News

இந்திய இழுவை மடி படகுகளால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம்

By In

க.பிரசன்னா

பல தசாப்தங்கள் நீடிக்கும் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையானது, இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளில் அவ்வப்போது நெருக்கடிகளைத் தோற்றுவித்து வருகின்றது. மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் இரு அரசாங்கங்களின் உயர்மட்ட கலந்துரையாடலுக்கு வலியுறுத்தப்படுகின்ற போதும், இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் அதனை தேசிய பிரச்சினையாக கருதவில்லை என்றே தோன்றுகிறது.

குறிப்பாக இலங்கையில் வட பகுதி மீனவர்களும் இந்தியாவின் தென் பகுதி மீனவர்களுமே (தமிழ்நாடு) இப்பிரச்சினையில் முரண்படும் நிலை காணப்படுவதால், கைதுகளும் தாக்குதல் நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றதே தவிர நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் முன்வராத நிலையே காணப்படுகின்றது.

அரசாங்கத்தின் தகவல்களின் அடிப்படையில் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையால் இரு தரப்பிலும் சொத்துக்கள் மற்றும் உயிர் சேதங்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்தியாவின் இழுவைமடி படகுகளால் (Indian Trawler) 2025 மார்ச் மாதம் வரையில், 1763 இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 கோடிக்கும் அதிகமான சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகள் இலங்கையின் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தை செலுத்துமென்பதால் இருநாட்டு அரசாங்கங்களும் மீனவர் பிரச்சினையில் தீர்வை பெறுவது அவசியமாகின்றது.

பின்வரும் விடயங்களின் மூலம் இலங்கை – இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சொத்து சேதங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை அறிந்து கொள்ளலாம்.

பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள்

சட்டவிரோத மீன்பிடி முறையினால் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை வேறு பரிணாமத்துக்குள் நகர்ந்துள்ளது. இந்திய மீனவர்கள் கடலடியில் இழு வலை மடியை பயன்படுத்தி (கடலடியில் வாரிச் செல்லும் பை போன்ற மிகப்பெரிய வலை) மீன் பிடிக்கின்றனர். இதனால் கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மீனவர்களை நேரடியாக பாதிக்கிறது. இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பகுதியில் இழுவலை மடியை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இலங்கை மீனவர்களின் வலைகள் சேதமடைவதுடன், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 2024 டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்தியாவின் இழுவைமடி படகுகளால் 1676 இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21.71 கோடிக்கும் அதிகமான சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடத்தில் மார்ச் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், சுளிபுரம், ஊர்காவற்துறை மற்றும் வேலனை மேற்கு மீனவப் பிரிவுகளைச் சேர்ந்த 87 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 62.92 இலட்சம் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த சில வருடங்களில் மாத்திரம், இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய இழுவைமடி படகுகளால் 1763 இலங்கை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 கோடிக்கும் அதிகமான சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை போலவே, இந்திய கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்களும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2018 – 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 230 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

2015 – 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான 70 படகுகள் இந்திய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 33 படகுகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 47 படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

மீன்பிடி கப்பலில் போதைப்பொருள் மற்றும் மஞ்சள் கடத்தல்

இலங்கை அல்லது இந்திய கடற்பரப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இருநாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது, இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையில் முக்கிய விடயமாக பார்க்கப்பட்டாலும் மீன்பிடி தொழிலை பயன்படுத்தி போதைப்பொருள் மற்றும் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டதாக இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகின்றது.

23.10.2023 – OFRP-A-5512-PTM/ OFRP-A-5895-PTM/ OFRP-A-7706-PTM/ OFRP-A-8021-PTM  ஆகிய மீன்பிடி கப்பல்களில் மஞ்சள் கடத்தல் மற்றும் பீச் டிம்மர் பயன்படுத்தியமைக்காக நான்கு கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன், எட்டு மீனவர்கள் தமிழ்நாடு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

30.01.2017 – IMUL-A-0381-NBO Sithuli மீன்பிடி கப்பலில் போதைப்பொருள் கடத்தியமைக்காக கப்பல் பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன், நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

23.03.2021 – IMUL-A-0040-TLE Ravi Hansi மீன்பிடி கப்பலில் போதைப்பொருள் கடத்தியமைக்காக கப்பல் பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன், ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

19.04.2021 – IMUL-A-0546-CHW Dushasila மீன்பிடி கப்பலில் போதைப்பொருள் கடத்தியமைக்காக கப்பல் பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன், ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய ஏழு மீன்பிடி கப்பல்களும் பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவை தவிர்த்து வேறு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள்

இந்தியாவைத் தவிர்த்து வேறு நாடுகளிலும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

2019 – 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 320 இலங்கை மீனவர்கள் மாலைதீவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

2017 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 169 இலங்கை மீனவர்கள் சிசெல்ஸ் தீவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2018 – 2025 ஆம் ஆண்டுகளில் 324 இலங்கை மீனவர்கள் ரீயூனியன் தீவுகளில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2019 – 2025 ஆம் ஆண்டுகளில் 44 இலங்கை மீனவர்கள் மியன்மாரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமை தொடர்பில் கடந்த 5 வருடங்களில் 1385 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 190 மீன்பிடி படகுகளும் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2020 – 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட 1385 இந்திய மீனவர்களில், 1102 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 94 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 189 பேர் தண்டனைக்காக சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 190 மீனவப் படகுகளில் 18 படகுகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் 90 படகுகள் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், 82 படகுகள் தொடர்பான விசாரணைகள் இன்னும் இடம்பெற்று வருகின்றன. 

2022 ஆம் ஆண்டில் வழக்கு நடவடிக்கைகள் முடிவடைந்து அரசுடமையாக்கப்பட்ட 150 மீன்பிடி படகுகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 61.01 இலட்சம் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பகுதியில் இழுவலை மடியை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இலங்கை மீனவர்களின் வலைகள் சேதம் அடைகின்றன. இது வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதோடு இரு நாட்டு மீனவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது.

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் இருப்பதே இந்நிலைமைக்கு காரணமாகும். இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் காரணமாக இருநாட்டு மீனவர்களின் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாரிய இழப்பு ஏற்படுவதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது. இதனால் இரு நாட்டு இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

News

2022 கலவரம்: பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீடுகளுக்கு 50 மில்லியன் ரூபா மேலதிக நிதி விடுவிப்பு?

க.பிரசன்னா உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்ததுமான காலி முகத்திடல் (அரகலய) போராட்டம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும், அதனைச் சுற்றிய…

By In
News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *