுவன அமைப்புகளுக்கு பொலிஸ்துறையில் பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்காக பொறுப்புக்கூறலை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
இரண்டாவதாக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டவிரோதமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தப்படும் நபர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதிலும் குறிப்பிடத்தக்க படிநிலையாகும். NPC இன் செயற்பாடற்ற தன்மை, முறைப்படுத்தப்பட்ட சிக்கல்களைத் தீர்க்கத் தவறியதன் மூலமும், குற்றவாளிகள் தகுந்த விளைவுகளை எதிர்கொள்வதைத் தடுப்பதன் மூலமும் இந்தப் பாதுகாப்புகளை பாதிப்புக்குள்ளாக்குகின்றது.
மூன்றாவதாக, NPC போன்ற மேற்பார்வை அமைப்புகளின் வினைத்திறன் நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கு ஒருங்கிணைந்ததாகும். அத்தகைய அமைப்புகள் நீதித்துறை உத்தரவுகளின்படி செயற்படத் தவறினால், அது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்டத் தரநிலைகளைச் செயற்படுத்துவதற்குமான அமைப்பின் திறன் மீதான நம்பிக்கையை சிதைக்கிறது.
இந்த தீர்ப்பானது இலங்கையின் சட்ட அமைப்புக்கு ஓர் முக்கிய தருணமாக இருந்ததுடன், சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்குள் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் வினைத்திறனான பொறிமுறைகளின் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது. நீதிமன்றத்தின் உத்தரவு பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு (NPC) அவசியமானது. NPC, பொலிஸ்துறையின் நடத்தையை மேற்பார்வையிடுவதற்கும், சட்ட மற்றும் நெறிமுறை தரநிலைகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்குமான ஓர் சுயாதீன அமைப்பாக நிறுவப்பட்டதுடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்ட அமுலாக்கத்தில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும், மனித உரிமைகளை மீறும் அதிகாரிகள் தவறான நடத்தைக்கு பொறுப்புக்கூறுவதை உறுதி செய்வதற்கும் இந்த மேற்பார்வை வகிபாகம் முக்கியமானதாகும்.
அப்போதைய பொலிஸ்மா அதிபர் உட்பட உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கையின் மனித உரிமை பரப்பில் ஓர் குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் NPC செயற்படத் தவறியமை, பொலிஸ் படைக்குள் பொறுப்புக்கூறல் மற்றும் மேற்பார்வை தொடர்பான கடுமையான கரிசனங்களை எழுப்பியுள்ளது. நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், NPC இந்தப் பிரச்சினைகளை உடனடியாகவும் வினைத்திறனாகவும் தீர்க்க வேண்டியது அவசியமாகும். கண்காணிப்பு பொறிமுறைகளை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் நீதித்துறை உத்தரவுகளுக்கு இணங்குவதை உறுதி செய்தல் ஆகியவை நீதித்துறையில் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இன்றியமையாத படிநிலைகளாகும்.
Recent Comments