News

இளைஞர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்காத துறைசார் மேற்பார்வைக்குழுக்கள்

By In

க. பிரசன்னா

பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தொடர்பில் கேள்வியெழுந்துள்ளது.

பாராளுமன்றத்தில் சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களது பங்கேற்புடன் 17 துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2022.10.05 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் இந்த குழுக்களினால் நடாத்தப்படும் ஒவ்வொரு விசாரணை தொடர்பிலும் குழுக்களிற்கு உதவியளிப்பதற்காக குழுவொன்றின் தவிசாளருக்கு ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை அழைப்பதற்கு முடியும் என்பதால், ஒவ்வொரு குழுவுக்கும் இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்கும் நடவடிக்கையை பாராளுமன்றம் முன்னெடுத்தது.

தவிசாளரின் அனுமதியுடன், அவ்வாறு அழைக்கப்பட்ட இளைஞர் பிரதிநிதிகள், சாட்சிகளிடம் இருந்து கேள்விகளைக் கேட்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்பதோடு மற்றும் குழுவின் முன் ஆவணங்களைப் பரிசீலிக்கலாம். (எவ்வாறாயினும், அந்த இளைஞர் பிரதிநிதிகள் குழுவில் வாக்களிக்க மாட்டார்கள்) குழு தீர்மானிக்கின்றவாறான எந்தவொரு தீர்மானத்திற்கும் உட்பட்டு, அறிக்கைக்கான அநுபந்தம் ஒன்றாக குழுவின் அறிக்கையில் இளைஞர் பிரதிநிதிகளின் கருத்துகள், அவதானிப்புகள் மற்றும் அபிப்பிராயங்கள் உள்ளடக்கப்படுவதற்கு தவிசாளர் அனுமதியளிக்கலாம். இதன்மூலம் அரசாங்கத்தின் தேசிய கருத்திட்டத்துக்கு இளைஞர் பிரதிநிதிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படும் நிலை உருவானது.

மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, தேசிய பாதுகாப்பு  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகிய 17 குழுக்களுக்கு இளைஞர்களை இணைப்பதற்கான செயற்றிட்டம் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய வகையில் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பங்குபற்றுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லையெனவும் தொடர்ச்சியாக ஒரு குழுவினர் மாத்திரமே குழு கூட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் துறைசார் குழுக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்; குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். 

இதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக இலங்கை பாராளுமன்றத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 397 விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு விபரங்கள் புலனாய்வாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதும் இதுவரை அத்தகைய இளைஞர்கள் பல்துறைசார் மேற்பார்வைக்குழு கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடு அபிவிருத்தி செயற்றிட்டத்தின் உதவியுடன் இதன் அங்குரார்ப்பண நிகழ்வு பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஹெட்ஜில் 13.05.2023 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. துறைசார் மேற்பார்வைக்குழுக்களுக்கு 565 இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 535 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 30 விண்ணப்பங்கள் பத்திரிகை விளம்பரத்துடன் தொடர்புபடாமையால் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 535 பிரதிநிதிகளில் 397 விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு விபரங்கள் அவர்கள் வசிக்கும் மற்றும் தொழில்புரியும் பொலிஸ் பிரிவுகளில் இருந்து புலனாய்வாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டன. பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுக்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை தவிர்ந்து இளைஞர் பிரதிநிதிகளும் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அத்திட்டத்தை அடைவதில் இலங்கை பாராளுமன்றமும் இலங்கை ஜனாதிபதியும் தோல்வியடைந்துள்ளனர்.

நாட்டிலுள்ள பல பகுதிகளிலிருந்து இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களை கொழும்புக்கு அழைத்து நிகழ்வுகளை நடத்தியிருந்தாலும் பிரதிநிதிகள் பங்குபற்றுவதற்காக எந்த கொடுப்பனவுகளோ அல்லது சலுகைகள் எவையும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. சகல செலவுகளையும் நேரத்தையும் வீணடித்தே குழுக்கூட்டங்களில் பங்குபற்றும் நிலை உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் பாராளுமன்ற அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த அல்லது அரசியல் செல்வாக்குப் பெற்ற ஒரு சிலர் மாத்திரமே குழுக்கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

கடந்த ஒரு வருடங்களில் 14 துறைசார் மேற்பார்வைக்குழுக்களின் கூட்டங்களுக்கு மாத்திரமே இளைஞர் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவை இளைஞர் பிரதிநிதிகளை குழுக் கூட்டங்களுக்கு அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏனைய 14 துறைசார் மேற்பார்வைக்குழுக்களின் கூட்டங்களுக்கு 358 பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இவர்களில் 262 பேரே பங்குபற்றியுள்ளனர். ஒரு தடவை கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டவர்களே மீண்டும் மீண்டும் அழைக்கப்படும் சந்தர்ப்பங்களும் பதிவாகியிருந்தது. நாடு முழுவதுமுள்ள இளைஞர்கள் இதற்கு தெரிவு செய்யப்பட்டாலும் குழுக்கூட்டங்களில் பங்கேற்பதற்கான எந்த கொடுப்பனவுகளும் இவர்களால் வழங்கப்படுவதில்லை. இதனால் பலர் தங்களுக்கான அழைப்புகளை நிராகரித்திருந்தனர்.

அதிகமாக சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவற்றுக்கு மாத்திரம் அதிகமான பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். ஏனைய குழுக் கூட்டங்களுக்கு மிகக்குறைந்தளவிலான அழைப்புகளே வழங்கப்பட்டுள்ளன.

அத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 177 பிரதிநிதிகள்; ஒருபோதும் குழுக்கூட்டங்களுக்கு அழைக்கப்படாத சந்தர்ப்பங்கள் காணப்படுவதுடன் 96 பேர் குழுக்கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டும் பங்குபற்றியிருக்கவில்லை. பெரும்பாலும் ஒவ்வொரு குழுக்கூட்டங்களுக்கும் 5 பிரதிநிதிகள் அழைக்கப்படுவர். அவர்களை துறைசார் மேற்பார்வைக்குழுக்களே தெரிவு செய்யும். இதனால் கடந்த ஒரு வருடங்களாக பல துறைசார் மேற்பார்வைக்குழுக்கள் முறையாக செயற்படவில்லை என்பதையும் அறியமுடிந்தது.

உலகில் முதன்முறையாக இளைஞர், யுவதிகளை பாராளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கு நேரடியாக இணைத்துக்கொள்ளும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நாட்டையும் உலகையும் ஏமாற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்டதாகவே தெரிகின்றது. இத்திட்டத்துக்காக பல மில்லியன் ரூபா நிதி மற்றும் மனிதவலு பயன்படுத்தப்பட்ட போதும் அவை பிரயோசனமற்றவையாக அமைந்துள்ளதுடன் செலவிடப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் பாராளுமன்றத்தில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த குழுக்கூட்டங்களுக்கு விண்ணப்பித்த இளைஞர் பிரதிநிதிகளின் தனிப்பட்ட விபரங்கள் இலங்கை பாராளுமன்றத்தால் வெளியிடப்பட்டமையால், அந்த விபரங்களை பெற்றுக்கொண்டு தனிப்பட்ட நபர்கள் தங்களுக்கென வட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் நிதி சேகரிப்பு நடவடிக்கையையும் முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப்படும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் புதிய பாராளுமன்றத்தில் புதிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் நிலை உருவாகும். இதனால் புதிதாக இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டி ஏற்படும். இதனால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களுடைய வாய்ப்புகளை இழக்கலாம். 

News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In
News

நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்பது எப்போது?

மொஹமட் ஆஷிக் – தேவையில் 30.86 சதவீதம் மட்டுமே உள்ளூர் உற்பத்தி – 43.34 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது -2023 இல் பாலுற்பத்தி96 இலட்சம்லீற்றர் குறைவு ஐக்கிய…

By In
News

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 422 பேர் இன்னும் ஓய்வூதியம் பெறுகின்றனர்

க.பிரசன்னா புதிய அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களுடைய வாக்குகளால்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *